என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, November 9, 2008

மேகங்களே! ஓ மேகங்களே!

மேகங்களே! ஓ மேகங்களே!
மெல்ல மெல்ல மிதந்து
செல்லும் வானத்து நுரைகளே
செல்லமாக தவழ்ந்து போகும்
நிலையாமையின் தத்துவங்களே!

நித்திரையின்றிச் செல்லும்
நீர் நிரப்பிகளே!
சொல்வீர்களா எங்கிருந்து
வருகிறீர்கள் என்று?

நீ பிறந்த தேசமெதுவோ?
நினக்கு இனம், மொழி
தடையல்லவோ?

தண்ணீர் தரமறுக்கும்
மனிதன்கண்ணில் மண்தூவி
வந்தனையோ சமத்துவத்தை
வாழ வைக்க?
வாழி நீ!

காடு மலைகளையும்
எல்லைக் கோடுகளையும்
தாண்டி வரும் ஆவிகளே!
மன்னிப்பாய்
உன் பிறந்த இடம் தெரியாது
நீ விழுந்த இடத்தில் நின்று கொண்டு
எனது எனது என
மார்தட்டும் பாவிகளை!

உலகத்துப் பொருட்கள் யாவும்
உன்னுள் காட்டுகின்றாய்
உடனே அவைகளை மாற்றுகின்றாய்
உயிர்களைப் பேணுகின்றாய்
கோபத்தால் அழிக்கின்றாய்
கடவுளரோ நீங்கள்?

தவழ்ந்த தடமெதுவும்
பதியாது போகிறீர்களே,
முதலிரவு அறைக்குள்
அன்னநடை போடும்
நங்கையரோ நீங்கள்?
அல்லது பொருளைத்
திருடும் கள்வர்களோ நீங்கள்?

தூது சொல்லி அனுப்பியதாரோ
நீங்கள் சுமக்கும் சேதியெதுவோ?

மனமிருந்தால் உயர்வாயென்றும்
தலைகனத்தால் வீழ்வாயென்றும்
தத்துவம் சொல்லும்
மாமேதைகள் நீங்கள்!

மனம் வெளுத்தால் வான்புகழுண்டென்றும்
தீநெறி கருத்தால் தாழ்வாயென்றும்
உண்மைகள் சொல்லும்
உயர்ந்தோர்கள் நீங்கள்!

எடுப்போம் எங்கிருந்தும்
கொடுப்போம் சமமாயென
கம்யூனிஸம் பேசும்
காரல்மார்க்ஸுகள் நீங்கள்!

மேகவுடல் நீத்து
வன்கடல் புகுந்து
மீண்டும் மேகமாவதால்
ஆன்மாவின் தத்துவத்தை
அறிவிக்கிறீர்கள் நீங்கள்!

வானம் நிரப்பும் மேகங்களே
வாருங்கள் கூக்குரலிட்டு
சேருங்கள் சேதி சொல்லுங்கள்
நிரப்புங்கள் மனித மனப்பள்ளங்களை!

Friday, November 7, 2008

காதல், கானகம் - பகுதி 28

எங்கே
உங்களது நண்பர்கள்?
என்றாள்.

பத்து நிமிடம்
நடந்தால் அவர்கள்
குடில்.

காட்டிலாக்காவிற்கு
கடுமையாக உழைப்பவர்கள்.
இயற்கை மருத்துவத்தை
ஆராய்ச்சி செய்யும்
மருத்துவர் ஒருவரது
சீடர்களும் இப்பொழுது.

எங்கும் தோழர்கள் என்று
எனக்கு யாருமில்லை
நான் தாமரை போல்
நட்பென்னும் தண்ணீரில்
நனையாதே வளர்ந்தேன்.

தாமரை இலைகள்தான்
தண்ணீரில் ஒட்டுவதில்லை
வேர்கள் தண்ணீரிலே
விளையாடிக் கொண்டுதான் இருக்கும்.

தோழமைதான் சமுதாயம்
தெரிந்து கொள்வதற்கான கருவி.
விதவிதமான மனிதர்களிடம்
விளம்ப வேண்டும்
கேள்வி ஞானத்தின்
வேள்வி அதுவே.

சர்ச்சைகளும்
சண்டைகளும்
சமாதானங்களும்
சமமாகக் கொண்டது.

நட்புக்குள் இருக்கும்
முரண்பாட்டைக் களைய
முடிச்சுகளாய்ப் போடப்படும்
அன்பும், விட்டுக் கொடுத்தலும்
ஆரோக்கியமாக்கி விடும் நட்பை.
உளிகளின் அடிகள் சிலைக்கு
வலிகள் அல்ல!

பிரிகின்ற இல்லறங்களை விட
பிரிகின்ற நட்புகள் நிச்சயம்
குறைவாகத்தான் இருக்கும்.

எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத
எந்த உறவுகளும் பிரிவதில்லை

அய்யா,
வாங்க சாமி - உடன்
வந்திருப்பது வீட்டம்மாங்களா?
என்று அன்புடன்
எதிர்கொண்டது,
காதலின் நண்பர்கள்.

எத்தனை முறை
எடுத்துரைத்தாலும்
"அய்யா" என
அழைக்கும் பழக்கத்தை
அறுக்காதவர்கள்.

இவன் இம்ரான்
அவன் ஆரோக்கிய சாமி
எனது தோழர்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, November 6, 2008

உயிர்த்தெழு ஒவ்வொருமுறையும் - செதுக்கப்பட்ட மறுபிரசுரம்

காதலின் தோல்விதனில்
தன்னையிழந்து தவிக்கும் தருணம்
உன் பூக்களும் இலைகளும்
உதிர்க்கப்பட்டிருக்கலாம்
குளிரின் குரூரத்தால்.
காற்று பிரிந்த கூடு
தன்மையாய் போவதியல்புதான்.

இருக்கட்டுமே நீ
இருப்பது அண்டார்டிகா
அல்லவே அசோகவனம்தான்,
அற்பமாய் உதிர்ந்த இலைகள்
எடுத்து உன் வேருக்கு
எருவாய் இட்டுக் கொள்
உயிர்த்தெழுவாய் பிறிதொருமுறை.

அன்பாய், நட்பாய்,
ஆதரவாய், தாங்குதலாய்,
ஏன்? மீண்டும் காதலாகக்கூட
திரிந்து பரவட்டுமுன்
உடைந்து போன காதல் மனம்,
உன் இலைகளும் பூக்களும்
மறுபடி பிறந்தெழுந்து
மணம் வீசட்டும் பாரெங்கும்.

காதல், கானகம் - பகுதி 27

பயத்தினில் இரு வகை
உயிர் போகுமோ என்ற பயம்
மானம் போகுமோ என்ற பயம்

உயிர் பயம்
உடைப்பதற்கு
அறிவியல் போதும்
அடுத்ததை தவிர்ப்பதற்கு
நல் அனுபவம் வேண்டும்
நம்மைச் சுற்றி
நடப்பவைகளை
புரிந்திருத்தல் வேண்டும்
புன்னகையும் வேண்டும்.

சந்தேகப் பேய் ஒழி
சாதிப் பேய் கட
முடிந்தவரை உதவு
மூடப்பழக்கம் ஒழி
புன்னகை தரி
புளங்காகிதம் அடையாதே
அறிவு வளர்
அண்டம் தெளி
கல்வி கல்
களவு மற
தெரிந்ததைப் பேசு
தெரியாதது அறி
வீடு மற
நாடு பாரு

இதை செய்யும்போதே
இருக்கும் பயமெல்லாம்
பயந்து ஓடும்.

இதற்கும் பயத்திற்கும்
இம்மியளவும் சம்பந்தம்
இல்லையே!

இது உனக்கான
இனம்புரியா மருந்து
உட்கொண்ட பிறகுதான்
உணருவாய் மாற்றங்களை.

காட்டில் நடத்தலாயினர்.

கரடுமுரடான பாதைகளையே
கண்டிராத மதியின்
பாதங்கள் பயணம் கொண்டது.

உதிர்ந்த இலைகள்
உயர்ந்த மரங்கள்
தூரத்தில் கேட்கும்
தண்ணீரின் சலசலப்பு
இடையிடையே கேட்கும்
இனம்புரியா இராகங்கள்.
கானகத்தின் மெளனம்
கலைக்கும் கானக்குயில்கள்
காதலியின் அனுமதியின்றி
காதலன் தொடும்போதும்
சுகம் மட்டுமே பெருகுவது போல்
சூரியக் கதிர்கள் மரம்
சூழ்ந்த காட்டினில்
வெளிச்சம் பரப்பி
வருடி விட்டது.

கல்லில் இடறினாள் - சிறிதே
காலில் குருதி சிந்தினாள்.
அழுதாள்.

பாதத்தை பிடித்தான்
பாசத்தோடு துடைத்தான்
சிறிதே அதில்
சகதி அள்ளி வைத்தான்
சரியாகிவிடும் என்றான்.

காய்ச்சல் வந்தாலே
கூச்சல் போடும்
காதலின் மனம்
கல்லாகிவிட்டதோ என
கணமொன்று எண்ணினாள்.

தேசம் கடந்து
திரவியம் தேடப் போகும்
மகனை தடுக்க முடியாமல்
மனதுக்குள்ளேயே அழுது
பிள்ளைக்கு ஆறுதலும்,
பக்தியோடு ஆசியும் தந்து
வழியனுப்பி வைக்கும்
வறியவன் போல்
அகத்திலே வேதனை மறைத்து
முகத்திலே முதிர்ச்சி காட்டினான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, November 5, 2008

காதல், கானகம் - பகுதி 26

பசி தீர்ந்த பின்னும்
பந்தியில் சோறு வைக்கும் பொழுது
மனதே நிறைந்து விட்டது
போதும் போதும் எனச் சொல்வதுபோல்
போதும் போதுமென்றாள்.
பித்தம் ஏறிய தலை போல்
சுற்றுகிறது.
பேசிப் பேசியே
சக்தி குறைந்து விடப் போகிறது.

பேசும் பொழுதோ
தொலைக்காட்சி பார்க்கும் பொழுதோ
எரியாத கலோரிகள்
தூங்கும் பொழுதுதான்
அதிகமாய் எரியும்
தெரியுமா உனக்கு?

எல்லாமே அறிவியல்தானா?
எதற்கும் ஒரு விளக்கம்தானா?

அறிவியல் என்பது வாழ்வு
ஏன் என்று கேட்பதனால்தான்
எண்ணற்ற பதில்கள் கிடைக்கின்றன.

இதோ இறங்கும் இடம்
இதற்குமேல் வாகனம் செல்லாது.
இயற்கை காணலாம் வா.

நிச்சயம் இறங்க வேண்டுமா?
நிசப்தமாக இருக்கும் இந்த
இடத்தை கண்டவுடனே
இனமறியா பயம் ஒட்டிக்கொள்கிறதே.

பயம் என்பது
பயனில்லாதது.
அப்படி ஒரு பொருளே
அவனியில் இல்லை.

இருள் பரப்பும்
கருவி எங்குமில்லை
ஒளியில்லாத இடம்
இருளாகிறது - அதுபோல்
தைரியம் மரிப்பதால்
தரிப்பதே பயம்.

பயம் யாதென்பதற்கு
பதிலளித்தீர்
அதைப் போக்க ஏதும்
அனுகுமுறை உண்டா?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, November 4, 2008

உயிர்த்தெழு ஒவ்வொருமுறையும்

கூட்டத்தின் காலடியில்
வீழ்ந்த மலராய்
கடலில் கலந்து
உப்பான நதிநீராய்
உன்னுள்ளம் முழுதாய்
காதலின் தோல்விதனில்
கரைந்து இறக்கும் தருணம்
பிறந்தெழு மீண்டும்
பிறிதொருமுறை காதலிக்க
ஆம்,
இங்கே காதலிக்கப்படவும்
இன்னும் காதலிப்பதற்கும்
இனிய உள்ளங்கள் உண்டு.

நட்பாய், அன்பாய்
ஆதரவாய், தாங்குதலாய்
திரிந்து பரவட்டுமுன்
உடைந்து போன காதல் மனம்.

காதல், கானகம் - பகுதி 25

இன்னமும் நிறைய
ஆராய்ச்சிகள் செய்யப் படவேண்டிய
அவசிய தளங்களில்
அலைகளும் ஒன்று.
இரும்புத் துண்டு
இந்த மின்காந்த அலைகளை
கவரவல்லது என்பதற்காகவும்
காலிலோ, கையிலோ வளையமாக இட்டிருக்கலாம்.

கவரவல்லது எனின்
அதை நாம் அணியக் கூடாது
அல்லவா?

உண்மை உள்ளேயிருப்பதை
உணர்.
இடிதாங்கியின் வேலைபோல்
இரும்பு வளையமும் வேலை செய்யலாம்.
காரணங்கள் இல்லாமல்
காலத்தோடு வரும்
பழக்கவழக்கங்கள் இருப்பதில்லை.
பதில் தேடுவதில்தான்
திறமை இருக்கின்றது.
தீமையுள்ள பழக்கங்களும்
இடையிடையே
இருக்கலாம்
அதையும் தெளிந்து
அகற்ற வேண்டும்.

ஆக பேய் இருக்கின்றதல்லவா?

நோயும்தான் இருக்கிறது
அதற்காக பயந்து
அகன்றிருந்தால் மருத்துவம் வந்திருக்குமா?
பேயும் நோய்தான்
பின்னொரு நாள்
அறிவியல் கூறப்போகும்
அறிய உண்மையும் இதுவே.

இப்பொழுது சொல்
இனி பேயைக் கண்டு அஞ்சுவாயா?

நான் நோயைக்
கண்டும் அஞ்சுபவள்
என இனமொழிதல் விடை கூறினாள்.

உங்களுக்கு அச்சமென்பதே இல்லையா?
நீங்கள் எதைக் கண்டாவது
அஞ்சுவீரா அத்தான்?

கேள்விக்கான விடையறிந்தும்
கேட்கின்றாய்.
கூறுகிறேன் கேள்.
உன்னை சந்திக்கும் வரை
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை அச்சமில்லை.
உன்னைக் கண்ட பிறகுதான்
உண்மையில் அச்சம் கொள்பவனானேன்.

உன் கோப விழிகளால்
உற்றுப்பார்க்கும் போது
சுற்றம் எரியுமோவென அஞ்சுவேன்.

மலர் எடுத்து
தலையில் சூடும்போது
உனக்கு வலிக்குமோவென அஞ்சுவேன்.

நீ சிரிக்கும் பொழுது
வைரங்களாய் மின்னும் பற்கள் கண்டு
கப்பல் ஏதும் கரை ஒதுங்குமோவென அஞ்சுவேன்.

நீ நகம் வெட்டும்போது,
வெட்டுண்ட நகம் உன்னைப் பிரிந்த
கோபத்தில் சாபமிடுமோவென அஞ்சுவேன்.

நீ நடக்கும்போது
நிலத்தில் பட்டு உன்
கால் நோகுமோவென அஞ்சுவேன்.

நீ கடலில் கால்வைத்ததும்
கடல் நீர் குடிநீராகி அதனால் ஏற்படும் நீரோட்ட
மாற்றத்தால் நிலம் மூழ்குமோவென அஞ்சுவேன்


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, November 3, 2008

காதல், கானகம் - பகுதி 24

எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றியது போல்
பேய்ச்சுடர் பேய்த்தீ என
பீறிட்டது அவள் உள்ளத்தில்.

இதோ பார்,
நீ பேய் உண்டு என்பதை
நம்புவதால்தான் இக்கேள்வியைக் கேட்டாய்.
இருக்கிறதா இல்லையாவென
சந்தேகம் இருப்பின்
சாத்தானை எப்படி நம்புகிறாய்?

ஆம்,
நீ கடவுளைக்
காணவில்லை
ஆயினும் நம்பினாய்,
பேய், பூதத்தைக்
காணவில்லை
அதையும் நம்பினாய்.
முன்னோர்கள் வழியிலேயே
மூழ்கிப் போகிறாய்.

அறிவியல் கூறுவேன்
அறிய வேண்டுமா?

சொல்லுங்கள்.

ஒவ்வொருவரின் உடலிலும்
ஓரு மின்காந்த அலை இருக்கின்றது
சிலருக்கு சில மில்லிமீட்டர்
சிலருக்கு சில மீட்டர்.
அதுதான்
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்,
பன்றியோடு சேர்ந்த கன்றும் மாறும்
என்ற
பழமொழியில் ஒளிந்திருக்கும்
புலப்படாத உண்மை.

புரியவில்லை
பேய்க்கும் இதற்கும்
என்ன சம்பந்தம்?
எல்லாம் இறுதியில் புரியும் கேள்.

மின்காந்த அலையின் அளவு
மாறிக் கொண்டே இருக்கும்,
வீரியமாய் நீ பேசும் பொழுது
விரிந்து நீளும்,
சுயம் மறந்து தூங்கும் பொழுது
சுருங்கி குறையும்.

உடல் இறந்தாலும் மின்காந்த
அலைகள் சிறிது காலம்
உலவும், பின் காற்றுடன்
கலந்து மறையும்.
அதனால்தான் சவத்தை
அக்னியில் சுடுவது
நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.

நீண்ட நாள் ஒரே இடத்தில்
நிலை கொண்டிருந்த தொலைக்காட்சிப்
பெட்டியை இடம்
பெயர்த்து மாற்றும்பொழுது
வர்ணங்கள் மாறுகிறதென்பதும்
மின்காந்த அலையால்தான்.

இந்த அலைகள்
எண்ணங்களை சுமந்து
செல்ல வல்லது,
நம்முடைய எண்ணங்களை
அலைகளாக்கி
அதை ஓட விட்டு
பிற மனிதனின் மூளையில்
பதியவிடலாம்.
இதுதான் புத்த மதத்தில்
இன்றும் இழையோடிக் கொண்டிருக்கிறது
இதுதான் பேயின் உண்மையும் கூட.

சிலருக்கு பேய் பிடித்ததும்
சிறிதும் தனக்கே தெரியாத
உண்மைகளை உளருவார்கள்
உதாரணம் இதற்கு ஏராளம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 31, 2008

காதல், கானகம் - பகுதி 23

திருடிய பொருளை
திருப்பி வைக்க எண்ணியவன்
மாட்டிக் கொண்டது போல்
மதியிழந்த முகம் காட்டிச் சொன்னாள்
மன்னித்துவிடுங்கள் என்னை.

நாடி பிடித்தான்
நெற்றி ஒட்டினான்
உருகி விழுபவளை
வாரி அணைத்து
ஒரு குவளையிலிட்டான்.
குவளையில் குதித்தான்
குறுத்த இடையினைப் பிடித்தான்.
மன்னிப்பெதற்கு கேட்டாய், உன்னை
மன்னிக்குமளவுக்கு நீ எனக்குத் தூரமில்லை.

காதலின் அணைப்பிலிருந்து
கைநழுவ எண்ணமில்லை,
களிநகை செய்தாள்
கண்கள் மூடி உதடுகள் திறந்தாள்
காதல் என்ற பெயர்
கச்சிதம் உங்களுக்கென்றாள்.

ஆதவளே!
ஆழமாய் நம்புவதே காதல்.
வா என்னோடு கானகம் செல்லலாம்.

செல்லலாம். நீங்கள் எங்கு
செல்லினும் நான் வருகிறேன்.

அடித் தங்கமே
அதிசயங்கள் காணுவோம் வா.

பயணம் தொடர்ந்தது,

சுறாவைக் கண்ட
சிறு மீனாய்
சூரியனைக் கண்ட
பனித்துளியாய்
வீட்டிலுள்ளோரைக் கண்ட
சுண்டெலியாய்
பரந்து கிடக்கும் மரங்கள்
பார்த்து இதயத்துக்குள்
ஆழக் குழிதோண்டி
அசைவின்றி மனதை
அழுத்தமாய் புதைத்துக் கொண்டாள்.

அடம் பிடித்து
அழும் குழந்தை
ஆளைக் கண்டதும்
அதிகமாக அழுவது போல்
காற்றில் அசையும்
மரங்களின் சத்தத்தில்
விசும்பி விசும்பி
பேய் என்று
புலம்பினாள்.

ஆயிரம் முறை முயற்சித்தும்
அடிபனியாத நாய்வால் போல்
பல பல சாமதானங்கள்
சொல்லியும் மனது
பேயென்னும் மாயையில் வீழ்ந்தது.

குருகிக் குருகி
ஆமைபோல் ஐந்தடக்கம்
ஆயினள்.

மெல்ல கண் திறந்து
மேனியெல்லாம் வியர்வையில் நனைய
பேய் என்பது உண்டா என்றாள்.

சின்னதாய் சிரித்து
சிறு பார்வை பார்த்து
ஆமாம் என்றான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 30, 2008

காதல், கானகம் - பகுதி 22

அடர்ந்த காட்டினிலிருந்து
என் உயிர் காத்தீர்,
கணவனென கையொப்பமிட்டீர்
கடலினும் ஆழமான உங்கள்
அன்பினால் என்னை மயக்கிவிட்டீர்.
யாரையோ மணக்கப் போவது நிச்சயம்,
யாரோ என்பவர் நீங்களாக இருக்கக்
கூடாதாவென கேட்டாய்.

உதவி என்பது பலனை
எதிர்பார்த்து செய்வதல்ல
உதவுவது என் குணம்,
உன்னிடமும் அவ்வாறேயென்றேன்.

நீங்கள் இதுவரை செய்த உதவிகளுக்கு
நீண்ட பலனாக இறைவன்
என்னை உங்களுக்குக் கொடுத்தானென
எண்ணிக் கொள்ளுங்களென்றாய்.

பதில் சொல்ல வந்த வார்த்தைகளை
பாதியிலேயே விழுங்கிவிட்டேன்.

பையிலுள்ள அலைபேசி அழைத்தது.

பார்த்தீர்களா நான் சொல்வது
பூராவும் உண்மையென
மணியோசை கேட்கிறது.

இது உன் கற்பனை
இதுதான் உண்மையென இப்பொழுது
புரிந்து விடும் பார்.

பெரிய புன்னகையோடு வந்த அம்மாவின் குரல்
பெண் கொடுக்க வந்திருக்கிறார்கள்,
இதுதான் விவரமென்றாள்.
இதில் சம்மதமா உனக்கென்றாள்

சற்றே குழம்பிப் போனேன்,
சிரித்த உன் முகம் கண்டேன்
கோடிக்குழப்பம் கொண்ட
பிரபஞ்சம் போன்ற உன் கண்கள் பார்த்தேன்.
ஒரு நொடி மூர்ச்சையானேன்
மரு வினாடியே தெளிந்தேன்.

சரியென்று சம்மதம் சொன்னேன்.
சாதகப் படி இரண்டாண்டிற்கு
பிறகுதான் மணமுடிக்க வேண்டுமென்றார்கள்.
போகட்டும் அதுவரை காதலிக்கிறேனென்றேன்.
முதன் முதலாய் எனக்குள்
முளைத்த வெட்கம் மறைக்க
எண்ணி, அது முடியாமல்
ஏமாந்தவனாய், சிறு புன்னகை செய்தேன்.

இப்படி
நான் செய்த சிறு உதவிக்கே என்மீது
நேசம் கொண்டாயே கண்ணே,
பூமியென்னும் உயிர் கொடுத்த தாயின்மீது
பாசமெப்படி மறந்தாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 29, 2008

காதல், கானகம் - பகுதி 21

உங்க மனசு யாருக்கும் வராது,
நீங்க எதுவும் தயங்காம சொல்லுங்க.

நேற்று இரவு
மருத்துவமனை சட்டத்திற்காக என்னிடம்
கையெழுத்து கேட்டார்கள் - நீங்கள் அவர்
கணவரா, சட்டென்று கையெழுத்திடுங்கள் என்று
வெள்ளை உடையில் வந்த தந்தி போல் ஒப்பித்தார்கள்
வழியேதும் தோன்றாமல்
கணவனென்று கையொப்பமிட்டு விட்டேன்
மன்னித்து விடுங்கள்.

பரவாயில்லைங்க,
பல நேரத்தில் இப்படித்தான்
நீங்க தாமதிச்சுருந்தீங்கன்னா என்னாயிருக்குமோ?
நீங்க வருத்தப்பட இதுல ஒன்னுமில்லை.

நான் சொன்ன வார்த்தை கேட்டு
நெஞ்சோரம் ஒரு புன்னகை செய்தாய்.

நீங்க செய்த உதவிக்கு
நாங்க ஏதாவது செய்யணும்.
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க - என்
கண்ணும், மனசும் குளிர உங்களுக்கு
எங்க வீட்ல விருந்து வைக்கணும்
என அன்புக் கட்டளையிட்டாள்.

ஒரு வாரம் கழித்து.
ஒருவரிடமும் சொல்லமலேயே
உன் வீடு வந்தேன்
என் வரவு சாதரணமாகவே இருக்கட்டுமென்று.

வாங்க, வாங்க
எப்படி இருக்கீங்க என்றாய்.
உனது பெற்றோர் எங்கே என்றேன்.
உங்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களென்றாய்.
ஏன் என்றேன் - சொல்வதற்கு முன்
எனது கேள்விக்கு பதில் சொல்லுங்களென்றாய்.

எதுவும் புரியாதவனாய்
எது உனது கேள்வியென்றேன்.

எந்தன் வாழ்க்கைக்கு
நீங்கள் துணையாக இருக்க வேண்டும்
உங்கள் வீட்டில்
நான் விளக்கேற்ற வேண்டும் என்றாய்.

எதிர்பாரமல் வருவதுதான் காதல்
என கேள்விப் பட்டது
சத்தியமான உண்மையென உணர்ந்தேன்.
சில நாள் முன்புதான் பார்த்தோம்,
இன்னும் பழகவில்லை
இன்று கல்யாணம் என்கிறாயே என்றேன்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 28, 2008

பிரிவாற்றாமை

இந்தக் கவிதையை 2008 தீபாவளி மலரில் வெளியிட்ட சிஃபி இணையத்திற்கு நன்றிகள் பல.
http://tamil.sify.com/fullstory.php?id=14781596

அன்பே! என் உயிரினில் கலந்த உறவே!
அனுதினமும் விடியலும் இரவுமாய் நீயே!
தாய்க்கும் எனக்குமான உறவு தொப்புள்கொடி
தாரமே, உனக்கும் எனக்குமான உறவு தாலிக்கொடி.

தாயின் அண்மை அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.
தந்தையின் வழிகாட்டல் அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.

ஆம், நீ எனக்குத் தாய்தந்தையுமானவள்.
அங்ஙனமே என்னால் நீ தாயுமாகப் போகிறவள்.
கருவோடு நீ பெருவயிறோடு நிற்கையில்
நெருப்போடு நீ நிற்பதாகவே தவிக்கிறேன்.

தலைப்பிரசவம் பெண்ணுக்கு மறுபிறப்பாம்
தலைமகளாய் நீ வேண்டும் என்பதே என் விருப்பம்
தாயாகத் தாய்வீடு சென்று விட்டாய்.
தனியே இன்றிவனை விட்டு விட்டாய்.

படுக்கையில் நானே தொலைந்து போனேன்.
நடு இரவில் நட்சத்திரங்கள் எண்ணுகின்றேன்.
பெருவெள்ளத்தோடு போய்விட்ட சிறுகுடிலென
சிறுவுள்ளம் உடைந்து நினைவுகளில் மிதந்து நின்றேன்.

கண்ணயர்ந்தால் கனவில் வருவாயென்ற
நம்பிக்கையில் கண் மூடினேன் நான்,
கசிந்த கண்ணீர்த் துளியின் சூடு சொன்னது
பிரிவுத் துயர் பெரும் நெருப்பென்று!

காதல், கானகம் - பகுதி 20

மறுநாள் சரிசெய்யப்பட்ட உன்
மகிழ்வுந்துடன் வந்தேன்.
வாருங்கள் என்றார் தந்தை
யாருமில்லாத நேரத்தில்
பெரும் உதவி செய்தீர்.

உணவு எடுத்து வர கமலம்
வீடு சென்று இருக்கிறாள்,
நான் மருந்து வாங்கி வருகிறேன்
என் மகள் நினைவு திரும்பி இருக்கிறாள்
அவள் உங்களைப் பார்க்க வேண்டுமென்றாள்
அமர்ந்து பேசுங்கள், இதோ வந்துவிடுகிறேன்.

துவைத்து உலர வைத்த
துணி போல் இருந்தாய்
கடிதம் பிழையென
கசக்கி எறியப்பட்ட காதல் கடிதமாய்
துவண்டு கிடந்தாய்.
தூரம் நின்றேன்.

மெல்ல தலை அசைத்து
மெல்லியதாய் வாய் திறந்து
வாருங்கள் என்றாய்.

எப்படி இருக்கிறாய்
என்ற கேள்வியுடன்
வாங்கி வந்த பழங்களை
மேசையில் வைத்தேன்.

மழை முடிந்த வானமாய்
தூறலில் நனைந்த மலராய்
மெல்ல மலர்ந்து,
முகம் ஒளி பெற்றது.

நன்றி என்றாய்.
நேற்றே ஓராயிரம் முறை
உன் பெற்றோர்கள்
உரைத்து விட்டனர்.
உடம்பு தேறியிருக்காவென்றேன்.

இன்னும் இரண்டு நாளில்
இல்லம் போகலாம்
என்று சொன்னார்களென்றாய்.

மகிழ்ச்சியான செய்தி,
மனது ஆறுதல் அடைந்தேன்.

நன்றிப்பா
நான் வணங்கும் தெய்வம்போல்
வந்து அவளை காப்பாத்திட்ட.
இந்தக் கடனை என்ன செஞ்சு
தீர்க்கப் போகிறேனென உன்
தந்தை உள்ளே நுழைந்தார்.

மனிதம் எஞ்சியிருக்கிற
மனிதன் செய்யும் காரியம்தான்.
இத்தனை பாராட்டுகள்
அவசியமென்று தோன்றவில்லை.

மகிழ்வுந்து சரி செய்து
மருத்துவமனை வாசலில் நிறுத்தியிருக்கேன்.
இன்னொரு சேதி சொல்லணும் என்ற நேரம்
இடையே உன் தாயும் வந்தார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]

Monday, October 27, 2008

சாளரம் தாண்டா கைகள்

உனது கைரேகையும்
எனது கைரேகையும்
ஒன்றாய்ப் படிந்த
கர்பப்பை அழிந்திருக்கிறது
கால வெள்ளத்தாலும்
கரை பிரிக்கும் கடலாலும்!

குருதியோடும் தசையோடும்
கலந்துவிட்ட உணர்வுகளும்
தொப்புள்கொடி உறவுகளும்
கலையவில்லை இன்னும்,
உனக்கொன்று நேரும்போது
கொதிக்கிறது எனது எண்ணம்!

தும்மினாலும் நீ விம்மினாலும்
எம்மையெட்டிவிடும் அச்சத்தம்
நொந்ததாலும் ஆங்கே
நின்விரல்கள் வெந்ததாலும்
உன்வீட்டில் பெரும் யுத்தம்
என்னெஞ்சினில் பல சத்தம்!

தெரிந்தும் தெரியாமலும்
நாமறிந்தும் அறியாமலும்
உடைத்துவிட்ட கண்ணாடிகள்
ஒட்டாமலின்னும் இருப்பினும்
ஓயாமல் அதில் தெரிகிறது
நம் பிம்பம்!

கண்ணாடிகளின் விரிசலில்
கச்சிதாமய்ப் படிந்திருக்கிறது
சில கிருமிகளும்
பலகால எச்சங்களாய்ப்
படிந்திருக்கும் தூசிகளும்
அதில் ஒளிந்திருக்கும் பாம்புகளும்!

உன்வீட்டு வாசல்தாண்டி
என்வீட்டு சாளரம்முன்
சிந்துகின்ற உனது குருதியில்
வெந்துமுடிக்காத உன்னிதயத்துண்டுகளும்
வந்தே விழுகின்றது
என்னால் அழமட்டுமே முடிகிறது!

நீ வென்றால்
நான் ஆர்ப்பரிப்பேன்
நீ தோற்றால்
நான் அழுதுறைவேன்
சூழ்நிலைக்காக மன்னிப்பாயென்
சாளரம் தாண்டா கைகளை!

காதல், கானகம் - பகுதி 19

காட்டுப் பாதையில் தன்னந்தனியாய்
காவலின்றி கிடந்தாய்,
விளக்கிடம் காதல் கொண்ட
ஈசல் போல் மகிழ்வுந்து
மரம் மோதிக் கிடந்தது.
அவ்வழியே வந்த நான்
அம்மனி உனக்கென்ன ஆயிற்றென்றேன்.
முழுநிலவு காய்ந்திருக்க
அமாவாசையாய் ஒளியிழந்த முகம் காட்டினாய்.
குருதி தோய்ந்த முகம், காலதேவனின்
குரூரத்திற்கு பலியாகும் தருவாயில் நீ.
சுவாசம் பார்த்தேன்,
சுமாராய்த்தான் வந்து கொண்டிருந்தது.
சட்டை கிழித்தேன், தோளில்
கட்டு போட்டேன்.
மருத்துவமனைக்கு விரைந்தேன்.

மருத்துவமனையின் அமைதி கெடுத்தேன்
மருத்துவம் தேவையென அலறினேன்.

என்னாயிற்று என்றார்கள்?

அவசர சிகிச்சை தேவை என
கூச்சலிட்டேன்.

நீங்கள் அவர் கணவர்தானே?
இதில் கையெழுத்திடுங்கள் என்றார்கள்.

கதை பேச இது தருணமல்ல என எண்ணி
கையொப்பமிட்டேன்.
எழுதிய கை இறங்கும் முன்னே
என்னாயிற்று, பிழைத்துவிடுவாளா என
கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டேன்.
தோளில் ஒரு பலத்த அடி என்ற பதில்
கேட்பதற்கே சங்கடமாய் இருந்தது.
உயிருக்கொன்றும் ஆபத்தில்லை என்ற பதில்
உள்ளே ஒரு நிம்மதியை விதைத்தது.

பையை துழாவினேன்,
பாவையுன் முகவரி கண்டேன்.
உண்மையுரைத்தேன்
உடனே வாருங்கள் இங்கென்றேன்.
உயிரைக் கையிலேந்தி,
உடலையும் பெரும்சுமையாய்க் கொண்டு
ஓடோடி வந்தார்கள்
உன் தாய், தந்தை.

என்னாயிற்று?
எப்படி இருக்கிறாள்?
நாங்கள் பார்க்கலாமா?
எங்கள் பிள்ளை எங்கே? என்று
மலையிருந்து உருண்ட
கல்போல மடமடவென
கேள்வி மேல் கேள்விகள்.

நீங்கள் பதறுவது போல்
நடக்கக் கூடாதது நிகழவில்லை.
உயிர் பிழைப்பது திண்ணம் என்று
உறுதி அளித்திருக்கிறார்கள்.

தோளில் ஒரு ஆழ வெட்டு,
கை, கால் சிராய்ப்பு, வேறொன்றுமில்லை.
மனது அமைதிகொள்ளுங்கள்,
மகளுக்கு ஆறுதாலாய் இருங்கள்.

சிறிதே சமாதானம் பிறந்தது
இருந்தும் புலம்பிக்கொண்டே
இருந்தது தாயுள்ளம்.

யாருக்கும் தீமையென்று
யாதும் செய்யவில்லையே.
இத்தகு தண்டனை
இவளுக்கு வேண்டுமோ இறைவா
என அமைதி அடையாத தாய் மனம்
எத்தனித்துக் கொண்டிருந்தது.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 24, 2008

காதல், கானகம் - பகுதி 18

கடல் முதல் உயிர் தரித்தது,
காற்றைத் திருப்பி பருவ மழை
பெய்ய மலை உதவியது.
காடு மானுடம் வளர்த்தது.

காடுகளின் சமாதிதான் நகரம்,
காடு சார்ந்தே நகர் அமைத்தான்
பின் காட்டைக் கொன்றான்.
வீட்டுக்கோர் மரம் வளர்த்தான்
வழிமாறி இன்று மரணம் வளர்க்கின்றான்.

நிமிர்ந்து பார்த்தாள்
நகரம்தான் சுகம் என்றாள்.
விலங்கு பயம் இல்லையென்றாள்,
வீதியெங்கும் மனிதன் என்றாள்.
இதில் எங்கே மரணம் வளர்க்கிறான்?

உனக்கு விஞ்ஞானம் மறந்ததோ?
உணர்த்துகிறேன் கேள்.
நாம் கண்ட விஞ்ஞானத்தில் ஏராளம்
நாசுக்காக ஓசோனை
ஓட்டையிட்டுக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நகரத்தின் அருகிலும்
ஒரு காடு வேண்டும்,
மரங்களின் கொலைகளால்
மாபெரும் பருவ மாற்றம் ஏற்படுகிறது.
பருவம் தவறிய மழையால்
பயிர்கள் ஆகிறது கொலை.
வரண்டு போன ஆறுகள் - அதிலும்
வஞ்சகம் இல்லாமல் தொழிற்சாலை
கலக்கும் கழிவுகள், இதனால்
கலப்படமானது குடிதண்ணீர்.
ஆழக் குழி தோண்டி
அடி வரை குழாய் இட்டு
நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள், இதனால்
நீர்த்தடம் மாறி, நிலச்சரிவு ஏற்படும் அபாயங்கள்.

உலகமும், உயிர்களும் தானே பிறந்தவை - ஆனால்
உறுதியாய் அழியப் போவதென்னவோ மனிதனால்தான்!

நடப்பதன்று பார்த்துக் கொள்ளலாம்,
நமக்கொன்றும் நிச்சயம் நடக்காதென்று
ஏமாற்றம் கலந்த ஏளனச் சிரிப்பில் சொன்னாள்.

தவறாக பேசிவிட்டோமோவென்று
கருதி மன்னியுங்கள் எனக்
கூற வாயெடுத்தாள்.
பலனில்லை, புறப்பட்டு விட்டது
காதலின் வார்த்தைகள்.

பாவையே மறந்தாயோ மானுடத்தை?
பலர் பலன் பெற நட்ட மாமரம்
நட்டவருக்கு மட்டுமே பலன் தருவதில்லை,
நாளை என்பதை எண்ணாத
மனிதனால் நன்மை விளைவதில்லை
ஒறுமுறை நினைவு கூறுகிறேன் கேள்...


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 23, 2008

காதல், கானகம் - பகுதி 17

நான் கானகம் இரசிப்பவன்
மலைகளைப் புசிப்பவன்.
கானகம் நம் தாய்வீடு
கணக்கிலடங்கா உயிர்கள் வாழுமிடம்
நீயும், நானும் வாழ இடமிருக்காதா?

வார்த்தை வாழ்க்கைக்குதவாது
வனத்தில் புலி வந்தால்?
கரடி வந்தால்?

நீ சொல்வன எல்லாம்
நடுக் காட்டில்தான் இருக்கும்.
துள்ளி ஓடும் புள்ளி மான் காட்டுவேன்,
தோகை விரிக்கும் அழகுமயில் காட்டுவேன்,
பச்சோந்தி காட்டுவேன்,
பாசியில்லா ஓடை காட்டுவேன்.

அவசரம் வேண்டாம்,
அபாயம் என்று கத்தினால் கூட
காப்பாற்ற ஆள் இராது - பதிலுக்கு
கானகத்தின் மவுனமே மிஞ்சும்.

உனக்கு இது முதல் முறை
எனக்கு அங்கே நண்பர்களும் உண்டு.
அவர்கள் உடன் வருவார்கள்
அச்சமென்ற சொல் தெரியாதவர்கள்.
மலைகளிலும், காடுகளிலும்தான் அவர்கள் தொழில்
மலைத்தேன் கொணர்ந்து தருவார்கள். வா.

நீங்கள் காட்டுவாசி.

இல்லை, நான் காட்டிற்கு காவலன்
ஐ.ஃப்.ஸ் அதிகாரி.
மேலும் காடுகளில் ஆராய்ச்சி செய்பவன்.
வருடம் முழுதும் இருந்தாலும்
வியப்பாய்த்தான் பார்க்கின்றேன்
கானகத்தை, ஆயிரமாயிரம் விசயங்கள்
கற்றுக்கொள்ள இருக்கின்றது!

என்னை மணந்தபின்
உன் வீடு காடுதான்.
காய்கனிகள்தான் உணவு
காட்டில் சுத்தமான காற்றும் சுவாசிக்கலாம்.

வீட்டிலேயே இருப்பேன் நான்
விடிந்ததும் போய்,
இருட்டுமுன் வந்துவிடுங்கள்
இல்லறம் வீட்டிலேயே நடத்துவோம்.
கண்ணைக் கட்டுகிறது,
காதலனாய் காட்டின் காவலன்.
காதலியாய் நான்!

ஓடும் வழியில்
ஓனாயைக் கண்ட
செம்மறி ஆட்டைப் போல்
சிலாகிப்பவளே

காடு
ஒலியின் மவுனம்,
ஒளியின் நிழல்,
பெரும் அறிவின் பிம்பம் - புத்தனின்
போதிமரம் கூட காட்டில்தான் இருக்கின்றது.

இயற்கையின் மிகுதிகள்
காடு, கடல், மலை.
கடல் தாய்,
மலை தகப்பன்,
காடுதான் மானுடம் என்ற மைந்தன்.
இவைதான் வாழ்வின் ஆதாரம்.

மெல்ல முகம் திருப்பி
வலக்கண் நீரைத் துடைத்து
காந்தள் இதழ் மலர்ந்து
எப்படி? என்றாள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 22, 2008

காதல், கானகம் - பகுதி 16

சமாதானம் வேண்டாம்,
சட்டென மகிழ்வுந்தை நிறுத்துங்கள்.
எனக்கு அழுகையே வருகிறது.

வாகனம் நிறுத்தினான்,
வாரியணைத்தான் அவளை.
மெல்ல என்னைப் பார் என்றான்.

மவுனம் மட்டுமே திருப்பிக் கொடுத்தாள்.

அவள் கூந்தல் கோதினான்.
அடர்ந்த விழிகளால் பார்த்தாள்.

தண்ணீரில் தான்
மீன்கள் வாழுமென்பதை
கண்ணீரில் மிதக்கும்
உன் கண்கள் சொல்லுதடி.
அடியே கார்மேகக் கூந்தல்காரி
அவனியில் கானகம்தான் நம் முதல் வீடு.
கருங்கூந்தல் காடு கொண்டவளே
காடு கண்டா அஞ்சுகிறாய்?

புறா போல் தலை திருப்பினாள்
புறமுதுகு காட்டினாள்.
உங்களோடு சண்டை என்றாள்
ஊடல் கூட்டினாள்.

தோள் பிடித்தான்
தேகம் திருப்ப எண்ணினான்.

அவளுக்கு
சமாதானத்தின் சுகம் பிடித்தது
சடுகுடு ஆடியது மனது.

திருப்ப முடியாமல் தோற்று
முதுகில் முகம் புதைத்தான்.
மெல்லியதோர் மூச்சு விட்டான்.

உனது முதுகு போன்ற
உன்னத பளிங்குகள் காணலாம்,
அகன்ற உன் கூந்தல் போன்ற
அடர்ந்த கானகம் காணலாம்,
மலையில் அருவி காணலாம்,
மலை முகடுகள் ஏறலாம்,
பசிக்கு பழங்கள் உண்ணலாம்.
பள்ளங்கள் தாவலாம்,
ஆடைகள் கூட
அவசியமில்லாத இருள் காணலாம்,
சுதந்திரம் வாசிக்கலாம்.

தனிமையிலே நான் இருந்ததில்லை
ருதுவானதும் இட்ட இரும்பு வளையத்தை
இன்னும் களையவில்லை.
தனிமை பயம் எனக்கு,
அடர்ந்த காடு பயம் எனக்கு.
அவன் மடி புகுந்தாள்.

கன்னம் தடவினான்
காது மடல் நீவினான்
மூக்கில் மூக்குரசினான்
மேல் நெற்றியில் முத்தமிட்டான்
செவ்விதழ் சீண்டினான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 21, 2008

காதல், கானகம் - பகுதி 15

ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு மொழி,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன்,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கோட்பாடு.
அஃதே தோன்றியது முதல் மதம்.

மருத்துவம் மலரச் செய்தான்
மாபெரும் ஆராய்ச்சி செய்தான்,
வானம் பார்த்தான்
வானவியல் பயின்றான்,
கணிதம் இயற்றினான்
வணிகம் செய்தான்.

பிள்ளைக்கு விலங்கு
பயம் காட்டி உணவளித்தான்,
கனத்த ஆராய்ச்சிகளை
கதை கதையாய் சொன்னான் - இவைகளை
பின்பற்றச் சொன்னான், நம்பாதோர்க்கு
பிசாசு, பூதம் என பயம் காட்டினான்.
நெல் அறுவடை செய்தான்,
நாகரீகம் வளர்த்தான்.
போர் செய்து நிலங்களை கூட்டினான்
பண்பாடு கண்டான்.

போதும், போதும்
பிரளயம் கண்டது போலானாது
என பிரம்மித்தாள் ஆதவள்.

பூங்கா செல்லலாம் என்று
பாதை மாறிச் செல்கிறீர்கள்,
நாம் எங்கே செல்கிறோம்? - இல்லை
நீங்கள் எங்கே அழைத்துப் போகிறீர்கள்?

பொறு, பொறு
புலம்பாதே!
நாம் பூங்கா கடந்து
நாற்பது நிமிடம் ஆயிற்று.
கானகம் செல்கின்றோம்.

வேண்டாம்.
வீட்டிற்கே சென்றுவிடலாம்
என்றவளது கண்களில்
இருண்ட கானகத்தின் பயம் தெரிந்தது.

பூகம்பம் உணர்ந்த பாம்பைப்போல் ஏன்
பயப்படுகிறாய். நானிருக்கிறேன், அஞ்சாதே!

இரண்டு வாரத்தில் திருமணம்
இப்படிச் செல்வது நல்லதல்ல.
அது ஆள் அற்ற காடு
அங்கே பேய் இருப்பதாக
பலர் கூறி கேட்டிருக்கிறேன்
பயந்து சிவந்தது அவள் முகம்.

பேயா?
பேயென்னும் மூட மாயை
உன்னையும் தொற்றிக் கொண்டதா?
உண்மையைக் கூறுகிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 20, 2008

காதல், கானகம் - பகுதி 14

ஆசிரியரின் கேள்விக்கு விடையறிந்த
மாணவன் போல்
முகம் மலர்ந்து சொன்னாள்.
அது எனக்கே தெரியும்.
ஆண்டவனால் உருவாக்கப்பட்டது.

கேளடி என் கண்மனி,
காது தீட்டிக் கேள்.

மனித இனம் முளைத்தது
மனிதக் குரங்கிலிருந்துதான்.

பதினைந்து இலட்சம் வருடத்திற்கு முன்புதான்
சிம்பன்ஸியிடமிருந்து மனிதன் பிரிந்திருக்கிறான்.
மிகப் பழைய தற்கால மனிதனின்
மண்டை ஓடு ஆதாரத்துடன் சிக்கியது சுமார்
இரண்டு இலட்சம் வருடத்திற்கும் முன்பானது.

பெண் என்பவள் கருசுமப்பதால்
பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருக்கிறாள்.
ஆண்தான் வேட்டையாடி
உணவு கொணர்ந்து வருவான்.
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு
முனைப்பான கருவிகள்தாம்.
கற்களை வைத்தே
கருவிகள் செய்தான்.
மிருகம் கொன்றான், பச்சை
மாமிசம் உண்டான்.

அவனுடைய அடுத்த கண்டுபிடிப்பு
அளவிடற்கறியாத ஒன்று.
ஆம், நெருப்பு.
காட்டுத்தீ கண்டு பயந்தவன்,
கற்களில் தீ கண்டு மகிழ்ந்தான்.
சுட்டுத் தின்றான்,
சமையல் அறிந்தான்.

கூட்டமானான்,
குகைகளில் வீடு கொண்டான்.
விலங்கிலிருந்தும், மற்ற மனிதனிடத்தும் தற்காத்து
வாழ்ந்துகொள்ள சண்டையிட்டான்.
திசைகள் அறிந்தான்
தலைவன் ஒருவன் உருவானான்.

பேச ஒரு மொழி கொண்டான்,
படங்களாக எழுத்துக்கள் கண்டான்.
சிந்தித்தான்,
பேசினான்,
தர்க்கம் செய்தான்,
சண்டையிட்டான்,
முடிவு கண்டான்,
சட்டம் செய்தான்,
மீறியவனை கொன்றான்,
காடு கடத்தினான்.

குளிர் கொண்டான்,
காப்பாற்றிக் கொள்ள
விலங்குத் தோலுறித்து ஆடை கொண்டான்,
வினோதம் துவக்கினான்.

ஒருத்தியிடமே உறவென்றான்
மற்றவர்கள் அவளைத் தொடக் கூடாதென்றான்.
இல்லறம் கண்டான்,

என் மனைவி,
என் மக்கள்
என் இடம்,
என் சமுதாயம் என்றான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]

Friday, October 17, 2008

காதல், கானகம் - பகுதி 13

ம்...ம்...
சொல்லுங்கள், எந்தக் களை கண்டீர்?

ஒரு குழந்தை போல் நீ.
ஓயாமல் ஒரு விஷயத்தை கேட்கின்றாய்
விடை தெரியும் வரை,
வினா உன்னுடையதென்றால்.

சொல்கிறேன் கேள்.
அறிந்த சான்றோர்கள் கூறும்
அளவிடதற்கரிய அறிவுரைகள் ஏராளம்.
இதனிடையே மூடர்கள் சொன்னதும்
இடைச் செறுகல்களாய் வளர்ந்தது.

உதாரணம் உரைக்கின்றேன் கேள்.
உடன்கட்டை ஏறுதல்,
பெண்களுக்கு உரிமை வழங்க மறுத்தல்,
பெண்னை கற்புடையவள் எனக்காட்ட முதலிரவுக்குப் பின்
குருதி படிந்த வெள்ளைச் சீலையை
குடிமக்கள் காண உலர்த்துதல்,

இன்னும் ஏராளம்....

கடவுள் பெயரால் பலமக்களை
கழுவில் ஏற்றினார்கள்.
பெறுதற்கறிய மருத்துவக் குறிப்பை
ஆற்றில் விட்டார்கள்,
சாதி பிரித்தார்கள் - சில சாதியினரை
சவம் போல் மதித்தார்கள்.

கேட்கவே குரூரமாய் இருக்கின்றது அத்தான்.
கேடு கொண்ட சாதி எதற்குப் பிறந்தது?

சாதி கேடு கொண்டதல்ல,
சந்தர்ப்ப வாதிகளால் மாறியதுதான் கேடு.

மந்திரம் ஓத ஒரு சாதி,
மயிர் மழிக்கும் தொழிலுக்கு ஒரு சாதி,
வணிகம் செய்ய ஒரு சாதி,
வன்கடல் சென்று மீன் பிடிக்க ஒரு சாதி,
மறப் போர் செய்ய ஒரு சாதி,
மரவேலை செய்ய ஒரு சாதி,
இரும்படிக்க ஒரு சாதி,
பெரும் பணம் கடன் கொடுக்க ஒரு சாதி,
குடியாள ஒரு சாதி,
காடு காக்க ஒரு சாதி,
துணி வெளுக்க ஒரு சாதி,
ஆடற்கலை வளர்க்க ஒரு சாதி
இப்படி இன்னும் எத்தனையோ சாதிகள்.

இத்தனை சாதிப் பிரிவுகள் ஏன் என
ஈடுபாட்டோடு கேட்டாள்

தொழில் ஒவ்வொன்றும்
தலைமுறை தலைமுறையாகச்
செய்தால், கலை வளரும்,
செவ்வனே காரியங்கள் முடியும்.
காலப் போக்கில் அதற்கான
காரணங்கள் மறந்து,
இழி தொழிலைச் செய்வோன்
இவன் என சில தொழில் செய்வோரை
வசைமொழி பாடினார்கள்
வாழும் முறை மறந்தார்கள்.
கடவுள் பெயரைச் சொல்லி
காமுகர்கள் கற்பைச் சூறையாடினார்கள்.
மதமென்னும் அன்பு மொழியில்,
மதமேறி நஞ்சு கலந்தார்கள்.
நல்லாட்சி செய்ய சாதி பிறந்தது - இப்போது
ஆட்சி பிடிக்கவே சாதிகள் வளர்க்கப் படுகிறது.

மதங்கள் எப்படி வந்தது
என்று சொல்கிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 16, 2008

மரணம் களைந்து எறிகிறேன்

அசைவுகள் ஏதுமற்ற
இடங்களில் படர்ந்திடும்
சிலந்தியின் வலையொத்திருக்கிறது
உணர்வுகள் யாவுமற்ற
என் முகத்தினில்
வளர்ந்திருக்கும் தாடி

அந்த முடிக்கூட்டில்
மறைந்துவிடும் முகபாவனைகளில்
மறையாமலிருப்பது ஒன்றுதான்,
கிழித்தெறியப்பட்ட காதல்.

காதல் சின்னங்களால்
கலையாய் இருந்த அலமாரி
சற்றே தூசுகளோடு
சலசலப்பின்றி இருந்தது,
சாளரத்திலிருந்து வந்த
வெளிச்சத்தில் பளபளத்தது
நாட்குறிப்பேடும் கடைசி
நிமிடத்தில் கோழையாகி
தூக்கியெறியப்பட்ட
தூக்குக் கயிறும்.

கண்களை வைத்தே
என்னையுணர்ந்து
அரவணைக்கும் பெற்றோர்களின்
அன்பினில் கொஞ்சமாக
துளிர்க்கிறது தொலைத்த அன்பு.

காதலியால் தூரப்பட்ட
நண்பர்களின் இன்றைய அருகாமையில்
பூக்கத் துவங்குகிறது
புன்னகை, தாடிப் புதரிலிருந்து.

ஏழு மாத தாடி
மழிக்கப் போகிறேன்
எனக்கான இடமொன்று
ஏதோவொரு மனதிலிருக்கும்வரை
மரணம் களைந்து எறிகிறேன்.
ஆம்,
மரணம் தோல்வியின் தீர்வல்ல.

காதல், கானகம் - பகுதி 12

வாருங்கள் அத்தை, நீங்களும்
உண்ணுங்கள் என்றாள்.

நீங்கள் உண்ட பிறகு
நானுண்பேன்.
வீடு திரும்பும் நேரம் எப்பொழுதோ!
வயிறாற சாப்பிடுங்கள்.

அத்தான், இந்த பழக்கம் எதனால்
அரும்பியதென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியும் ஆதவளே!
தெளிவிக்கிறேன் கேள்.
சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்.

என்னே வியப்பு!
எண்ணிக்கையில்லாத சம்பிரதாயங்கள்
வியந்தாள் ஆதவள்!

ஆம்.
அறிவில் சிறந்த பல
கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் - ஆனாலும்
காரணமறிந்து செய்வதே சிறப்பு.
அழகிய நெல் வயலான சம்பிரதாயங்களிடையே
ஆங்காங்கே களைகளும் இருக்கும்.

என்ன களைகண்டீர்?
எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!

கை கழுவு,
காலாற நடப்போம்.
போகின்ற வழியில்
போதியவற்றை சொல்கின்றேன்.

மகிழ்வுந்து எடுத்துப்போ!
மழை பொழியுமாறு இருக்கிறது.
மெதுவாகச் செல்,
தெருவிளக்குகள் எரியுமுன் வந்துவிடு
என்றார் நாகய்யன்.

ஆகட்டும் தந்தையே.
அப்படியே செய்கிறேன்.

எங்கு வரை செல்கிறாய்
என்றாள் மலர்.

அருகிலுள்ள பூங்காவிற்கு என்று
கண் மறைத்துப் பதில் சொன்னான் காதல்.

மகிழ்வுந்து முன் கதவு திறந்து
மெல்லியவளை அமரச் செய்தான்.
புறப்பட ஆயத்தமானான்.

பாதுகாப்புப் பட்டையை அனிந்து கொள்ளுங்கள்,
பதைத்தான் நாகய்யன்.

பக்குவமாய் சென்று,
பத்திரமாய் திரும்புங்கள்,
பாசமுரைத்தாள் மலர்.

களிமுகம் செய்தான்,
கன்னியிடம், செல்லலாமா? என்றான்.
மகிழ்ச்சி வெள்ளத்தில், புன்சிரிப்போடு
ம்...ம்.... என்றாள்.
புறப்பட்டது மகிழ்வுந்து!


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 15, 2008

காதல், கானகம் - பகுதி 11

அவர் உண்ணாத அன்னம்
எனக்கெதற்கு? - அவர்
உண்டதைக் கண்ட பிறகே
உணவைத் தொடுவேன்.

அடி கொடியே,
நீ சொல்வது பழைய பாடம்.
நீண்ட கடல் கடந்து
வணிகம் செய்யப் போனேனாயின்
வரும் வரை உண்ணாமல் இருப்பாயா?
பேதையே வறியவற்கு உணவளிக்க வேண்டும்,
பசிக்கும் வயிற்றிற்கும் உணவளிக்க வேண்டும்.
எந்தக் கணவன் மனைவி வரும் வரை
எதையுமுண்ணாமல் இருந்திருக்கிறான்?

போதும் நீங்கள் சொல்வது.
பழங்கதைகள் காட்டுவதும், என் தாயின்
பழக்கங்களும் மடமை என்கிறீர்களா?

பைங்கிளியே கேள்.
கிளிதான் சொன்னதையேச் சொல்லும்,
உன் தாய் சொன்னாலும் மடமை
உண்மையாகி விடாது.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில்
காடு சென்றாலும் மாலைக்குள்
வீடு வந்துவிடுவர் ஆடவர்கள்.

இன்றைய நிலை வேறு.
காலத்திற்கேற்ப கருவிகள் மாறும்.
காட்சிகள் மாறும் - இன்றைய வாழ்க்கைகேற்ப
முரணான கூற்றுகளும் மாறும்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது, உணர்ந்து கொள்.

உனக்குப் பசியெடுப்பின் நீதான்
உண்ண வேண்டும், என் பசிக்கு நான்!
ஒரு குவளை சோறுதான் இருக்கிறதென்றால்
"மானுண்டெஞ்சிய கழலி நீர்" போல் உண்ண வேண்டும்.

ஒத்துக்கொள்கிறேன்.
காதெட்டா தூரம் நீங்கள் சென்றால்
கருத்தோடு உங்கள் சொல்படி நடக்கிறேன் - ஆனால்
நிழல் தொடும் தூரத்தில்
நீங்கள் இருக்க, நான் மட்டும் பசியாறவா?
உணவு உண்ணும் வேளையில்
ஊடல் இருந்தாலும் மறப்போம்.
சிறு சண்டையிட்டுப் பிரிந்தாலும்
சோறு உண்ணும் வேளையில்
தேடல் கொள்வோம்.
கடல் கடந்து இருந்தாலும்,
சிறிதே தும்மலிடச் செய்வோம்!

அழகான பாடம்
அரும்பினாய்.
ஆழமான கருத்துக்கள்.
கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்ள
கடலளவு இருக்கிறதென்று சுட்டினாய்.
வா அன்னமே, அன்னம் உண்போம்.

உணவு பரிமாறிவிட்டு,
உண்ணுங்கள் என்று கூறி
அருகிலேயே நின்று கொண்டாள்,
அன்னை, மலர்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 14, 2008

காதல், கானகம் - பகுதி 10

கல்வி என்பது
முடிவிலாதது,
கற்பதற்காக நேரத்தை
விற்பதில்தான் இருக்கிறது
வியாபாரம்.

உலகம் காண செல்கின்றோம்,
வீட்டு சன்னல் வழியாக இவள்
வாசித்த வாழ்க்கையை,
வாழ்வின் வாசலுக்கு கொண்டு சென்று
அறிவுபெற
அழைத்துச் செல்கிறேன்.

மாங்கனி போல சுவையாய் பேசும் என்
மருமகளுக்கு மதி குறைவு என்கிறாயா?
வந்தாலே வீட்டை ஒளிரச் செய்பவளுக்கு
வாழ்க்கையைக் காட்டப் போகிறாயா?

மதி என்ற பெயரையே
மாற்றச் சொல்லிவிட்டார்
உங்கள் மகன்.
இனி மற்றது பேசி எதற்கு?

சரி, ஆகட்டும்.
ஆகாரம் உண்டு
பிறகு செல் என்றார்.

செவிக்கும் கண்ணுக்கும் உணவு தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
வயிற்றுக்கு உணவு
வேண்டுமெனில் வந்துவிடுகிறோம்
வீட்டிற்கு என்றான் காதல்.

மதி, நீ
சாப்பிட்டு விட்டுப்போம்மா.
அவன் பசி பொறுப்பான்,
அகிலமே உணவென்பான்,
மழை நனைவான்,
வெயில் சுமப்பான்,
உலகே குடையென்பான்.

வீட்டிற்கு வந்த உன்னை
வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டேன்.
அன்னம் பருகிக் கொள், பின்
அனைத்தும் தெரிந்து கொள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 13, 2008

காதல், கானகம் - பகுதி 9

ஊர்காண எங்கள் திருமணமானதும்
உங்கள் கடன் முடிந்தது.
உணவுப் பந்தி முடிந்ததும்
உறவினர்கள் பணி முடிந்தது.
அன்றுதான் எங்கள் பணி
ஆரம்பம் ஆகிறது.

இதில்
பயணிக்கத் தெரியாததில்
பாதி பேர்
வாழ்க்கையை
இரத்து செய்கிறார்கள்
மீதி பேர்
இன்பங்களை
இரத்து செய்கிறார்கள்.

கால் கடுக்க நடக்கப் போகும்
கரடுமுரடான வாழ்க்கைக்கு
காலணிகள் வாங்கச் செல்கின்றோம்.

காலமென்னும ஆழி
கடக்க படகென்னும்
அனுபவம் வேண்டும்
அதற்கான மரம்
தேடச்செல்கின்றோம்.

அனுபவம் நீ கடக்கும்
ஆண்டு பொருத்து அமைவது.
ஒரே நாளில்
அனைத்து அறிவும் பெறுவது
அணுவளவும் நடக்காது
என அனுபவத்தில்
எடுத்துரைத்தார் நாகய்யன்.

அனுபவம் என்பது
அளவிட முடியாத தீ அல்ல,
அது ஒரு சுடர்.

புத்தனுக்கு
போதி மரத்தில் வந்தது
விவேகானந்தனுக்கு
பரமஹம்சரிடம் வந்தது.

உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு.

பிடிவாதம் என்பதையே
பழக்கமாகக் கொண்டிருக்கிறாய்.

ஏன், எதற்கு என
கேள்வி கேட்பதற்கும்
இடம், பொருள், ஏவல்
இருக்கிறது.

நில்லென உன்னைத்
தடுக்கவில்லை,
நீ அறியாதது அல்ல,
இனியும் என்ன அறியப் போகிறாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 10, 2008

காதல், கானகம் - பகுதி 8

முட்டைக்குள் இருந்து
முழி.

உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.

கடல் காண்
காடு காண்
நாடு காண்
நாட்டு மக்கள் காண்

ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்.

பயணத்திற்கு
புறப்படு என்னோடு.

கோமாவிலிருந்து
கண் விழித்தது போன்ற
உணர்வு, இன்னும்
உலகம் என்ன என்பதை
முழுதாய் அறியாததாய் தோன்றும்
முதல் அறிவு.

குச்சி வைத்து நடக்கும்
குருடர்கள் போல்
அவன்
கைப்பிடித்து
கால்கள் நகர்த்தினாள்.

நில்லப்பா,
இரண்டு வாரத்தில் திருமணம்.
இருவரும் எங்கே செல்கிறீர்கள்?
திருமண காரியங்கள்
ஏராளமாய் இருக்கிறது.
பத்திரிகை கொடுத்தது
பாதி பேருக்குத்தான்
மீதி வேலை
மிச்சமிருக்கு.
என்றார் தந்தை நாகய்யன்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 9, 2008

காதல், கானகம் - பகுதி 7

சரி வா கிளம்பலாம்.

எங்கே கூப்பிடுகிறீர்கள்?
எந்த இடம் எனக்கு
இந்த சொர்க்கத்தை விட
இன்பமாக இருக்கப் போகிறது?

தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நேரம்
இருந்துவிட்டுப் போகலாமே!

முட்டைகள்
கோழியின் சூட்டில்
பத்திரமாய் இருப்பது
போன்ற உணர்வு
பித்தாக்கி இருந்தது அவளை.

இத்தனை நாள்
இருந்தது போல்
இனியும் உன்னை
அடைகாத்து வைத்திருக்கப்
போவதில்லை நான்.

நீ வெளிவரும்
நேரம் வந்துவிட்டது.
பெண்கள் பருந்துகள் - ஆனால்
பறக்கத் தெரியாத
பெங்குயின்களாய்
மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

அனுபவமென்னும்
இறக்கைகளையும்
பறப்பதற்காய்
பயன்படுத்தத் தவறியவர்கள்.

எனது அனுபவத்திலிருந்து
இரண்டு இறக்கைகள்
உனக்காய்த் தருகிறேன் - அது
உன்னுடையதல்ல.
ஆனால் அது காட்டும்
அறிவில் வானம் ஏறலாம்
உலகின் விளிம்புகள் காணலாம்.

உனக்கான
இறக்கைகள்
இறக்குமதியாகும் வரை
முட்டிப் போராடு
முழு நீள வாழ்க்கைக்கு
அனுபவம் ஒன்றுதான்
அவசியம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 8, 2008

காதல், கானகம் - பகுதி 6

முத்தம் சில வோல்ட்டுகளை
மூளைக்கு அனுப்புகிறது
அதன் விளைவாக
அதிகமாக சுரக்கிறது
எச்சில் திரவம், இதனால் வாயின்
எல்லாப் பகுதியும் சுத்தமாகிறது.

முத்தம் கொடுப்பதால்
முகத்தில் முப்பத்து நான்கு
தசைகளுக்கும் மேல்
இயங்குகிறது.
முகம் முழுக்க
ஏற்படும் இறுக்கம் தளர்ந்து
மூப்பு குறைகிறது.

ஒரு கிலோ எடை
குறைக்க ஆராயிரத்துக்கும்
மேற்பட்ட கலோரிகள்
எரிக்க வேண்டும்.
ஆனால்
பதினைந்து நிமிட
முத்தம் மொத்தம்
முப்பது கலோரிகள்
எரிக்கின்றது.

முத்தத்தினால்
இரத்த ஓட்டம்
அதிகரிக்கிறது
அது மாரடைப்பையும்
தவிர்க்கிறது.

இப்பொழுது சொல்
நமது இளமை கூட்டி
மாரடைப்பைத் தடுக்கும்
முத்தத்தை ஏன்
முடித்தாய்?

முத்தத்தில் இவ்வளவு
சத்தான விஷயங்கள்
இருக்குமென்று தெரியாததால்.
இருப்பினும் இன்றைக்கு
இதுபோதும்!

கேடுகளும் இருக்கிறது
கேட்கிறாயா?

சொல்லுங்கள்.

உதட்டோடு
உதடு சேர்த்து
கொடுக்கும் முத்தத்தினால்
எச்சில் வழியே
சிற்சில நோய்க்
கிருமிகளும் பரவும்.
தெளிந்தாயா?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 7, 2008

வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

ஒரு தலைவன் பொங்கி எழும்பொழுது... இது ஒரு பாடலாய்...

கண்கள் தீப்பிடிக்க
கைகள் வாள்பிடிக்க
கொடுமை அழித்துவிடு வீரா
எங்கள் குறைதீர்க்க
ஏழை நலம் பெருக்க
எதிரிகளை வேரரறுக்க வாடா

எழுவாய் இடி இடிக்க
நடப்பாய் வெடி வெடிக்க
உன் சத்தம் பிளக்கட்டும் வானை

எதிரிகள் தொடை நடுங்க
அவர்கள் படை ஒடுங்க
இந்த யுத்தம் முடியட்டும் நாளை

மக்கள் பலமுண்டு
அவர்கள் அன்புண்டு
தொடர்ந்திடு உன் போரை
நித்தம் உணவுண்டு
நல்ல உடையுண்டு
விடிந்திடுமே நம் வாழ்க்கை

நிற்பாய் நிலம் அதிர
வெல்வாய் வான் ஒளிர
உன் வெற்றி ஒலிக்கட்டுமெங்கும்

ஆணை இடுவாய் விடிய
கொள்கை எடுப்பாய் அடைய
நம் வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

காதல், கானகம் - பகுதி 5

காதல் என்றாலே
கற்பனை ஊற்று
பொங்கி விடுகிறது உங்களுக்கு.

உண்மை.
காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.

அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு.

காதல் என்பது
உண்மையில்
உடம்பில் ஏற்படும்
இரசாயன மாற்றம்.

எல்லாமே
இரசாயன மாற்றம்தானா?
ஏன் இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
பொய்யாக கடிந்து கொண்டாள்.

அருகில் வந்தாள்
அணைத்தாள்
கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டி
கனிமுத்தம் கொடுத்தாள் பின்
தோள்களில் சாய்ந்துகொண்டாள்.

அதற்குள் ஏன்
நிறுத்திவிட்டாய்?
கண்ணே!
கணக்கிலடங்கா
பரிசுப் பொருட்களெல்லாம்
பெரிதல்ல ஒரு
முத்தத்தை கொடுக்கும்பொழுது.

அப்பாடா,
அறிவியல் விட்டு
வெளிவந்தீர்களா!

இல்லை
அறிவியல் தான்
வாழ்க்கை.
வாழ்க்கையை விட்டுவிட்டு
வாழ்வதெப்படி?

நீ கொடுத்த
அன்பு முத்தத்தின்
அறிவியல் அறிவாயா?
சொல்கிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 6, 2008

காதல், கானகம் - பகுதி 4

ஆதிக்கு துணையில்லை
அது பெருகிப் பிரியும்,
பிரிந்து பெருகும்,
புணர்ந்து மாறும்,
மாறிப் புணரும்.

புரியவில்லை,
பெருகியது என்றால், ஒன்றிலிருந்து
எங்கனம் இத்தனை உயிர்கள் வந்தது?

சொல்கிறேன் கேள்.
பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?

புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.

பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்.

..ம்.....ம் போதும், போதும் - என்னைக்
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு
காதல் என்று நீங்கள்
பெயர்மாற்றிக் கொண்டது போல்,
மதியை ஆதவள் என
மாற்றிக் கொள்கிறேன், போதுமா?

ஆம். அதுதான் சரி,
திருமணம் என்பது
தித்திக்கும் புதுவாழ்வு.
புதுப்பெயர் சூட்டிக் கொள்வதில்
புதிர் என்ன இருக்கிறது?

காதல், காதல் என்று எத்தனையோ
காவியங்கள் வந்தும், காதலென்ற
பெயரை அவனியில் யாருமே வைத்ததில்லை.
நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள்.

அதில் ஒரு சிறப்பு கேள்,
காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 3, 2008

காதல், கானகம் - பகுதி 3

காலைச் சூரியனின்
குவளை வெளிச்சத்திலும்
வெளிச்சம் பரவாத அறையின்
வாயில் திறந்தான்.

செவ்வான மேகம் போல
செவ்விதழில் கோபம்.
இளஞ்சூரியனின் வெப்பமொத்து
இசைப்பது போலவே கேட்டாள்
"இவ்வளவு நேரம் ஏன்?".

அடியேய்,
மதி நீ இல்லாமல் போனதால்,
மதியின்றிப் போனேன்.
சாவித் துவராம்
வழியே வந்த உன் மதி கொண்டுதான்
வாயில் திறக்க வந்தேன்.

காதல், காதல் என்று கூப்பிட்டது
காதில் விழவில்லையா?

இன்னும் சற்று நேரம் நீ கூப்பிடுவாயென்று
எண்ணியே சிலையாய் இருந்தேன்.

ஆரம்பித்து விட்டீர்கள்!
என்று கூறி உள்ளே வந்தவள்,
நீங்கள் பித்து பிடித்து போயிருக்கிறீர்கள்,
மதி அழைப்பதும் புரியாத வண்ணம்
மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்றாள்.

மதி என்று உனக்கு யாரடி
பெயர் வைத்தது?

பெண், சூரியன்.
பல காலமாய் வந்தாலும்
ஒவ்வொரு வருகையும்
ஒரு வரம்தானடி.
பெண்ணே
நீ பேசும் பொழுது
இளஞ் சூரியன்,
கோபம் கொண்டால்
பக்கச் சூரியன்,
காதல் கொண்டால்
மாலைச் சூரியன்.

ஆண்
பூமி போன்றவன்.
பெண் இருக்கும் இடத்தில்
அன்பு வெளிச்சத்தில்,
தழைத்து வாழ்கின்றான்.
தான் பெறும்
வெற்றியிலும், தோல்வியிலும்
பின்னாலும், முன்னாலும்
பெண்ணை வைத்துக் கொள்கிறான்

மேலும் கேள்,
சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி
பூமியிலிருந்து பிரிந்ததுதான் நிலா

சிறிது நிறுத்துங்கள். அப்படியானால்
சூரியனின் துணைவன் யார்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 2, 2008

அண்ணலே நீக்குவாய் இன்னலே

மீண்டும் உயிர்ப்பாய்
மக்கள் உள்ளத்திலே
அகிம்சை அறிவிப்பாய்
ஆங்கே அவர்களிடம்!

சாதிக்கும் மதத்திற்கும்
பேருக்கும் புகழுக்கும்
சண்டையிடும் ஈனர்களுக்கு
சத்தியத்தைப் புகட்டுவாய்!

கைத்தொழிலுக்கு ஆதரவாய்
கதராடை தரித்தாய்
குண்டூசி முதல் கோபுரம்வரை
முதலாளித்துவம் மட்டுமிங்கே மீதம்!

நோட்டுகள் தவறாமல்
நீ சிரிக்கிறாய் - கள்ள
நோட்டுகளிலும் தவறாமல்
நீ சிறக்கிறாய்!

சனநாயகம் விதைத்தாய்
சுதந்திரமும் கொடுத்தாயன்று
ஓட்டுப் போடுமிடத்தில்
உருட்டுக்கட்டை வீசுகின்றனரின்று

மீண்டும் உயிர்ப்பாய்
மக்கள் உள்ளத்திலே
அகிம்சை அறிவிப்பாய்
ஆங்கே அவர்களிடம்!

காதல், கானகம் - பகுதி 2

அப்பொழுதுதான் தியானத்தில்
அவன் அமர்ந்தான்;
கதவு தட்டும்
காதலி சத்தத்தில்
கண் விழித்தான்.

வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!

என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்.

நிலவின் மறுமொழி
மதி அவள் பெயர்.
அவள் ஒரு
அன்னம்.
மாநிறத்தில் மின்னும்
22 காரட் தங்கம்.
பேச்சிலே
பழக்கத்திலே
ஒரு குழந்தை.
காதலிக்கிறேன் என்பதை
கண்ணியமாக உரைத்தவள்.
தூறலாய் அன்பு பொழியும்
தேவதைகளில் ஒருத்தி.
மண்ணில் காதல் செய்த
புண்ணியங்களின்
ஒட்டுமொத்தப் பலன்.

பசும்பாலின் தூய்மை அவளது
பளிங்கு மேனி,
குடிபெயரும் அவளது
குவிந்தவாய் வார்த்தைகள்
குளிர் வாடைக் காற்று.
அவள்
பல நேரம் அவன் சேய்
சில நேரம் அவன் தாய்
இப்போதைக்கு அவனது
இரண்டு வருடக் காதலி,
இன்னும்
இரண்டு வாரத்தில் மனைவி.

(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 1, 2008

காதல், கானகம் - பகுதி 1

என் அன்பிற்கினிய நண்பர்களே, ஏறத்தாழ இந்தக் கவிதையை எழுதி 7 மாதங்கள் தாண்டிவிட்டன. ஒரு முழு நீளக் கவிதையாய் இதை அளித்த அன்று பகுதி பகுதியாக இட்டால் வாசிப்பது எளிது என்று பலர் கருத்துக் கூறினர். அதன் பொருட்டு அன்று எழுதிய அந்தக் கவிதையை எந்த மாறுபாடுமின்றி, சில எழுத்துப் பிழைகளை மட்டுமே திருத்தி அனுப்புகிறேன். இது மொத்தத்தில் 46 பகுதிகளாக வெளிவரும். தினமும் ஒன்று வீதம் மொத்தம் 46 நாட்களில் முடிந்துவிடும். இதில் சனி, ஞாயிறு, வேறு ஏதேனும் அவசர நிலை தவிர்த்து இதர நாட்களில் தொடரும். ஏற்கனவே எழுதி வைத்து விட்டதால், இதில் இடையூறு ஏதுமிருக்காது என நம்புகிறேன்.

இதில் எழுத்துப் பிழைகள், ஒரு கருத்து முன்னரும் பின்னரும் முரண்படுவது போல எழுதியிருந்தால் தயவு கூர்ந்து தெரியப் படுத்துங்கள். நன்றி.

காதல், கானகம் - பகுதி 1

காதல்.....காதல்.....
கதவு வழியே வரும்
அழைப்பு ஓசை....

காட்டை ஆளும்
கலியுகத்து இராமன்.
பொது அறிவுகளில்
புதைந்தவன்.
தரணியில் தனக்கென
தனி உலகம் கொண்டவன்.
காடுகளை
கடுமையாக நேசிப்பவன்.
மானுடம் மறந்தவர்களை
மனிதத்தோடு விமர்சிப்பவன்.
மனிதர்களையும்
மிருகங்களையும்
ஒருங்கே நேசிப்பவன்.
அன்பு என்பதின்
அடைமொழி இவன்.

பிறப்பதறியாமல் பிறந்து
பிணம்தின்னிக் கழுகளாய்
பணம் ஈட்டி
பின்னொரு நாளில் இறக்கும்
பாவி மனிதனாய் வாழ்வதிலென்ன பயன்?
என்றெண்ணுபவன்.

சந்ததியினருக்கு
சொத்து சேர்க்காதவன்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
அனாதையாக்கப் பட்ட
சில பெற்றோர்களுக்கும்
சில காலமாக
இவன் ஒரு தாய்.
"இனிய இல்லம்"
இத்தகு சொர்க்கத்திற்கு
இவன் தந்தையிட்ட பெயர்.

குழந்தை பிறந்ததும்
அழுவது பிள்ளையாகத்தான்
இருக்கவேண்டும்
வேறு யாராகவும் இருக்கக் கூடாது.
ஒருவன் இறக்கும் பொழுது
அழுவது சமுதாயமாக இருக்க வேண்டும்
அவனாக இருக்கக்கூடாது.

இவன் இறந்தால்
கண்ணீர் வடிக்க
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
அதுவே அவன் சொத்து.

அறிவுமதி
அவனது உண்மைப் பெயர்.
காதலி மதி மீது
கொண்ட காதலால்
காதல் என
பெயர் மாற்றிக் கொண்டவன்.

(தொடரும்....)

அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, September 26, 2008

இடம் ஒதுக்கப் படுகிறதுசில செருப்புகளுக்கும்
ஒதுக்கப் பட்ட பொருட்களுக்கும்
நடுவே ஒதுக்கப் பட்டிருந்தது
அந்த இடம்!

காண்பாரற்றுக் கிடந்தது
ஆங்கே ஓர் ஓவியம்
சற்றே சாயம் போன ஓவியம்
ஆங்காங்கே கொஞ்சம்
கிழிந்து போனதும் கூட
பல வெயிலுக்கும்
சில மழைக்கும்
வாடை காற்றுக்கும்
கிடந்து கிடந்து
நொந்து நொந்து
அந்த ஓவியம் பெரிதும்
பாதிக்கப் பட்டிருந்தது!

அந்த ஓவியத்திற்கு எதிரே
அழகிய புகைப் படமாய்
ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது
அதில் சில நிஜங்களின்
நிழல்கள் குடும்பமாய்
நின்று கொண்டிருந்தன
அதிலிந்த ஓவியத்தின்
நிழலும் பிரதிபலித்தது!

"செல்லம், சாப்பிடுடா கண்ணா,
இல்லேன்னா அப்பா வந்ததும்
என்னைத் திட்டுவாங்க" என்று
உள்ளே இருந்து வந்தகுரல்
வெளியே உள்ள ஓவியத்தின்
பழைய வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க வைத்தது!

ஓவியத்தின் அருகே
செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு
உள்ளே நுழைந்த காலடிச்
சத்தத்தில் விசும்பியது
சற்றே இப்பொழுது
பசிக்கும் அந்த சுமந்த வயிறு

"டேய், என்ன சாப்பிட மாட்டேங்குற
நல்லா சாப்பிட்டாதான்
அப்பா மாதிரி ஆகலாம்!"

அந்த ஓவியத்தின்
அருகே இந்தப் பெற்றோர்களுக்காக
ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது!

Thursday, September 25, 2008

தொலைந்து போயிருக்கிறதுவழிநெடுக விழி அமர்த்தி
வாழ்ந்த வாழ்க்கைதனை
நினைவூட்டி சுவைத்திடவே
நடந்தே செல்லலானேன்
ஊர் எல்கையிலிருந்து!

உயரே தெரிந்த பலகையொன்று
"உங்கள் வரவு நல்வரவாகுக"
என்றென்னை அன்போடு
எதிர்நின்று அழைத்தது
சொப்பனங்கள் சேர்த்தெடுத்தேன்!

எதிரே வேகமாய் வந்த லாரியில்
ஏற்றி வந்த மணலில் கொஞ்சம்
கண்ணில் விழுந்ததால் சற்றே
கவனமாக எடுக்க ஒதுங்கினேன்
தலையில் காய்ந்த சருகொன்று விழுந்தது!

தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில்
தண்ணிரின்றிக் கிடந்தது
சின்ன வயதில் எல்லோரும் கூடி
ஒன்றாய் விளையாடிய ஆற்றங்கரை,
வழிந்த கண்ணீரில் நனைந்தது அதன் கரை!

Tuesday, September 23, 2008

தண்ணீர் பயம்

கூட்டமாக ஓடிவந்து
கிணற்றில் குதித்து விளையாடும்
ஊர்க்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுகிறது நண்பனொருவன்
மரணித்த நியாபகம்!

Monday, September 22, 2008

அனாதைகள்

கூக்குரலுடனும்
பேரிரைச்சலுடனும்
அவலங்களாய்
அங்கலாய்ப்புகளாய்
அலைந்து கொண்டிருந்தன!

பூக்கடை ஓரத்தில்
பேருந்து நெரிசலில்
நீதிமன்றத்தின் வாசலில்
அரசியல் மேடைகளில்
ஆங்காங்கே அழுதுகொண்டிருந்தன!

எங்கேயும் அனாதைகளை
ஏனென்று கேட்க ஆளில்லை
எனினும், எனதல்ல என்று
கூறுவதற்கு எல்லோரும்
கூடினர், கூவினர்!

பெற்றோர்களே இவைகளைப்
பிறருக்குப் பிறந்தவையென
அடையாளமிட்டு
அலைக்கழித்தனர்
ஆசுவாசப்பட்டனர்!

பெற்றோர்களை அறிந்தும்
பேசமுடியாது முடமான
அனாதைகள் அனைவரையும்
அடையாளப் படுத்தினேன், அவைகள்
தோல்விகளும் தவறுகளும்தான்!

Friday, September 19, 2008

நடுநிசி

மழையின் குளிரில்
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது
வெள்ளிநிலா மறைத்த மேகம்

சில நாய்களின் சத்தம்
சில்வண்டுகளின் இரைச்சலோடு
கூடிச் சேர்ந்து மேலும்
குரூரமாக்கிக் கொண்டிருந்தது

கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு
யாருமில்லை எனினும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்

ஆந்தையின் இரைச்சலும்
வரதட்சணைக் கொடுமையால்
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்

அப்பா வரக்கூடும் அதிகாலையில்
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ.....

Thursday, September 18, 2008

நானாக இருந்தால்?

நியாய விலைக்கடையில்
சர்க்கரை இல்லை,
கூடுதல் காசுகொடுத்தால்
கொட்டிக் கிடைக்கிறது

எட்டு போட்டாலும்
ஓட்டுனர் உரிமமில்லை
லஞ்சம் கொடுத்தால்
உடனே கிடைக்கிறது

பாஸ்போர்ட் வாங்க
பல சான்றிதழும் போதாது
காவல்நிலையத்தில் கையூட்டு
கொடுத்தால் நிச்சயம் கிடைக்கிறது

மின்சாரமிழுக்க படிவம்
மட்டும் பத்தாது
காசு கொடுத்தால்தான்
கேபிளும், கம்பமும் கிடைக்கிறது

சில அரசு வேலையில்
சேர அறிவிருந்து பயனேது
சிலரின் சிபாரிசோ
சில்லறையோ இருப்பின் கிடைக்கிறது

வாகனத்தில் செல்ல
அவசியச் சான்றிதழ்கள் பத்தாது
வழிநெடுக கொடுக்க
வாய்க்கரிசியும் இருந்தால் போதுமானது

செய்தித்தாளில் ஒரு செய்தி
"லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; தொடர்கடத்தல்"
இதற்கெல்லாம் ஒருவன் மட்டும் கூடாது
இன்னும் நூறுபேர் வந்தால் போதுமானது

இது எல்லாம் அப்பாவின் புலம்பல்...

கடத்திச் செல்பவர்களில் நானும்
உண்டென்று அப்பாவிடம் சொல்லக் கூடாது
சொன்னால், எனைத் தடுத்துச் சொல்வார்
லஞ்சம் கொடுப்பதே மேலானது

Tuesday, September 16, 2008

என் இரவுகள் விடியலாம்

பூக்களின் பொன்னூஞ்சலாக
பார்த்துப் பழகிய அவள் முகம்
புதிர்களின் குடிலாக
புலம்பெயர்ந்தது கொடுமைதான்

அது கசக்கி எரியப்பட்டிருக்கலாம்
அல்லது திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்
இவையெதுவும் செய்யாமல்; எனது
இதயத் துடிப்புகளை
காதல் கடிதமென
காகிதத்தில் கொடுத்தமைக்கு
உன் தோழிகளின் நடுவே
அது கேலிப் பொருளாக
ஆக்கியமை புதிர்தான்

இதய அலைவரிசைகளை
இன்னும் புரிந்துகொள்ளாதவளா நீ
அல்லது காதலின் குணங்களை
அறியாதவளா நீ

காதலை வெளிப்படுத்த
காகிதமின்றி வேறு எது நாகரீகம்?
காகிதமென்று என்னிதயத்தை
கேலி செய்த உனக்கும் உன் தோழிகளுக்கும்
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்
என்றாவது ஒரு நாள்
உன் தோழியோ அல்லது நீயோ
காதல் வசப்படும் தருணம்
கனத்துப் போகும் உன் மனது!

என் காதலும் பொய்யல்ல
நின் ஏளனமும் பொய்யல்ல
இனியாவது விடியட்டும் இரவுகள்!

Friday, September 12, 2008

நான் மனிதனல்ல

எழுந்துவிட்டேன்
எதற்கும் துணிந்துவிட்டேன்
துவக்கம் அறியாமல்
தொடங்கிவிட்டேன்

அனல் தெரிக்கும்
நெருப்பாய் சிவந்துவிட்டேன்
கானலான நீராய்
இதயம் தொலைத்துவிட்டேன்

கால்படும் இடங்களில்
கரியாகிப் போகிறது புற்கள்
கண்படும் புறங்களெல்லாம்
கும்மிருட்டாய் தெரிகிறது பொருட்கள்

அகிம்சை, அமைதி யாவும்
அஸ்தமனமாகிவிட்ட பொழுதில்
குரோதம், கொலைவெறி யாவும்
குழைத்துப்பூசி நடக்கிறேன்

மரணம் காணாதவன்
மரணமறிவது இல்லை
அவமானம் காணாதவன்
என்னிலை அறிவதுமில்லை

என் வீட்டின் குலக்கொழுந்தை
காமப்பசிக்கு குதறியெடுத்து
சட்டத்தின் கண்ணில்
சிக்காமல் மீண்டுவிட்டான்

மீதமிருந்த மனிதமெல்லாம் தின்று
மிருகமாகிச் செல்கிறேன்
காமுகன் குரல்வளையை
கடித்துக் குதற செல்கிறேன்

மனிதனும் இறைவனும்
அவனை விட்டுவிட்ட போதிலும்
வீரத்துக்கும் என் கோபத்துக்கும்
விடியப்போவதில்லை அவனது அடுத்தநாள்

.
.
.
.

வடிந்தது கோபம்
முடிந்தது சாபம்
தெளிவானது என் பார்வை
சற்றே சிவப்பாகியும் இருந்தது

காவல்நிலையம் செல்கிறேன்
காமுகனைக் கொன்றதற்கு
கடுங்காவல் ஏற்கச் செல்கிறேன்
நான் மனிதனல்ல, ஆனாலும் மானமுள்ளவன்!

Monday, September 8, 2008

படங்களும் கவிதைகளும் - 4கரைந்திடட்டும் சோகங்கள்
~~~***~~~
உள்ளமெனும் மடை
உடைத்து வெள்ளமென
பொங்கி வரும்
புன்னகையில் கரைந்திடுமே
சேறெனத் தேங்கி நிற்கும்
சோகங்கள்!
கட்டுப்பாடு
~~~***~~~
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சுதந்திரங்களை விட
சுதந்திரமாக விட்டுவிட்டக்
கட்டுப்பாடுகள் தவறுவதில்லை!

Friday, September 5, 2008

தாவணிக் கவிதைகள்எல்லோரும் மழைநேரத்தில்
வானவில்லைப் பார்க்க
வானம் பார்த்து நிற்க
தாவணியோடு நீ
தரைதொட்டுத் தவழுவதைப்
பார்த்து வானவில்லென்று கத்திவிட்டேன்!

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

பாவாடைச் சட்டைகளில்
குறும்புகளை ஓரங்கட்டிவிட்டு
தாவணிக்கு நீ தாவியதும்
தவழ்ந்து வந்தது வெட்கம்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

மொட்டை மாடியில்
மழை நனைக்குமுன்
துணிகளை எடுக்க வந்த
நாமிருவரும் முதன்முதலாய்
சந்தித்த போது நனைந்தது
மழையால் துணியும்
காதலால் மனமும்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

நீ அவ்வப்பொழுது
நழுவிடும் தாவணியை
சரி செய்துவிடும் போதெல்லாம்
சரிந்து விழுகிறேன் நான்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

Wednesday, September 3, 2008

சோத்துக்கு எங்க போவேன்?

மாடு பூட்டி இழுத்த கலப்ப
மச்சியில கெடக்கு ஒரு ஓரமா
அடிமாட்டுக்கு போன காள
அடிமனசுல இருக்கு பாரமா

டிராக்டர் ஒண்ணும் வாங்கிப்போட்டு
டீசலதுக்கு ஊத்திப்புட்டு
உச்சிவான மழையத்தேடி
உழுதுபோட்டேன் நேரம்பாத்து

வெட்டவெளி கானல்நீரா
வானம்பூரா வெள்ளமேகம்
வயக்காட்டுல கிணத்துநீரா
ஊத்தி கிணறு காஞ்சு சோகம்

கதிரு துளுத்து மேல வர
வானம் பொழிஞ்சு ஊத்துச்சு
கடன் பணம் நெனவுக்கு வர
வயக்காட்ட மழ நெறச்சுடுச்சு

தண்ணி போக வழி வச்சு
தழைச்சு வந்தது கொஞ்சோண்டு
நெல்லெடுத்து சேத்து வச்சு
நெருத்தா நஷ்டம் கொஞ்சமுண்டு

சர்க்காரு வெலைக்கு வித்து அதை
கடன கொஞ்சம் அடைச்சேன்
எடுத்து வச்ச கொஞ்சம் நெல்லை
கஞ்சி வச்சுக் குடிச்சேன்

காலேசு முடிச்சு வந்த மவன்
காசு பணம் கேட்டு வந்தான்
கம்பூட்டரு வேலைக்கு போவணும்னு
பட்டணம் போக நிலையா நின்னான்

அங்க இங்க கேட்டு பொரட்டி
அவங்கம்மா தாலியையும் அடகுவச்சு
பட்டணத்துக்கு பொட்டி கட்டி
பையன அனுப்பி வச்சு நாளாச்சு

எங்கிருந்தோ வந்த இடி
எந்தலையில விழுந்தாப்புல
லட்சரூபா இருந்தா உடனடியா
வேலைன்னான், கடல் கடந்த தேசத்துல

பாதி நெலத்தை வித்துப்புட்டு
டிராக்டரையும் கொடுத்துப்புட்டு
பணத்த மஞ்சப் பையில சுத்திகிட்டு
பையன் கையில காச கொடுத்துபுட்டேன்

கொஞ்ச நாளு பொறு ஐயா
கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்
கம்பூட்டருதான் இனியெல்லாமய்யா
வயக்காடெல்லாம் அழிஞ்சுபோகும்னான்

வயக்காட்ட விட்டுப்போட்டான்
கம்பூட்டரு படிச்சுக்கிட்டான்
வயக்காடெல்லாம் அழிச்சுப்புட்டா
சோத்துக்கு எங்க போவேன்?

Monday, September 1, 2008

ஆத்தாவுக்கு ஆகவேணும் தாயாக

ஏத்திவச்ச அகல்விளக்கா எப்போதும் புன்சிரிப்பு
மழபொழியும் மேகம்போல மறையாத உன்னன்பு
பலகோடி வருசம் நான் செஞ்ச தவத்தால
சாமியே உருமாறி கெடச்சாளே தாயாக

ஊருகண்ணு படுமேன்னு பொத்திப் பொத்தி வளத்தா
கோழிக்குஞ்சும் ஆட்டுக்குட்டியும் துணைக்கு வச்சா
என்னப் பெத்த ஐயா சாமிகிட்ட போன போதும்
கண்ணுக்குள்ள வச்சு காத்துநின்னா எப்போதும்

பட்டியல்ல ஆட்டை பத்திரமா வளத்துப் புட்டு
சந்தைக்கு அனுப்பி வச்சி அழுதுறைவா - அதுபோல
மாப்பிள்ளையும் பாத்து வச்சு நகநட்டும் சேத்துவச்சு
கண்ணாலம்தான் கூட்டிபுட்டா, கைகழுவ நெனச்சுப்புட்டா

கரை கடந்து நானும் பட்டணமும் போயிப்புட்டா
கஞ்சித் தண்ணி குடிச்சியான்னு கேக்கயிங்க நாதியில்ல
ஒத்தப்புள்ள பெத்துப்புட்டு ஒய்யாரமா வளத்துப்புட்டு
ஒத்தையில நிப்பதுதான் உந்தலையெழுத்தா?
மருசெம்மம் எடுத்து ஆகவேணும் நானொனக்குத் தாயா!

Saturday, August 30, 2008

ஈசனுக்குப் பாதிதானே

ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே
பிறந்து வளர்ந்த இடம் மறந்து மணத்தாலிடம்
பெயர்ந்து வாழ்வதும் புதிய ஜனனமே ஆகிடும்

உன் காதலால் கசிந்து வளைகிறேன் நாணலாய்
என் காதலா நின்னன்புகண்டு பொழிகிறேன் தூறலாய்
பெண்ணிடத்து நீ கொண்ட பண்புதனில் சிலிர்க்கிறேன்
உன்னிடத்தே வாழ்ந்துன் மடியிலேயே மடிகிறேன்

புதியதென எல்லாமும் புலம்பெயர மாறுமே - இருப்பினும்
பழகியதென நீயதை மணம் முடிக்கும் முன்பே
மாற்றினையே மணாளா, தேனாய் என் காதிலின்று
ஊற்றினையே காவலா, புதிதாய் பிறந்தேனே நானின்று

சொந்தமென்று என்னை மட்டும் நம்பி நின்ற பெற்றோரை
உந்தன் உறவென்று போற்றி குடிபெயரச் சொன்னவரே
ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே!

Tuesday, August 26, 2008

படங்களும் கவிதைகளும் - 3நம்பிக்கை
~~o~0~o~~
நண்பர்களும்
நம்பிக்கையும் போதுமே
துள்ளிக் குதித்து
தூவானம் தூவும்
முகில் மேல் ஏற!புண்ணியமாகட்டும்
~~~o~0~o~~~
புன்னகை பூக்கும்
பூவிதழ்கள்தோரும்
பெருகிடுமே இன்பங்கள்
அருந்திடுமே துன்பங்கள்
மனிதக் கொடியில்
மடல் விரித்து
கொடியாய்ப் பரவும்
புன்னகைகளால் குளிரட்டும்
புண்ணிய பூமி!

Friday, August 22, 2008

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்
கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்
ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா
உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா
காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு
கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு
துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும்
தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம்

அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும்
ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும்
கண்ணு போன பெரியாத்தா
ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா
பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு
பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு

வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம
சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக
ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன
தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன
சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல
நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல

மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்)
என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன
பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன்
பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன்
கூத்துக் கேலி கும்மாளத்தோட
காதலும் வந்து சேந்துக்கிட
வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு
கேட்டுப்புட்டான் கேள்விய பட்டுன்னு
வீட்டுச் சம்மதம் வாங்கியாரேன்
கெடைக்காட்டி உங்கூட ஓடிவாரேன்ன்னு
சொல்லிப்புட்டு அழுது வடிச்சேன்
கண்ணீரோடு ஐயா பாசம் கொஞ்சம் கரைச்சேன்
படிச்சு முடிச்சு ஊரு வந்தே(ன்)
பாசம் கொஞ்சம் மறந்து வந்தே(ன்)

எப்படித்தான் புரிஞ்சுதோ பாவிமக நெனப்பு
கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச எனக்கு
பொண்ணு பார்க்க வருவாகன்ன
சீக்கிரமே கல்யாணம்ன்ன
மொத மொதலா என் மனசு முழுசா
அம்மாவத் தேடி அழுதுச்சுப் புதுசா
சீவி முடிச்சு சேல உடுத்தி சிங்காரமா
வந்து நின்னேன் ஒரு பொணமா

காப்பி கொடுக்க குனிஞ்சு நின்னேன்
மாப்பிள்ள கைபடவும் துடிச்சுப் போனேன்
பதட்டத்துல மாப்பிள்ள மொகம் பார்த்தேன்
பாவிப்பய நான் காதலிச்ச பையதேன்
ஓடிவந்து உன்னைக் கட்டிப்புடிச்சு நானழ
ஆத்தா நீ அழாதடான்னு சொல்லி நீயழ
ஆத்தா நியாபகம் அழிஞ்சுடுச்சு எம்மனசுல
அப்பனாத்தா நீதான்னு கண்ணீர்விட்டேன் நிக்கல

Thursday, August 21, 2008

படங்களும் கவிதைகளும் - 2பத்துநிமிடம்
~~~o~0~o~~~
அடர்ந்த வாகனப் புகையும்
அடங்காத நகர ஒலியும்
நீர்த்துப் போகும்
நீண்ட புல்வெளியில்
பத்து நிமிடமாவது
படுத்துக்கிட, பசுமையான நினைவுகளோடு!நினைவிலிட்டுக்கொள்
~~~o~0~o~~~
பகலவனின் கதிர்கள்
பாதம் உரசும்முன்
விழித்தெழுந்து
விண்ணில் மறையவிருக்கும்
விண்மீன்களுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு இன்றைய
செயல்களை நினைவிலிட்டுக்கொள்!

Tuesday, August 19, 2008

படங்களும் கவிதைகளும் - 1புன்னகை செய்!
~~~~~o~0~o~~~~~
வானத்தில் வண்ணவில்,
வயக்காட்டில் நிறைந்த நெல்மணிகள்,
குழந்தையின் சிரிப்பு,
பழுத்து உதிரும் இலை,
இவையாவும் கடக்கும்போது
இதழோரத்தில் புன்னகை செய்!
நடந்து பழகு
~~~~~o~0~o~~~~~
மடியின் கணினியில் உலகமும்
கையடக்க பேசியில் சுற்றமும்
குளிரூட்டி அறையில் வானமும்
சுருங்கிப் போன வாழ்க்கையில்
நண்பனுடன் சுகமாய் முப்பது
நிமிடமாவது நடந்தால் நன்று!

Monday, August 18, 2008

காதலின் உச்சம்
காட்சி: நெடுநாள் காதலர்கள் திருமணம் முடித்து கட்டில் அடையும் தருணம். அங்கே புதிதாய்ப் புரிதலுக்கு எதுவுமில்லை, ஆனால் புதிதாய்க் கொடுத்துப் பெற நிறைய இருக்கிறது. அங்கனம் இது ஒரு பாடலாய்.

[ஆண்]
காதலின் விறகெடுத்து
காமத்தின் தீ கொளுத்தி
குளிர்காயும் கண்ணே
காதலன் துகிலுறித்து
காதலின் கண்பொத்தி
உயிர்த்தீக் குளிக்கும் பெண்ணே

இச்சென்று முத்தமிட்டு
அங்கங்கே தொட்டுவிட்ட
ஆதிவாசிப் பெண்ணே
மிச்சமென்று வெட்கம்
அங்கங்களில் ஓட்டியிருந்தால்
அகற்றிவிடு அது இங்கே வீணே

மெத்தை வேண்டாம்!
இரை தேடிக் காத்திருந்த
புலி தேடி வந்த மானே
மோட்ச நேரத்தின்
காதல் வெப்பத்தில்
எரிந்திடும் அது தானே

[பெண்]
எரிமலையின் கணவாயில்
ஏளனமாய்க் கல்லெறிந்தால்
என்னவாகும் தெரியாதா
பெண்ணிவளின் மேனியில்
பெரிதாகக் காமமெரிந்தால்
துரும்பாவாய் புரியாதா

விண்ணிலிருந்து எட்டிப்
பார்க்கும் நிலவே
வெட்கம் கொண்டு மறையட்டும்
நம்மிலிருந்து எட்டிப்
பார்க்கும் தீயிலே காமம்
கரைந்து காதல் வாழட்டும்

நிலவின் மடியில்
நீள இரவு கழிக்கும்
சூரியன் நீயே
பொழியும் கதிரால்
மடியில் உயிர் ஒளிர்ந்தால்
நானும் இனி தாயே!

- ஒளியவன்

Monday, August 11, 2008

ஏமாற்றங்கள்பூக்கள் நிறைந்த
பாதைக்கு ஆசைப்பட்டே
பாதங்கள் பலவீனமாகிறது
சின்னஞ்சிறு கற்களுக்கே
சிதைந்து போகிறது பயணம்

வாசகர்களுக்கு ஆசைப்பட்டே
வாசிக்கப்படும் கவிதைக்கு
வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில்
பேனாவும் கண்ணீர் சிந்தி
பொய்யாக அழுகிறது

அள்ளி அனைத்து
பிள்ளை பெற்றுக்கொள்வதான
பெருங்கனவிலேயே வளர்கிறது
சொல்லப் படாத காதலுக்கான
சோகத் தாடியும்

முதல் மதிப்பெண்ணும்
முக்கியக் கற்பனையிலேயே
முகம் தெரியாமல் வலுவாகிறது
தற்கொலைக்கான காரணங்களும்
தாம்புக் கயிறுகளும்

தெருவெங்கும் தேடியலையும்
தேவதைகளின் தேடுதல்களிலேயே
திருமணங்களின் பொழுது
விவாகரத்திற்கான முதலெழுத்து
வெகுவாக எழுதப்படுகிறது

பிறந்த மகன்
பிறந்த மேனியிலிருக்க
லட்சக் கணக்கில் காசு கொட்டும்
லட்சியக் கற்பனைகளிலேயே
மகனின் இசையார்வம் வற்றிவிடுகிறது

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களே!

- ஒளியவன்

Sunday, August 3, 2008

நட்புப் பாலம்

Friday, August 1, 2008

விதவை

எட்டு வைத்ததிலிருந்தே
பொட்டு வைக்கும் பழக்கம்
பிறந்த மேனியிலிருந்தே
கரத்தில் வளையிட்டது வழக்கம்
தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
தொடுத்துச் சூடுவேன் தினமும்
வண்ண ஆடைகள் யாவும்
என்னில் உடுத்தினேன் நிதமும்

வயதின் பருவத்தில்
வாய்த்தது திருமணமும்
ஈராண்டு காலத்தில்
ஈன்றது ஒருமகனும்
காலத்தின் கோலத்தில்
கலந்து கணவருயிர் போனதுவே
சோகத்தின் சாபத்தில்
சிக்கியதென் வாழ்வதுவே

விழாக்களின் மேடையில்
வேலையில்லை ஒதுக்கினரே
வம்புதும்பு பேச்சினில்
வருந்தினேன் மகிழ்ந்தனரே
வெண்மேகமது உயிர்த்துளியில்
கார்மேகமென நிறம் மாறுது
பெண்தேகமது வாழ்வினில்
வண்ணமென்பது இனியேது?

விதவைக்கு மாப்பிள்ளையாய்
வேறெங்கும் ஆளில்லை
மறுமணத்தின் மணப்பெண்ணாய்
ஒரு கன்னியே கேட்கும் சில மாப்பிள்ளை
கற்பென்னும் வார்த்தைக்கு
விற்றுவிட்டீர் பெண்பாலை
விதவையென்னும் சொல்லுக்கு
விளக்குங்களேன் ஆண்பாலை?!

நன்றி: அதிகாலை இதழில் வெளியிட்டமைக்கு

Wednesday, July 30, 2008

விளக்கமறியா விளக்கங்கள்

பூவென்று நம்பி கையிலெடுத்ததில்
வண்டொன்றும் பூநாகமும்
தோன்றிச் சண்டையிட்டுக் கொண்டன!
வெள்ளை ரோஜாவிதழ்
மெல்ல மெல்ல சிவப்பாகின
நாளமுடைத்த குருதியினால்!

வழிந்த குருதியில்
புரிந்தது அதன்
வெப்பமும், வேட்கையும்.
தேனருந்த வந்த உங்களுக்கு
தேவையா இதுவென்றேன்.

வீசியெறிந்த அம்புகளை
திரும்பப் பெறமுடியாது
தன்னிலை விளக்கத்துக்குத் தாவின,
மீண்டும் அம்புகள் குமிந்தன!

அம்பு மழை முடிந்த பின்னர்
அமைதியானது இடம்
ரோஜா இதழில் மட்டும்
குருதி சிந்திய தடம்

என்றாவது அம்போடு
நானிருக்கையில் அன்போடு
எனைத் தடுக்க
வண்டும் பூநாகமும்
வருமென்ற நம்பிக்கையோடு நான்!

Tuesday, July 29, 2008

வாடி நிற்கிறது மலர்

நீண்ட நாட்களின்
மௌனத்தை முறித்து
வண்டமராத ரோஜாவை
செடியிலிருந்து பிரித்து
செல்வந்தனின் சேமிப்பாய்ச்
சேர்த்து வைத்தக் காதலோடு
காதலின் கணவாயில்
புன்னகையோடு காத்திருந்தேன்
காதலியின் கனவோடு
உதறலைக் களைந்திருந்தேன்.

வந்தவள் நின்றனள்
முடியாது என்றனள்
வேறொருவரைத் தேடென்றனள்...

செடியோடு சேரமுடியாத
பிரிந்த ரோஜாவாய் நான்.

Friday, July 25, 2008

மனிதம் கொல்லும் மனிதர்களே

பெங்களூரில் நடக்கும் கொடுமைகளுக்கு கொதிக்கும் மனதில் ஆறுதலுக்கு வழியின்றி....

மீளட்டும் இந்த பாரதம் படுகொலைகளிலிருந்து.

என் கோபம், என் கண்ணீர், என் பாசம், என் மகிழ்ச்சி எல்லாம் கவிதைதான். என் மொழி கவிதை.

-------------------------------------------------------

வெட்டினால் வளர்வதற்கு
இது மயிரல்லவே, உயிர்!
காசுக்காக குண்டு வைக்கும்
கயவர்களே!
உயிரின் விலையறியா மூடர்களே!

உன்னால் போன
உயிர் ஒன்றினைக் கூடத்
திருப்பித் தரமுடியா
தீயவனே!
உனக்குமொரு கேடா உயிர்?

கனவுகளும்
கடமைகளும்
குறிக்கோளும்
அன்பும்
அரவணைப்பும்
ஆற்றப் பெற்ற
மனிதனின் மூளையை
அழிவுக்கே பயன்படுத்தும்
அற்பப் பதர்களே
அறியீரோ குருதி சிந்தும்
அகோரக் குரலை!

கார்த்திகை தீபம்

நட்சத்திரங்களைத் தெருவெங்கும்
நட்டு வைத்தாற்போல தீபம்,
வானத்து தேவதைகளின்
வளமான ஆபரணமென
மின்னும் ஒளிச்சுடர்,
தீபத்தின் மெல்லிய வெளிச்சத்தில்
தேவதைகளாய் மாறிய நங்கைகள்,
காதுத் தோடுகளும் மூக்குத்திகளும்
கலங்கரை விளக்கமாக மாறி
கட்டிளங் காளைகளை
கப்பலாய் கரை ஒதுக்கும்,
இரவிலும் தெரியும் வானவில்லாய்
தெருவாசல் கோலங்கள்,
அகல்விளக்கு ஒவ்வொன்றாய்
அணையத் துடிக்கும் வேளையிலே
கரத்தால் அணைகட்டியே
காத்திடும் உணர்ச்சிகள் வெள்ளந்தி,
இனிப்புகளாக பண்டங்களும்
இல்லங்களும் நிறையும் தேன்சிந்தி!

Thursday, July 24, 2008

பட்டம் பறக்கிறது

மொட்டை மாடியில்
சுளீரென அடிக்கும் வெயிலில்
சற்றே கிடைத்த நிழலில்
நின்று கொண்டு
நான் பட்டம் விடுவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்

காற்றில் அங்குமிங்கும்
காட்சிதரும் பட்டத்தை
இரசித்த படியே நீ!

நீ வருவாயென்றே இதயம்
படம் போட்ட
பட்டத்தை வாங்கினேன் நான்!

படிச்சுப் பட்டம் வாங்குவான்னு
பார்த்தா, அடிக்குற வெயில்ல
பட்டம் விடுறானே இவனென என் தாய்!

வானவில்லாய் வந்து போகிறாய்

செப்புச் சாமானில் நீ
சமைத்துக் கொடுத்த
மிளகாய்த் தூள் குழம்பு ருசி
எந்தக் குழம்பிலும் வந்ததில்லை

குச்சி ஐஸ்சிலும்
சவ்வு மிட்டாயிலும்
சிவந்த நாக்கு
மாறவில்லை இன்றும்

எனக்காகவே நீ
பாவாடையோரத்தில்
ஒளித்து எடுத்து வரும்
கடலை மிட்டாய் சுகம்

ஆற்று மணலில் விளையாட்டும்
அந்தி வேளைப் பொழுதில்
திண்ணையில் கதையும் பேசிய
தருணங்கள் மனதிலேயே இருக்கிறது

பள்ளிக் கூடத்தின் சைக்கிள்
பயணத்தில், என் முதுகில்
எழுதிக் காட்டிய
எழுத்துக்கள் எனது ஆயுள்ரேகைகள்

நிழலாய் என்னுடன்
நீ இருந்த பொழுதின்
பெருமைகள் புலப்படுவதென்னவோ
வானவில்லாய் நீ வந்துபோகும்
இந்தப் பொழுதில்தான்.

சமைந்துவிட்டாயாமே?
சத்தியமாய்ப் புரியவில்லையெனக்கு!

- ஒளியவன்

Tuesday, July 22, 2008

தற்கொலை

கண்கள் அகலத்திறந்திருந்தும்
காட்சிகள் புலப்படவில்லை
புலிக் கூண்டுக்குள்
பசியோடு நானும் புலியும்
போராடுவது போலொரு உணர்வு
இறுதியில் மடியப் போவது
உறுதியாக நானென்ற எண்ணத்திலேயே
உடைந்து சிதறுகிறது நம்பிக்கை.

உலகமென்ன
வாழ்வென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
யாரும் எனக்கில்லை
யாருக்கும் நான் தேவையில்லை

பள்ளமும் பாம்புகளும் நிறைந்த
பாதையிலே ஒற்றை வெளிச்சமுமின்றி
செல்வது போலதான் என்வாழ்வு
அடுத்த நிமிடம்
கேட்கப் படும் கேள்விகளுக்கு
பதிலெங்கே இருக்கிறது
பாவியென தூற்றப்படுவதற்கு முன்
என்ன செய்யலாம்?

"இனியும் நீ உயிர்வாழ்ந்து
என்ன செய்யப் போகிறாய்?"
கணீர் குரல் வந்தது
குரல்வளை வழியாக அது வரவில்லை.

ஆம்,
தற்கொலை!
இதுதான் ஒரே வழி.

என் வாழ்வின் முடிவே
இன்னதுதானா?
தற்கொலைக்கு அடுத்த
தருணம் பூமியிலே
நானில்லை...
தேவையா இது?

"பயந்தால் புண்ணியமில்லை
பேதையே, துணிந்து தூக்கிடு"
மிரட்டியது அந்தக் குரல்.

நான் கோழையல்ல
நிச்சயம் தூக்குதான் ஒரே வழி.
கயிறு இல்லையே?
உயிர் போக்க எதுவழி?
புடவை இருக்குமே, அம்மாவின்
புடவை.

"இன்னுமென்ன தயக்கம்
இறுக்கிக்கொள் கழுத்தை, குதித்துவிடு"
அழைத்தது அதே குரல்.

காலடியில் இருக்கும்
கட்டையைத் தட்டிவிடவா?
கண்ணீர் கரைபுரண்டோடுகிறதே
எனக்குப் பிடித்த பல
விசயங்கள் கண்முன் வருதே
ஆனால் அவமானத்திலிருந்து
அவைகளெதும் காப்பாற்றப் போவதில்லை.

காசு கொடுத்தது வீணாய்க்
கரைகிறது என்றாய்
எருமை, கழுதை
எதுக்கு நீயெல்லாம்
இருக்கிறாயென்றாய்
இரொண்டொரு முறை
எங்கேயாவது போய்த்தொலையென்றாய்
என்னைப் பெற்றதற்கு
எருமையைப் பெற்றிருக்கலாமென்றாய்
படிக்காமல் விளையாண்ட
போதெல்லாம் அதட்டினாய்
அப்பாவிடம் சொல்லி
அடிவாங்கித் தந்தாய்.

தேர்வில் தேர்ச்சியடையவில்லை நான்
தொலைந்தேன் இன்று உங்களிடம்.
இனி உனக்கு தொந்தரவில்லை
இதோ தட்டப் போகிறேன் கட்டையை.
.
.
.
.
.

"அய்யோ....
அய்யோ....
எம்புள்ள
எம்புள்ள
என்ன செய்வேன்,
இப்படி செஞ்சுபுட்டானே பாவிமகன்"
பரிதவித்தாள் தாய்.

"நான் பாஸாகலம்மா,
நீ எப்படியும் அடிப்ப,
நான் போறேன்"
முற்றுப் புள்ளி வைக்காமல்
முற்றுப் பெற்றுவிட்ட
கடிதத்தின் முற்றுப்புள்ளியானது
கண்ணீர்.

[படிப்பென்பது அவசியம்தான், ஆனால் கட்டாயமல்ல. குழந்தைகளை அளவான எதிர்பார்ப்போடே வளருங்கள். பின்னர் அழாதீர்கள்]

Monday, July 21, 2008

சில தலைப்புகள்

வசப்படு
~~^o^0^o^~~
துவண்டு கிடக்கும் மனமே!
தூறி முடித்த வானம்
குழந்தையின் சிரிப்பு
காற்றோடு வரும் பூவாசம்
இவற்றுக்காவது
இசைந்து நீ வசப்படு.

மீதமாய் இருக்கிறாய்
~~^o^0^o^~~
உனக்குமெனக்குமான
ஊடலில் கழிந்து விட்ட
ஊணப்பட்ட இரவுகள்
முழுதும் தீர்ந்துவிடாத
மீதமாய் இருக்கிறாய்.

தழல் ததும்பும் கோப்பை
~~^o^0^o^~~
தழல் ததும்பும் கோப்பையென
தகித்துப் போனதென் மனது
ஏனோ என்னைவிட
எவனோ ஒருவனை நீ
உயிர்த் தோழனென்றபோது.

ஐம்புலன்
~~^o^0^o^~~
ஐம்புலனின் ஆளுமையும்
உனதருகாமையில் இழக்கிறேன்.

அழகுக் குறிப்பு
~~^o^0^o^~~
அழகுக் குறிப்புகளின்
அனிவகுப்புகளாக
பூத்திருக்கிறது என்
பூந்தோட்டம்.

நான் அவன் இல்லை

ஊறுகாய், கருவாடோடு
ஊரிலிருந்து வந்திறங்கினான்
உயர்பள்ளித் தோழன்.

"எங்க ஆத்தா, அய்யன்
உங்க அப்பனாத்தா
நம்ம ஆளுக அல்லாரும்
நீ நல்லா இருக்கியானு
நலம் விசாரிக்க சொன்னாக.

காலேசுல படிச்சு
வேலை கிடச்சு பட்டனம்
போனப் பொறவு ஊரு
பக்கம் ரெண்டு வருசம் வரலியப்பா

உனக்குப் புடிக்குமேனு
உங்க ஆத்தா
அதிரசமும் முறுக்கும்
ஆம வடையும் செஞ்சு
என்கிட்ட கொடுத்துவிட்டுருக்குடா"
என்றான் வெகுளித்தனமாக.

முக்கால் நீள கால்சட்டையோடும்
முடியில் ஆங்காங்கே
வண்ணத்தோடும்
வழிந்தோடும் எச்சில் போல்
உதட்டுக்குக் கீழே குறுந்தாடியோடும்
உண்மை அடையாளம் துறந்து
நாகரீகத்தின் வளர்ச்சியில்
நன்றாக மாறிப்போன நான்; அவனிடம்
"ஓ ஷிட், அப்படியா" என்றேன்.

"சார், நீங்க ஆர்டர்
செஞ்ச பிட்சா,
சிக்கன் பர்கர்" என்று
கதவு தட்டினான் பிட்சா
கார்னர் பையன்.

Saturday, July 19, 2008

நான் என்பதும் நீதான்

கானல் நீராகிப் போன
கணங்களோடு என் வாழ்வு
காயப்பட்டுவிட்ட மனதில்
களையப் படாமலிருப்பதுன் நினைவு
சிறகு முளைத்து
சீறிப் பறக்கும் வேளையிலே
ஒற்றைச் சிறகோடு
முற்றுப் பெற்றதென் பயணங்களே

தோட்டத்தின் மலர்கள்
தினம் தினம் பூத்திடும்
வாசம் மட்டும் உள்ளே
வராமல் எங்கோ போய்விடும்
காலைக் காப்பி முதல்
காட்சியெங்கும் நீயடி
மனைவியே நீ இறந்தபிறகும்
மண்ணிலென் வாழ்க்கை வீணடி

மீதமெதும் இல்லாமல் காலம்
மெல்ல அழித்திடுமோ நம் உறவினை
மிஞ்சிப்போனால் அது வென்றிடலாம்
மிச்சமின்றி அழித்தாலென் உயிரினை
இரண்டாம் திருமணத்தை
இதயம் நாடியதில்லை இது மெய்தான்
காமத்தைத் தாண்டிய நம்
காதலில் நான் என்பதும் நீதான்.

Thursday, July 17, 2008

நானும் எனது கணினியும்

எப்பொழுதுமே முறைத்துவிட்டு
எக்குத்தப்பாகவே இருக்கும்
எனது எதிர்வீட்டுக் காரந்தான்
இணையதளத்தில் வேறுபெயரில் என்னுடைய
நீண்டநாள் நண்பன் என்பது
தெரியாமலேயே தொடர்ந்தது நட்பு.

உண்மையிலேயே ஒரு கிராமமென
உலகம் கணினியில் சுருங்கினாலும்
உலகம் தெரியாமல்தான் போகிறது.

போதைப் பழக்கத்தைவிட
பெரிய பழக்கமாகிவிட்டது என் கணினி.

அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்

அருகிலிருந்தவர்
அணு ஒப்பந்தம் பற்றியும்
ஆட்சி மாற்றம் பற்றியும்
பக்கம் பக்கமாகப்
பேசிக் கொண்டிருந்தபொழுது
கவனத்தை ஈர்த்தது
கனத்த குரலொன்று.

பரபரப்பான பேருந்து நிலையத்தில்
பார்ப்பவர்கள் இடமெல்லாம்
தண்ணீர் வேண்டுமா
தண்ணீர் வேண்டுமாவென்றுக்
கூவிக் கூவி விற்றபடி
பாவி ஏழைச் சிறுவன்
பசிக்காக உழைத்தான்.

கல்வியென்ற ஒன்றை
கண்டிருப்பானா இவன்?
அணு ஒப்பந்தமும்
ஆட்சி மாற்றமும்
பற்றிய எந்தக் கவலையும்
மாற்றிடுமா இவன் வாழ்வை?

புறப்பட்ட பேருந்து மெதுவாக
பேருந்து நிலையத்தைவிட்டு
வெளியேறிய பொழுதும்
விழியகற்றாது பார்த்துக்
கொண்டே இருந்தேன் அவனை
கண்கள் அயர்ந்து
தண்ணீர் தாகத்தில்
தொண்டை வறண்டு
மயக்கமுற்று விழுந்தான் என்
மண்ணின் மைந்தன்.

Monday, July 14, 2008

இரவின் பிடியில்

இருட்டி விடத் தொடங்கிவிட்ட
இந்த ஞாயிற்றுக் கிழமையின் இரவு
திங்கட்கிழமையின் அலுவல்களின்
தொடர்ச்சியாகத் தொடங்குகிறது.

கணினி என் கைக்குள் இருந்தாலும்
கணினியின் பிடியில்தான் நான்,
பதினேழு அங்குல திரையில்
பக்கம் பக்கமாய் வேலைகள்.

விடிந்தால் தொடர்ந்துவிடும்
வேலைகளின் முடிவில்
இருட்டிவிடும் இரவோடு
இன்றியமையாததாய் அடுத்தநாள் வேலை.

வார இறுதியில் கணினியைவிட்டு
வெளியே உலகைத் தேடினும்
மாலைப் பொழுதின் தொடக்கத்தில்
முடிந்து போன ஒருநாளின் வருத்தம் மட்டுமே!

ஏதோ ஒரு இனம்புரியாத
ஏக்கத்தில் குறைந்து கொண்டிருக்கும்
இன்றைய இரவின் தூக்கத்தோடு குறைந்து
இருக்கிறது நாளைய வேலைக்கான சுறுசுறுப்புகள்.

நித்தம் உணவும், பாதுகாப்பும்
நிறைந்திருந்தும் வெறுமை பூண்ட
உயிரியல் பூங்காவின் விலங்குகளுக்கும்
உண்மையில் எனக்கும் வித்தியாசமில்லை.

Friday, July 11, 2008

மூன்று விரல்கள்

நண்பர்களின் தவறை
நேரம்தவறாமல் சுட்டிக்
காட்டிவிடும் எனது
கண்டிப்பான ஆள்காட்டி
விரல் திடீரென்று
குரல் எழுப்பியது.

"துலாவின் தன்மையோடு
துல்லியமாய் கட்டைவிரலும்
குற்றச்சாட்டுகளை சுமந்து
கொண்டு நிற்கும்
ஆள்காட்டி விரல் நானும்
அன்றி மீதம்
அனைத்துமே
உன்னை ஆராய
உன்னையே பார்த்து
நிற்கின்றதின் உண்மை
நிலை அறிவாயா?" என்றது.

யார் நீ?
யாவும் அறிந்தது போல்
என்னுள் இருந்து
என்னையே கேள்வி கேட்கிறாய்?

"நான் தர்ம தேவதை
நல்லவர்களுடன் தான் பேசுவேன்" என்றது

வாதத்தின் சாமர்த்தியத்தோடு
வழக்காடத் துணிந்துவிட்டேன்.
நான் நல்லவனெனில்
நீ ஏன் குற்றம் சுமத்துகிறாய்?

"ஊருக்கு நல்லதுகூறும்
உனையும் தூய்மையானவனாக்குவதே
என் எண்ணம்" என்றது

மேலும்...

"இயலாமையிலும் பொறாமை
இம்மியளவும் வந்ததில்லையா?
சின்னஞ்சிறிய விசயத்திற்கும்
சோகக்கண்ணீர் வடித்ததில்லையா?
உன் அவசர முடிவுகள்
உன்னுடனுள்ளோர்களைப் பாதித்ததில்லையா?
அன்பு இருந்தும் அவற்றை
அவர்களுடன் பகிர்ந்ததுண்டா?
குற்றம்சாட்டும் உனது கைகள்
களங்கமற்றதுதானா?" என்றது

வெட்கி நின்றேன்
வேதனைப் பட்டேன்
என்னைப் பற்றி நானே
உண்மையுரைப்பதை எப்படித் தடுப்பேன்
உதாரணப் புருஷனாகும் வரை?!

Thursday, July 10, 2008

உம் என்றால் கவிதை

தீக்குச்சியும் பெண்களும்
~~~o~0~0~0~o~~~
இரண்டுமே அவர்களின்
அனுமதியில்லாமல் அவ்வப்பொழுது
விளக்கேற்றக் கொளுத்தப்படுகிறது.

காதலும் மரணமும்
~~~o~0~0~0~o~~~
காதலில் சம்மதமும்
வாழ்க்கையில் கடமைகளும்
நிறைவேறாது போனால்
நிச்சயம் இரண்டுமே கொடியதுதான்.

குளமும் உழவன் வயிறும்
~~~o~0~0~0~o~~~
மழையின்றிக்
காய்கிறது
குளமும் உழவன் வயிறும்.

போக்குவரத்தும் ஓசோன் ஓட்டையும்
~~~o~0~0~0~o~~~
அறிவியலின் அறிவில்
பெருகிக்கொண்டே இருக்கிறது
போக்குவரத்தும்,
ஓசோன் ஓட்டையும்.

தன்னுடைமையும் நகமும்
~~~o~0~0~0~o~~~
வளரும் போது
அழகாய்த் தெரியும்
அடுத்தவர் மீதான தன்னுடைமையும்
நகமும், ஆனால் இரண்டுமே
நறுக்கப்பட வேண்டியவைகளே.

Wednesday, July 9, 2008

நானும் ஒரு நடிகன்தான்

உள்ளத்துக்கடியில் மறைந்து
உள்ளிருக்கும் வார்த்தைகளை
உதட்டு நுனியின் ஓரத்தில்
உருமாற்றம் செய்கிறேன்

இந்த உண்மையை
இருவரும் உணர்ந்திருந்தாலும்
வெளிப்படையாய்
வெளிக் கொணர்வதில்லை

என்னை மதிக்காதவன்
என்றைக்காவது, ஒரு
காரியத்திற்காக என்னிடம்
கலகலப்பாகப் பேசும்பொழுது

நானும் ஒரு நடிகன்தான்!

Tuesday, July 8, 2008

முகம் தேடித் தொலைகிறேன்

பிறந்த பொழுதே
பல அடையாளங்களோடே
பிறந்திருக்கிறேன்.

சாதி,
மதம்,
மொழி,
ஊர்,
நாடு,
குடும்ப கௌரவம்,

இவையாவும் என்னை
ஈன்றவரின் அடையாளங்கள்
இன்று என்னுடன்
ஒன்று சேர்ந்து கொண்டது.

அறிவும்,
அனுபவமும்
போக வேறெதையும்
பிச்சையிட வேண்டாமெனக்கு.

இவையன்றி நீங்கள்
இணைத்தவையாவும்
என்னைப் பிற மனிதனிடமிருந்து
எட்டி நிற்க வைக்கிறது.

எனது சமுதாய முகத்திரையை
எடுத்து எறிய முயற்சித்தும்
முடியாதவனாய் நிற்கின்றேன் - என்
முகம் பார்த்ததும்
நீ இன்னாருடைய மகன்தானே
நின் அடையாளங்கள் இதுதானே
என்று கேட்கும்பொழுதெல்லாம்
என் முகம் தேடித் தொலைகிறேன்.

Monday, July 7, 2008

உண்மை கசக்குமா?

நகைச்சுவையா படிங்க.......

தூரத்திலிருந்தே கோடித்
தூறலைப் பொழிந்ததுன் முகம்,
தாமரையாய்த் தெரிந்தது
தேன்சுரக்கும் உன் இதழ்,
விஜயனாக எனை ஆக்கிவிடும் உன்
விற்புருவம் எப்பொழுதுமே அழகு,
சுவாசம் இழுக்கும்
சீரான மூக்கினிலே நேசம் வரும்,
சுருள் முடிக்கடியில் இருக்கும்
சோடிக் காது மடல் இனிமை,
தூரத்திலிருந்தே உன்னிடம்
தொலைத்துவிட்ட மனதை
அதிரடியாய்ச் சொல்லிவிட
அதிகாலை வந்த நான்
ஒப்பனை இல்லாமல்
ஓய்ந்திருக்கும் உன் முகத்தால்
தூரப்பட்டு குழம்பிப் போய் நிற்கிறேன்,
தெரிவது நீயா உன் தாயா?!

Friday, July 4, 2008

சிறகடிப்புகள்

பெற்றோரின் பிம்பங்களில்
புதைந்து போன சுயத்தைக்
காண முடிகிறது

எல்லை இல்லா
எதிர்பார்ப்புகளின் சுமையின்
ஒரு மாத விடுப்பை
ஓரக் கண்கள் காட்டுகிறது

நாளையின் கவலைகளில்
நசுங்கிய நினைவுகள்
இன்றைய கனவுகளில்
இறக்கை வளர்த்தது புரிகிறது

அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது

கணக்குப் பூதங்களிலும்
காகிதப் பேய்களிலும்
பயந்து ஒதுங்கிய
புன்சிரிப்பு வாய்விட்டு
வெளியே வந்து வழிகிறது

ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.

Thursday, July 3, 2008

கூடு விற்ற பறவை

இருபது ஆண்டுகளாக
இந்த வீடும் என் அங்கம்.
நிலத்தடி உப்பு
நீரில் பெயர்ந்துவிடும் சில
சுண்ணாம்பைப் பார்க்கும்போது
சோகம் தொற்றிக்கொள்ளும்
எனது கண்களில்.

இந்த நிலத்தடி நீர்
இப்படி உப்பாய்ப்போனது
ஒரு வேளை நான்
ஓயாமல் சிந்திய
வியர்வைத் துளியாலிருக்கும்.

செங்கலின் சிவப்புகளில்
சின்னச் சின்னதாய்
சிந்திய குருதி கலந்திருக்கும்.

தோட்டத்தின் பச்சையில்
தினம்தோறும் தவறாது
நான் ஊற்றிய அடிகுழாய்
நீர் கலந்தே இருக்கும்.

மெத்தை சுகத்தை விட
மெருகேறிய இந்தத்
தரையில்தான் எனது
தினசரித் தூக்கம்.

அங்குலம் அங்குலமாக
அங்கமெங்கும் கலந்துபோன
வீட்டை விற்றுவிட்டு
வரதட்சணைக் கொடுத்துவிட்டுச்
செல்கிறேன் எனது
சொந்த ஊருக்கு.

இந்த வீடும்
இப்பொழுது புகுந்தவிட்டில்
இருக்கும் என் ஒரே மகளும்
இனி புதிய கைகளில்
இன்பமாய் இருந்தாலே போதும்.

Tuesday, July 1, 2008

பங்கு போடுங்கள்

என் விரல்களே
என் கண்களைக்
குத்தி நிற்கின்றன

என் குருதியாவும்
எங்கெங்கோ சிந்தி
தெரித்துச் சிதறுகின்றன

என் நிழல்களே
உடல்களை துரோக
வெயிலில் வாட்டுகின்றன

இதையெல்லாம் கண்டு
இகழ்ச்சியடையத்தான்
இன்னும் உயிர்
இந்த உடலில் ஒட்டியிருக்குதா?

சொத்துக்களைப் பிரிப்பதில்
சண்டையிடும் என் மக்களே
இறந்து விட்ட என் கணவரை
இடுகாடு வரையாவது
எடுத்துச் செல்லுங்கள்
என்னவருக்கு நானே
இடுகிறேன் கொள்ளி.

ஈன்ற இந்த
ஈனப்பிறவியின் வயிற்றையும்
பங்கு போட்டுவிட்டுப்
போய்விடுங்கள் அங்கேயே!

Monday, June 30, 2008

வசந்த காலங்கள்

அதிகாலை ஐந்து மணிக்கு
அனைவரையும் எழுப்பி
விடும் சின்னக் குழந்தை

குழந்தையை சமாதானப்படுத்தும்
குடும்பப் பெண்கள்

செய்திக்கும் கார்டூனுக்கும்
சண்டையிடும் தாத்தவிற்கும்
பேரனுக்குமான நிமிடங்கள்

காலைத் தேநீர்
கொண்டு வந்த தாயிடம்
முறுக்கு கொடு
மிச்சர் கொடு
அவனுக்கு என்று செல்லமாய்
அதட்டும் அப்பா

இன்னைக்கு சமையலுக்கு
இன்ன இன்னவென
பட்டி மன்றம் நடத்தும்
பாசமுள்ள சித்திகள்

இப்படி இரண்டு வாரமாக
இன்பமாய் இருந்த வீடு,
விடுமுறை முடிந்து
வீடு கிளம்பிய சொந்தங்களால்,
குழந்தையில்லா என் தனிக்
குடித்தனத்தை மீண்டும்
வழக்கமான அடுக்குமாடி
வெறுமையில் இருக்கும்
குடிலாக உருமாற்றிவிட்டது.

நினையாத நினைவு

பாதைகளிலேயே
பயணம் செய்யும்
உங்கள் வாழ்க்கையில்
உடன்பாடில்லை எனக்கு.

பயணங்களுக்கான
பாதைகளை மெல்ல
உருவாக்குவதில் மட்டுமே
உள்ளம் போடுகிறது கணக்கு.

திருமணம், குழந்தை,
தீண்டும் காமம்
இதிலெல்லாம் வீழாது
இருக்க விரும்புகிறேன்.

உழைக்கும் வரை
உழைத்து வாழும் வரை
வாழ்ந்து யாருக்கும்
வருத்தமில்லாமல் போகிறேன்.

என் கால்கள்
எங்கு செல்கிறதோ
அங்கே எனக்கொரு
அழகிய குடில்.

பள்ளம் வரினும்
வெள்ளம் வரினும்
அழியும் உலகில்
வாசிப்பேன் பிடில்.

எண்ணத்தின் போக்கில்
வண்ணத்துப் பூச்சியாய்
இயற்கை அழகில்
குடிப்பேன் தேன்.

இன்ப துன்பத்தில்
இன்னும் தவித்தால்
என் வாழ்க்கை
எங்கும் வீண்.

சிறகு முளைத்ததும்
பறந்திடும் பறவையாய்
துளிகள் பிறந்ததும் மேகம்
துறக்கும் மழையாய் நானும்.

Saturday, June 28, 2008

விளக்கணைப்பு

கூடியிருந்த கூட்டத்திற்கும்
கடமை தீர்ந்துவிட்ட
பெற்றோர்களுக்கும்
புரியவில்லை வாழப்
போகிறவள் நான்தான் என்று.

அம்மாவின் தீக்குளிப்பு
அரங்கேற்ற விளக்கங்களிலும்
அப்பாவின் தற்கொலை
அவசரப் பிரகடனத்திலும்
இறந்து போனது மட்டும்,
இன்னும் நினைவிலிருக்கும்
என் காதல்தான்.

காத்திருந்தக் காதலனின்
கதியென்னவென்றுத் தெரியாது,
தாடியுடன்; முடிந்தால்
குடிபோதையுடன் ஏதோ
ஒரு மதுவிடத்தில்
ஒட்டுமொத்தப் பெண்களும்
இகழப்படலாம்
இந்தப் பெண்களே
இப்படித்தான் என்ற
அவச்சொல்லுக்கு நான்
அடையாளமாகிவிட்டேன்.

சாதிக்கும், கௌரவத்திற்கும்
சோர்ந்து போய்விட்ட
காதல்களில் எனது
காதல் எத்தனையாவது
என்று தெரியவில்லை.

இனி இன்று நடக்கப்போகும்
இந்த முதலிரவில்
என் காதலன் முகம்
எங்கோ மறையுமா?
அது மறையவில்லையெனில்
அணிந்து கொண்ட தாலிக்கும்
விவரமறியாத கணவனுக்கும்
வெட்டுகின்ற குழியல்லவா?

இங்கே அணையப்போகும்
இந்த விளக்கோடு
எந்தன் காதலின்
எல்லா நினைவுகளும்
அழிந்து போகட்டும்
அங்கே தவிக்கும்
என் காதலனுக்கு
என்றுமே எந்தன்
நிலை தெரியவேண்டாம்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal