என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, April 24, 2008

சின்னஞ்சிறு வரிகள்

அருவி
---------
விழுந்தாலும்
எழுந்து ஓடுகிறது
நம்பிக்கை.

சூரியனே!
-------------
இத்தனை ஆண்டுகள்
எரிந்தும் தீரவில்லையே
எரிபொருள்.

பூமி
-----
பிரபஞ்சத்தின்
சின்னஞ்சிறிய
சோதனைக் கூடம்.

வானம்
---------
சிந்தனைக்கு
அப்பாற்பட்ட
அற்புத இடம்.

மழை
-------
எச்சில் தெறிக்க
சத்தம் போட்டு அழுகிறது
மேகம்.

சூரியக் குடும்பம்
----------------------
யாருடைய
பையிலிருந்து விழுந்த
கோலி குண்டுகள் இவை

பிச்சைக் காரர்
-------------------
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.

மருத்துவர்
-------------
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.

நோய்
--------
உடலையும், உடனுள்ளோர்களையும்
உணர்ந்து கொள்வதற்கான
உன்னத வழி.

கனவு
-------
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.

கற்பனை
-----------
நிதர்சனங்களை
ஓரந்தள்ளினாலும்
ஒரே மகிழ்ச்சி.

பணம்
--------
கையடக்க
வயிற்றை நிரப்புவதற்கான
வாழ்க்கைப் போராட்டம்.

பூட்டு
-------
மனித குலத்தில்
முளைவிட்ட
முதல் சாபம்.

சாவி
------
சுயநலத்தின்
சின்னஞ்சிறிய
ஆதாரம்.

விஞ்ஞானம்
---------------
அழிவையும்
அணுகிக் கொண்டிருக்கும்
அற்பப் பயணம்.

குழந்தை
-----------
மதம், சாதி
மற்றுபிற திணிக்கப்பட்டதை
அறியாத பிஞ்சு.

மரணப் படுக்கை
----------------------
மறந்துவிட்ட
கடமைகளை
நியாபகப் படுத்தும் தருணம்.

விவாதம்
-----------
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.

விவாகம்
-----------
கடமைகளைத்
திணிக்க முயலும்
அன்புப் போராட்டம்.

காதல்
-------
மனங்களின் இணைப்பு
சில சமயம்
மதங்களின் உடைப்பு.

சொத்து
----------
சந்ததியை
சோம்பேறியாக்கும்
சேமிப்பு.

குடும்பம்
------------
உலகின் விருந்தாளியை
சொந்தம் கொண்டாடும்
சில உள்ளங்கள்.

கடமை
---------
நாமாக
ஏற்றுக்கொண்ட
கட்டாய வலி.

ஆடை
----------
குளிர் காக்க
வந்து மானம் காக்கவென
உருமாறிய பொருள்.

தீர்ப்பு
--------
சமுதாயத்தின்
அளவுகோல்களுக்குள்
அடைக்கப்பட்ட ஞாயம்.

ஹைக்கூ முயற்சி

1.
நான்கு வருடமும்
நான்கு நொடியாகியது
கல்லூரியின் இறுதி நாள்.

2.
மறந்துவிட்ட பழைய
காதலின் எண்ணங்கள்
சன்னோலரப் பேருந்துப் பயணம்.

3.
மேனிதொடும் வெளிநாட்டின்
மழைத்தூறல் நிணைவெங்கும்
ஊரிலிருக்கும் குழந்தையின் ஸ்பரிசம்.

4.
அப்பாவின் கண்ணில்
ஆனந்தக் கண்ணீர், எனக்கு
வேலை கிடைத்து விட்டது.

5.
இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

6.
தொலைபேசி அருகிலேயே
தாய், விமானத்தில்
நான்.

7.
தெருவில் வீட்டின் தூரம்
உணரவைக்கிறது அடக்கமுடியாத
செறித்துவிட்ட தண்ணீர்.

8.
சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
அரைப்பரீட்சையில் தேராத
மதிப்பெண் அட்டையுடன் நான்.

9.
எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்.

10.
நுழைகின்ற வீட்டில்
நிறைந்திருக்கும் வெறுமை
அம்மாவின் மரணம்.

Saturday, April 19, 2008

தமிழ்ப் புத்தாண்டு

புத்தாண்டு என்பதென்ன?
புது வருடத்தின் தொடக்கமா? - அங்கனம்
பூமியின் முதல் வருடம் எது?
பூக்கும் மலர்கள் கொண்டாடுகிறதா அதை?
பிறகு மனிதன் கொண்டாடுவது எதற்கு?
பிறக்கின்ற வருடத்தின் சிறப்புதான் என்ன?

இதோ கூறுகிறேன் கேளுங்கள்...

தொலை தூரத்திலிருந்து வந்த
தொலைபேசி அழைப்பு கூறுகிறது
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
திடீரென தமிழோசை, காணும்
தொலைக்காட்சி எங்கும்
தொலைந்துபோன தமிழை தேடிக்கொண்டு.

முழுநீளப் புடவையில் அங்கம்
மறைத்துக் கொண்டு
மனக்க மனக்க வரும் உரையாடலைப் புரியும்
மகளிரின் தமிழ் வார்த்தைகள் இத்தனை நாள்
மறைந்து போனது எவ்வாறு? அல்லது
மறந்து போனது எவ்வாறு?

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழை
அரிதாக பேசிக் கேட்கும்
அதிசயம் நடக்கத் தேவை புத்தாண்டு.
அறை எண் இன்னது என
அழகு தமிழில் பேசுபவர் தமிழ்
அவணியில் எத்தனை பேர்?

ஒரு இனத்தை அழிக்க போர்
ஒன்றும் தேவையில்லை
ஓயாத மழை தேவையில்லை
ஒடுக்கிவிடும் காட்டாட்சி தேவையில்லை- பின்னர்
ஒழிப்பது எங்கனம்? - ஆம்
ஒழித்துவிடு அந்த மொழியை

மொழி என்பது ஒரு அடையாளம்
மொழி என்பது ஒரு சமுதாயம்
மொழி என்பது ஒரு கலாச்சாரம்
மொழி என்பது ஒரு சம்பிரதாயம்
முழுவதும் இதை மறந்துவிட்டால்
மரித்துவிடும் தமிழ் இனம்.

மெல்ல மெல்ல செய்
மொழிக்கலப்பு
மொழியென்று மார்தட்டுபவனை
மடந்தையைப் போல் பரிகசி
மாற்று கலாச்சாரம் பழகுவர்
மருகி அழிந்துவிடும் அடையாளங்கள்.

கத்தியின்றி இரத்தமின்றி
கரைந்துவிடும் அந்த இனம்
காலச்சுவடியில் படிந்த
கதையிது கேளிர்!
கரைந்துவிட்ட ஆஸ்திரேலிய மொழியும்
கானலாகிவிட்ட அவர்களின் அடையாளங்களும் 230.

இப்படியே தமிங்கலம் பேசினால்
இருநூறு ஆண்டில் தமிழ் அழியும்
இதைத்தான் வேண்டுகிறீரா தமிழர்களே?
இல்லத்தில் கூட ஆங்கிலம் பேசிக்கொண்டு
இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் எத்தனை?
இனிய தமிழ் கல்லாத தமிழர்கள் இங்கு எத்தனை?

தமிழைப் பழித்தவனை
தாய்தடுத்தாலும் விடேன் என்ற
தமிழன் தொலைந்தது எங்கே?
தமிழிசை எங்கே?
தண்ணீருக்கும் சண்டையிடும்
தமிழனின் அவலநிலை எவ்வாறு?

பாரதியே போதும் உனது
பொய்யான சமாதியின் உறக்கம்
பொங்கி எழு, உன் சாம்பலோடு சேர்ந்து
புறையேறிப்போன தமிழுக்கு
புத்துயிர் கொடுக்க மீண்டும்
பிறந்து வா! புரட்சி பாடு!

அன்று நீ கண்ட தமிழ்
அறிஞர்கள் பலர் மடிந்தனர்
அடையாளம் இழக்கும்
அபாயத்திலிருக்கும் மீதி தமிழர்களை
அடைகாக்க வா!
அதுவரை தமிழ்ப் புத்தாண்டாவது கொண்டாடப் படட்டும்!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நட்பின் விவாகரத்து

பூமியின் பதினைந்து கோடி சதுரநிலப்
பரப்பில் எங்கிருப்பாயோ
தெரியாது - ஆனால்
தெளிவான நட்பு மட்டும்
உள்ளத்தில் என்றும்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.

இவ்வளவு நாள் பேசியது
இன்றுடன் முடியப் போகிறது.
உனக்குத் திருமணம் - இனி
நம் நட்புக்கு விவாகரத்து.
சமுதாயச் சிக்கலில்
சிதறிய நட்பில் இதுவும் ஒன்று.

ஆணும் பெண்ணும்
அன்போடு பழகுவதே
காதலில்தான் முடியும் எனக்
கதைத்த சமுதாயம் எங்கே?
அவர்கள் முகத்தில்
அறைவதாகட்டும் உன் திருமணம்.

நாம் பேசும்போதெல்லாம்
நம்மை பழித்த மக்கள்
இன்று நம் நட்பை
இனங்காணட்டும்
ஆணும், பெண்ணும் நட்புடன்
அவனியில் பழகமுடியும் என உணரட்டும்.

உனது திருமணத்தின்
உற்சாக வெள்ளத்தில்
எனக்கொரு இடமில்லாமல் போனதை
எண்ணி வருத்தப்படாதே!
மனமுவந்து நான் வாழ்த்துவது உன்
மணவறைக்கே வந்து சேரும்.

நான்கு வருட கல்லூரி
நாட்களில் பேசியதெல்லாம்
காதினுள் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது
நாம் பட்ட அவமானங்களும்
நடுநடுவே வந்து செல்கிறது.

திருமணக் கூட்டத்தில்
தொலைந்துபோன பேனாவாய்
போகட்டும் நமது பேச்சு
பாசமுள்ள மனதில் ஆழ ஒரு
குழிதோண்டி புதைத்துவிடடி
குதூகலமான நமது உரையாடல்களை.

எங்கே இருப்பாய்
எப்படி இருப்பாய்
பிள்ளைகள் எத்தனை இருக்கும்
பெயர் என்ன வைத்திருப்பாய்
மரணத்தின் ஒரு நொடிக்கு
முன்னராவது இனி சந்திப்போமா

என்று எண்ணியே
எனது இரவு இன்று
வெள்ளையாகிவிட்டது
விடியலும் வந்துவிட்டது.
நிச்சயம் என்னை மறந்திருப்பாயோ
நீ என்று மட்டும் எண்ண மாட்டேன்.

உன் கணவனுக்காவது
உண்மையான நட்பு
புரியுமெனில் ஒருமுறை
புதைந்துவிட்ட நம் கதையைக் கூறு
மரணத்திற்கு முன் ஒரு
மின்னஞ்சலாவது அனுப்பு, நலம் என்று!

இளைஞனே...

பிரபஞ்சத்தின்
கோடிக்கும்போ,
புல் நுழையா
இடத்தில் நுழை,
மாம்பழ வண்டு
போல் பிழை,
கருமேக மின்னல்
கிழிசலாய் கிழிபடு,
கோபம்கொண்ட சூரியனாய்
விண்ணைச் சுடு,
துன்பச்சேற்றிலும்
தாமரையாய் இரு,
அமாவாசையின்
பின்பிறையாவாவது மரு,
புதைந்தாலும்
நிலக்கரியாய் எழு,
விழுந்தாலும் ஆலம்
விதையாய் விழு,

இறுதியில்...

பூமி நனைந்தபின்
தோன்றும் வானவில்லாவாய்,
சிறிது நேரம்தான் சிதறி விடாதே
மறுபடி வருவாய் மறந்து விடாதே,
காதலை சிலநாட்கள் தள்ளி வை
பெற்றோரை பிடறியிலாவது நிறுத்து,
வாழ்க்கையை விரட்டிப்போ
வாழ வழி கிடைக்கும்!

Friday, April 18, 2008

பட்டாளம் போறேம்புள்ள.....

ஆத்தங்கர ஓரத்துல ஒய்யாரமா நிக்கும் புள்ள
அப்பனாத்தா மெச்சும் வண்ணம்
சேதி ஒன்னு சொல்ல வந்தேன்.
விவரம் ஏதும் கேட்காம
வாடி புள்ள ஒதுங்கி இங்க.

வாளித் தண்ணி எடுத்து
வெளுத்துப் போட வந்த என்ன
ஓரம் ஒதுங்க சொல்லும் மாமா
உனக்கு புத்தி மாறிப் போயிடுச்சா?
இல்ல நான் சொன்னதுதான் மறந்து போச்சா?

பொம்பள புத்தி பின்புத்திங்கற
பழமொழிய நீயும் நெசமாக்காத.
சொல்ல வந்தத கேளடியேய்!
மாமன் சொல்லுறத கேட்டுப்புட்டு
மயங்கிடாத என் கிளியே.

என்ன மயக்க வந்த மாமா
உன்னிடம் மயங்குவது என்ன புதுசா?
சேதிய சுருக்கி சொல்லு,
சினங்கொண்ட எங்கய்யா வருமுன்னே
வந்த தடம் ஒதுங்கி நில்லு.

புத்தி தெளிஞ்சு மாறிப்புட்டேன்.
பட்டாளம்தான் போகப்போறேன்,
பீரங்கி புடிக்கப் போறேன் புள்ள.
நாட்டக் கொஞ்சம் காத்துப் புட்டு, காசு பணமும்
சேத்துக்கிட்டு, வருவேன் உன்னைக் கைப்புடிக்க.

உலகந்தான் சுத்துதா, இல்ல கிறுக்கு மக
உள்ளந்தான் சுத்துதா?
நல்ல சேதி சொல்லுறேன்னு, உன் சாவுக்கு
நாள் குறிக்க வந்தீகளா?
பட்டாளம் போறேன்னதும் என் பாதி உசுறு போயிடுச்சு.

அட கிறுக்கு மக பெத்த புள்ள - இப்போ
அழுது உறையும் காரணமென்ன?
நாட்டக் காப்பாத்த போகும் போது
நாணி நிக்கும் தலையுமென்ன?
வீரத் திலகமிட்டு வழியனுப்படி என் அத்த மகளே.

நீ புத்தி மாறி வரும்போது
முட்டு கட்ட நானும் போட்டா,
விளங்குமா உம்பொழப்பு? இனி
விடியல் வரட்டும் நம் வாழ்வுக்கு.
நீ வரும் வர மனச கல்லாக்கி வைப்பேன்.

பொறுப்பான மனுசனா என்ன மாத்தி வச்சு
புழுங்கி இப்போ போவதென்ன?
நித்தம் உன்னை நினைச்சுக்குவேன்
நெஞ்சுல உரம் கூட்டிக்குவேன்.
காலத்தோட உன்னை கைப்புடிப்பேன், இது சத்தியன்டி.

உன்னக் கிளம்ப சொல்லிப்புட்டு
பொலம்பி நானும் அழுவலாமா?
நித்தம் உன்னை எதிர்பார்ப்பேன் - உனக்காக
நிதமும் ஒரு விளக்கேத்தி வைப்பேன்.
காதல் ஒன்னும் குத்தமில்லனு காட்டிப்புட நீயும் வந்துடைய்யா.

உலகம் 2200

பிரசவத்திற்கு வருந்தி ஒரு வேதியல் குழாயில்
பிறந்த குழந்தையில் நானும் ஒருவனாயிருப்பேன்.
மூளையைத் தவிற இதயம் போன்ற உறுப்புகளை
முறையாக செயற்க்கையாய் மாற்றி இருப்பர்.
என் வீட்டில் இருக்கும் இயந்திரம்
எனக்குப் பால் கொடுக்க மறந்திருக்காது.
ஆடையிலிருந்து செல்லும் சமிஞ்ஞைகளுக்கு ஏற்ப
அலுவலகத்திலிருந்து தாய் இயந்திரத்துக்கு கட்டளைகள் பிறப்பிப்பாள்.

புத்தகங்கள் இல்லாத பாடசாலையில் கணிணியிலேயே
புதுக்கலைகள் பயில்வேன்.
என்மீது என் அருகிலிருப்பவளுக்கு ஏற்படும் காதலை
எனது கணிணி துல்லியாமக சொல்லிவிடும்.
இருவரின் குணங்களை வைத்து எங்களுக்கு எல்லாப்
பொருத்தங்களும் பொருந்தி இருக்கிறதென்று இயந்திரம் சொல்லும்.
இணையதளத்திலேயே எங்களது திருமணம் பதிவாகும்
இல்லறம் நடத்தத் தேவையான இயந்திரங்கள் வாங்குவோம்.

முதலிரவு கழிக்க வானம் செல்வோம்
முடிந்தால் அங்கிருந்து வீட்டுக்கு ஏதாவது வாங்கி வருவோம்.
எங்களுக்குப் பின்னால் பூமி தெரியும் வண்ணம்
எடுத்த புகைப்படத்தை அலங்காரப் பொருளாய் வைப்போம்.
காலைக் கடன்கள் மட்டும் மாறியிருக்காத உலகில்
கடன்களை முடித்துவிட்டு பணியாற்றச் செல்வோம்.
சில இயந்திரங்களுக்கு எஜமானனாய் நான்,
எனக்கு எஜமானாய் ஒர் இயந்திரம் இருக்கும்.

இட்ட நெல் விதை மூன்றே நாளில் அரிசியாகும்
இயற்கை என்பதே நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.
கணிணியில் வைரஸ் பரப்புவதே தீவிரவாதமாக இருக்கும்
கணப்பொழுதில் நாட்டையே குலுக்க இப்படியும், போர் வரும்.
உலகப் பொதுமொழி ஒன்று பேசப்பட்டு வரும்
உலகில் பல மொழிகள் இருந்ததை வரலாறகத்தான் கண்டறிய முடியும்.
இந்தியா தனக்கான வான் திடல் இட்டுருப்பதாய் செய்தி வரும்
இதன் மூலம் வான் சென்றுவரும் செலவு பாதியாய்க் குறையும்.

கால இயந்திரம் ஒன்று மட்டும்
கண்டு பிடிக்கப் படாமல் இருக்கலாம்.
கணவில்லாத நித்திரை தரும்
தலையனைகள் கண்டிப்பாக இருக்கும்.
எல்லாமே இருக்கிறது; இருந்தும்
எதைத் தேடி அலைகின்றோம் என்று தெரியாது.
கணிணிகள் இல்லாத வாழ்வுதான் சுகமென்று
காலம் கடந்த ஒரு ஞானம் வரும்!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal