என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, May 13, 2009

காதல், கானகம் - பகுதி 46

தப்பிக்க நினைத்தவர்களை
தடுத்தான் காதல்.

நீங்கள் யாருக்காகவோ
நிலை தடுமாறி இந்தக்
காரியம் செய்தீர் - இனி உங்களை
காத்திட எவரும் வரப் போவதில்லை.

தத்தம் பெயர்களுக்காகவும்
தன் சுயலாபத்துக்காகவும்
யாரோ செய்கின்ற சூழ்ச்சியில்
இன்று நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்.

உங்களால் பயனடைந்தவன் இன்று
உங்கள் உயிர் காக்கப் போவதில்லை.

துப்பாக்கியல் எந்த நாடும்
தனது நிம்மதியான சுதந்திரம் பெறவில்லை
நீங்கள் வாழ என்னால்
வழி செய்ய முடியும்.
வந்துவிடுங்கள் என்னோடு.

நாளை உங்களை ஓடச்சொன்ன
நயவஞ்சகன், இன்றே உங்களை
கொல்லத் துணிய காரணம்
கூறட்டுமா?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
ஒன்று அவர்களது பெயர் பெரிதாயிற்று
இன்னொன்று உங்களைக் கொல்வதால்
அவர்களின் பெயரும் வெளியே தெரியாது.

உங்களைக் கடத்தி தீமைகள் செய்தேன்
எங்களைக் காத்திட வழியும் சொல்கிறீர்.
ஆனால் இதை கேட்கும்
அளவிற்கு எங்கள் வாழ்க்கை
இல்லை என்றான் கூட்டத் தலைவன்.

துப்பாக்கி எடுத்தார்கள்
துணை இதுவொன்றுதான்
என்றெண்ணி ஓட்டம்
எடுத்தனர்.

காவல்துறையினர் காதலை
கண்டுபிடித்து விட்டார்கள்.
காதல் அவசர கட்டளைகளை
சொன்னான்.

அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும்
அவர்கள் தொடர்பில் முக்கியமானோர்
இருக்கிறார்கள் என்றான்.

தூரத்தில் வெடிக்கும்
துப்பாக்கிகளின் ஓசை.
சிறிது நேரத்தில்
சத்தம் அடங்கியது.

ஆம்,
அவர்கள்தான் இறந்தது.
இன்னமும் அவர்களுடன்
இறந்தது உண்மையும்தான்.

உயிர் பயமும், பேய் பயமும்
உதரினாள் மதி.
இனிய இல்லத்தை
இருவரின் பெற்றோர்களும்
இல்லறத்தை மதியும்
சமுதாயத்தையும், காட்டையும்
காதலும் அன்புடன் நடத்தினார்கள்.


(முற்றும்)

இத்தனை நாளும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், சிலருக்கு நேரம் கிடைத்து பின்னூட்டமிட்டவர்களுக்கும், என் மனமார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
முதல் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முதல்

Tuesday, May 12, 2009

காதல், கானகம் - பகுதி 45

நாம இவங்கள கடத்தி
நாள் இரண்டு ஆயிடுச்சு,
தலைவரும் மேடை போட்டு
தப்பாம பேசிட்டு இருக்காரு.
நாளைக்கு காலையில
நாம இங்க இருந்து
ஓடிடலாம்னு செய்தி
ஒன்னும் வந்துடுச்சு.

வந்த தடம் பதியாது
வந்தமர்ந்து கொண்டாள்
காதலிடம் தான்
கேட்ட விவரம் யாவும் சொன்னாள்.

நிச்சயம் நாளை
நாம் தப்பித்துவிடுவோம்
என்ற நம்பிக்கை தீர்மானம்
எடுத்தாள்.

தான் எண்ணியது
தவறல்ல என்பதை
காதல் உணர்ந்தான்.

இப்படியும் நடப்பார்களா
இந்த ஊரிலென்றாள்.
இவர்களுக்காக உழைப்பதில்
இம்மியளவும் அர்த்தமில்லை.

இல்லை, திருத்திக்கொள்.
இப்படியும் நடக்கிறார்கள்
சில பேர்.

சமுதாயத்தின் ஒரு பிரிவை முழுச்
சமுதாயமாகக் கருதக் கூடாது.
வழியை தேர்ந்தெடுப்பதில்தான்
வாழ்க்கை இருக்கிறது.
பசுவின் வேடத்திலிருக்கும்
புலியும் அதிகம்,
புலியின் வேடத்திலிருக்கும்
குள்ளநரியும் இங்கு அதிகம்.

பல வர்ணம் கொண்ட
பாரத சமுதாயமிது.
பணம் மட்டுமே
பெரிதென மதிக்கும்
மதிகெட்டவர்களால்
மரணங்கள் ஜனிக்கும்
மனம் மட்டுமே
மதிக்கும் நல்லவர்களால்
மரணங்கள் மரிக்கும்.

சலசலவென வந்த
சத்தம் இருப்பிடத்தின்
தூரத்தில் கேட்டது.

சாமியும், இம்ரானும்
எழுந்தனர்.

அய்யா,
நம்மள காப்பாத்தான்
யாரோ வர்றா மாதிரி இருக்கு.

நிச்சயம் காவல்துறையினராகத்தான்
இருக்க வேண்டுமென்றான்.

தலைவா நாம இருக்கிற
தடம் கண்டுபிடிச்சுட்டாங்கன்னு
நினைக்குறேன், வாங்க
நாம தப்பிச்சுடலாம்னு
கூட்டத்திலொருவன் அவசர
தந்தி அடித்தான்.

அவர்கள் பதறினர்
அங்கும் இங்கும் ஓடினர்,
எந்தப் புறம் செல்லலாமென
எண்ணித் தவித்தார்கள்


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, May 11, 2009

காதல், கானகம் - பகுதி 44

பிணைக் கைதிகளாக எடுத்த
புகைப்படம் வெளியானது
அதில் தடயம் ஏதும்
அடங்கியிருக்கிறாதெவென்று
துப்பு துலங்கலாயிற்று
துப்பு ஒன்றுதான் பாக்கி
சிக்கிவிட்டது என்றால்
சின்னாபின்னமாகிவிடுவர்
என்றது காவல்துறை.

மாநிலம் முழுதும் பல கோடி
மனங்களின் அலசல்கள்
அதற்கான விவாதங்கள்
அரங்கேறின!

முதல் கட்ட மகிழ்ச்சி
முடுக்கிவிடப்பட்ட
காவல்துறையினருக்கு.

கட்சிப் பிரமுகர் ஒருவர்
கொடுத்த துப்பின் படி
காட்டின் ஒரு பகுதியில்
காதலின் மகிழ்வுந்தை
கண்டுவிட்டனர்.

அவர்களை காட்டிற்குள் தேடி
அலசும் பணி தீவிரமானது.

மூன்றாம் நாள் விடிந்தது.

காலைச் சூரியனை
கடமை தவறாது
பார்த்தது பூமி.

இருளை விலக்கும்
பேரொளி வந்தது
தங்கள் துன்பம் விலக்க
தேவையான ஒரு வழி
கிடைக்குமா என்ற
கனத்துடன் கண்விழித்தாள் மதி.

கொஞ்ச நேரத்தில்
காதலும் எழுந்தான்.
காதலியை அருகினில்
காணவில்லை, பதறினான்.

திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்துபோன குழந்தையை
கண்ணெதிரில் கண்டது போன்ற
களிப்பு, மரமொன்றின் ஓரத்தில்
மதி பத்திரமாய் இருந்தாள்.

காது முடுக்கினாள்
கண்மறைவில் அவர்கள்
பேசுவதை ஒட்டு கேட்டாள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, May 8, 2009

காதல், கானகம் - பகுதி 43

அரசாங்க அதிகாரியும்
அவரது வருங்கால மனைவியும்
அவருடன் சென்ற இரண்டு பேரும்
அபாயத்தில் இருக்கின்றனர்.

தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்
தமிழ்க்கல்வி முறை அனைத்து
துறைகளிலும் வருதல் வேண்டுமென்று
தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை
அடுத்த கட்ட நடவடிக்கை
என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

படபடத்த நெஞ்சம்
பயத்தின் உச்சானிக் கொம்பைப்
பிடித்துக் கொண்டு ஆடியது.

பேச்சைவிற்ற பாடகன் போல்
புகழை விற்ற அரசன் போல்
கற்பனையை விற்ற கவிஞன் போல்
கண்களை விற்ற ஓவியன் போல்
வாய்ப்பின்றி துடித்தார் நாகய்யன்.

இடிவிழுவதறியாது காற்றில்
இலையோடு இசைபாடும்
பனைமரமாகியது உள்ளம்.

ஒரு மணி நேரத்தில்
ஒன்றாய் கூடியது சொந்தங்கள்
செய்வதென்பதறியாது
செயலற்றனர் மதியின் பெற்றோர்.

காட்டிலாக்கா அதிகாரிகள்
வீட்டிற்கு வந்தனர்.
ஒன்றும் நேராது
என்று சமாதானம் சொன்னார்கள்
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
அரசாங்கம் தயாராக இருக்கிறது
உயிருடனோ இல்லை பிணமாகவோ
அவர்களை பிடிப்போம் - நம்மவர்களை
பத்திரமாக மீட்போம் என்று
பறைசாற்றினர்.

அறுவடை நாளின் மழைபோல்
ஆனது திருமண ஏற்பாடு.

நாட்கள் வேகமாய்
நகர்ந்தது.
இமைக்கும் நேரத்தில்
இரண்டு நாள் ஓடிப்போனது.

தேர்தல் நேரத்தில்
துரிதமாய் ஓட்டு சேர்க்க
அரசியல்வாதிகள் முடிந்தவரை
ஆங்கேங்கே மேடையிட்டு
கோரிக்கைக்கு ஆதரவுக்
கரம் நீட்டினர்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த
ஆலோசனைகள் நடத்தப் பட்டன
காவலர்கள் தேடுதல் பணியில்
கவனமானார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, May 7, 2009

காதல், கானகம் - பகுதி 42

இந்தக் கடத்தல்
இந்திய அரசாங்கத்திற்கு
வந்திருக்கும் நோய்
வழியொன்று தேடுவதற்கான முயற்சி.
நோய் வந்தால் நிச்சயம் நம்
மெய் உறுப்புகள் பாதிப்படையும்
இங்கே நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்
இன்னொருமுறை இது நடவாத நிலைவேண்டும்.
இவர்கள் கையிலெடுத்த
இந்த முறை தவறு - ஆனால்
கருத்து தவறானதல்ல
காலம் பதில் சொல்லும்.

ஆடுகின்ற பம்பரங்கள் இவர்கள்
ஆட்டுவிப்பார் எங்கோ இருந்து
சாட்டையை சுழற்றுகிறார்
சூழ்ச்சியில் சிக்கி இந்த
மானிடரும் சுழல்கின்றனர்
மனிதம் உணர்த்துவேன் இவர்களுக்கு.

இருளத் தொடங்கியது
இப்பொழுது வரை இருந்த
மதியின் தைரியச் சூரியன்
மறையத் தொடங்கியது.

காடு பயம்
காரிருளும் பயம்
எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றியது
போலாயிற்று பயந்த
பேதையவள் மதிக்கு.

பணிகளை முடித்துவிட்டு
பதட்டத்தோடு வீடுவந்தார்
நாகய்யன்.

என்னாச்சு பிள்ளைங்க
எங்கே?
இன்னும் வரவில்லையா?
இருட்டி விட்டது.

வயிற்றில் நெருப்பள்ளி
வைத்திருப்பவள் போல்
உருகினாள்
உளறினாள் மலர்.

மதியத்திலிருந்து
மரித்து விட்டது தொடர்பு எல்லாம்.
பூங்கா சென்றேன், காணவில்லை
பொறுக்காமல்தான் தகவல் தந்தேன்
புழுவாய் துடித்தாள் மலர்.

பொறு, பொறு
பூங்காவை பார்த்து விட்டு
வேறு எங்காவது
விரைந்திருக்கலாம்.
அலைபேசி தொடர்பில்லையென்றால்
அவர்கள் எங்கேயிருப்பார்கள்?

மதி மனையும் செல்லவில்லை
மற்ற நண்பர்களிடமும் செல்லவில்லை

செய்திகளின் ஓசையில்
சாவு மணி அடித்தது.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, May 6, 2009

காதல், கானகம் - பகுதி 41

சூழ்நிலைகளாலும்
சந்தர்ப்பவசத்தாலும்
நான் குற்றவாளியாகிவிட்டேன்
நமது நிலைமைக்கு
காடு பொறுப்பல்ல
கடிந்து சாபம் விட்டிடாதே காட்டிற்கு.

தோல்விகளின் போது அது
தரும் பாடங்களை
அறிந்து கொள்ள வேண்டும்
அவனியில் மிகப்பெரிய
ஆசான் தோல்வி ஒன்றுதான்.

இறப்பது உறுதியெனினும்
இறுதி வரை போராட வேண்டும்
இந்தத்துயர் மீளாத்துயரென
இவ்வாறு பேசினாயோ?

கடைசி சொட்டு
குருதி எனக்கிருக்கும் வரை
உனக்கெந்த பாதிப்பும் வராது
உண்மையிதை நம்பு.

உயிர் கொடுத்து என்
உயிர் காப்பாற்றி
என்ன பயன்?
எதற்கு எனக்கந்த வாழ்வு?

வரவேண்டாம் என்று
வாதாடினேன்
நீங்கள் கேட்கவில்லை.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த
கதையாயிற்று உனது.
சிறை சென்று மனம்திருந்தி
சிறைக்காவியங்கள் எழுதிய
எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

துன்பத்திலும் தளராமல்
துவண்டு போகாதிருக்க வேண்டும்
காலத்திற்கு எதையும்
குணமாக்கும் சக்தி உண்டு.

அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை
அறிந்திருக்கிறாயா?
இராமன் பட்ட துயரங்களை
அறிந்திருக்கிறாயா?
இயேசுபிரான் பட்ட துன்பங்களை
அறிந்திருக்கிறாயா?
கொலம்பஸ் பட்ட துயரங்களை
அறிந்திருக்கிறாயா?
தோல்வியிலும் பாடம் கற்றுத்
தேறுபவரே வெற்றி பெறுகிறார்.

உயிர் பயம் களை
உனது என்று சொல்ல
எதுவுமே இங்கு உனக்கு
என்றில்லை என்பதை உணர்.
எதைக் கொண்டு வந்தாய் நீ
எடுத்துச் செல்வதற்கு என்ற
பகவத் கீதையின்
பொன்மொழி மறந்தாயா?

பேதையே, எத்தனையோ
பாலங்கள் இடிந்துவிழுவதால்
பயணிக்காமல் ஒதுங்கவேண்டுமென்று
பயப்படுகிறோமா?
சாலைவிபத்துக்களுக்கு பயந்து
சாலையை புறக்கனிக்கிறோமா?
காய்ச்சல் வருமென்று பயந்து
கட்டுப்பாட்டோடு எத்தனை நாளிருப்பாய்?

நோயென்பது மனிதனுக்கு
நேரவேண்டும், இல்லையெனில்
உடலுறுப்புகளின் பெருமைகளை
உணரவே மாட்டான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, May 5, 2009

காதல், கானகம் - பகுதி 40

ஆனாலும் சாமி
அவர்களிடம் கேட்டேவிட்டான்.
எத்தனை நாள்
எங்களை இப்படி
வச்சிருப்பீங்க?
வயிறு பசிச்சா
சோத்துக்கு ஏதாவது
வழியிருக்கா என்றான்.

எல்லாம் வரும்
எங்களிடம் இருக்கும்
பலம் அறியாமல்
பேசுகிறாய் நீ.

காதல் மனதில்
கணக்குகள் ஓட
ஆரம்பித்தது.

கடத்தலுக்கும் இவர்கள்
கூறும் காரணங்களுக்கும்
ஏற்ற பாத்திரங்களாக
எடுபடவில்லை இவர்கள்.
இவர்கள் அம்புகள்
இதை எய்தவன்
எங்கிருக்கிறானோ என்று
எண்ணினான்.

குழந்தை போல்
தவழ்ந்து காதலின்
அருகே அமர்ந்தாள்
அழுதாள்.

அவள் கேட்கப் போகும்
அணைத்து கேள்விகளுக்கும்
விடையில்லாதவனாய் இருந்தான்.

இதுதான் வாழ்க்கையா?
இப்படி கற்றுக்கொள்ளத்தான்
காடு அழைத்தீர்களா?
இடுகாடு இதுவென்று
அறியாமலேயே அளவிலா
ஆனந்தம் கொண்டேன்.

திருமணம் நடக்குமா?
திரும்பிப் போகத்தான்
வழி உண்டா?
வாய் நிறைய காடு
காடு என்றதற்கு பலனாக
கிடைத்ததைப் பார்த்தீர்களா?

அழாதே!
அவன் சொற்கள்
அவளைத் தேற்றவில்லை.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, May 4, 2009

காதல், கானகம் - பகுதி 39

இன்னும் ஒரே நாளில்
இதற்கான உண்மை
உலகுக்குப் புரியும்
உனக்கும் புரியும்.

என்னைக் கடத்தி வைத்திருக்கிறீர்கள்
என்ற உரிமையில் கேட்கிறேன்,
என்னிடம் சொல்லுங்களேன்.

ஏம்பா இப்படி
என் உயிர வாங்குற?
சொல்லுறேன் கேளு.

தமிழ்நாட்டுல
தமிழ் கட்டாயப் பாடமாகணும்,
மாநகராட்சி பள்ளி முதல்
மைனருங்க படிக்குற
பள்ளி வரை இது சட்டமாகணும்.

என்ன வினோதம்? - இதற்கு
எதற்கு இத்தனை பெரிய முயற்சி?
என்னென்ன போராட்டங்களை
எடுத்தீர்கள் இதற்காய்?
அதில் எத்தனை தோல்விகள்?

உனக்கு சொல்ல வேண்டியதாய்
கணக்கு ஒன்றும் இல்லை.
மெத்த படித்த பணமுடையவர்கள்
மொத்தமாய் தமிழை
மறந்துவிட்டீர்கள்.
தத்தம் மொழிகளை விடுத்து
தங்கள் பிள்ளைகளைக் கூட
வெளிநாட்டிலேயே படிக்க
வைக்கிறீர்கள்.
வாய் பேசுவதற்கு
அருகதையில்லாதவர் நீங்கள்.

உன் கோபம்
உண்மை - ஆனால்
எங்களை கடத்துவதால்
எந்த பயனும் நீ
அடையப்போவதில்லை.
அரசாங்கம் சடுதியில்
இணைந்து கொடுக்கும் விஷயம்
இதுவல்ல.

பலநூறு விதிமுறைகள் மீதும்
பாரதத்தின் இறையான்மை
பற்றியும் கேள்விகள் வரும்.

இல்லை, இதற்கு
இணங்கி தமிழகமெங்கும்
குரல்கள் ஒலிக்கும்
குழப்பத்தில் அரசு
கோரிக்கையை ஏற்கும்.

பஞ்சாயத்தை வேடிக்கை
பார்க்கும் குழந்தை போல
சாமியும், இம்ரானும்
சத்தமின்றி அமர்ந்திருந்தனர்.

நடப்பதறிந்த நால்வரும்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள்
அமைதியாக ஆளுக்கொரு திசையில்
அமர்ந்திருந்தார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, May 1, 2009

காதல், கானகம் - பகுதி 38

எனது வாழ்க்கைக்காக
என்ன போராடுவாய்?
இரண்டு வாரத்தில் எங்கள்
இருவருக்கும் திருமணம்.
அதை நீ
இறுதி ஊர்வலமாக்க
இருக்கிறாய்.
இவர்கள் என்ன தவறு
இழைத்தார்கள் உனக்கு?
போராட வேண்டியதெனின்
போராட்டத்திற்கு
பொருத்தமானவர்களை
பொறுக்கியிருக்க வேண்டும் என்றாள்.

எத்தனை முறை
எடுத்துரைத்தாலும்
சுயநல புழுதியில்
சிக்கிக் கொண்டிருக்கும்
உன்னைப் போல
உள்ளோர்களுக்குப் புரியப் போவதில்லை.

நாட்டின் பொதுநலத்திற்காக
நாங்கள் உயிர் கொடுக்கத்
துணிகிறோம், ஆனால்
துளியும் இதை அறியாது
உன் உடல், உன் மன
உணர்வுகளுக்காக
திருமணம் பற்றித்
தெரிவிக்கிறாய் என்னிடம்.

நீ பேசிய வார்த்தை
நிரந்திரம் இல்லாதது
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொலை செய்துவிடுவேன் உன்னை.
ஆனால் கொலை செய்வது
அணுவும் எனது நோக்கமல்ல.
பேசாமல் நீயிருப்பதே எனது
பொறுமைக்கு நல்லது.

சடுதியில் விரைந்து
சஞ்சலப் பட்டவளை
தடுத்தான் காதல்.
தானே பேசலானான்.

இந்த காட்டின்
ஐ.எஃப்.ஸ் அதிகாரி நான்
உங்களது கோரிக்கையை
என்னிடம் சொல்லுங்கள்.

செய்ய முடியும்
செயலாயின் நானே செய்கிறேன்,
முடியா விட்டாலும் - உங்கள் பணி
முடியும் வரை நான்
பணையக் கைதியாய் இருக்கிறேன்
பாவம் இவர்கள்,
அனுப்பிவிடு.

நீ யாரென்று எல்லாம்
நான் அறிவேன்.
உங்கள் உயிருக்கு
இடையூரு செய்வது
இங்கே யாருடைய
நோக்கமுமல்ல - அதனால்
நெஞ்சை திடப்படுத்திக்கொள்.

அடர்ந்த குழப்பங்கள்
அகன்று தெளிவானான்.

நான் உங்களை
நிச்சயம் மதிக்கிறேன்
உங்கள் கோரிக்கைதான் என்ன?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal