என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 30, 2008

வசந்த காலங்கள்

அதிகாலை ஐந்து மணிக்கு
அனைவரையும் எழுப்பி
விடும் சின்னக் குழந்தை

குழந்தையை சமாதானப்படுத்தும்
குடும்பப் பெண்கள்

செய்திக்கும் கார்டூனுக்கும்
சண்டையிடும் தாத்தவிற்கும்
பேரனுக்குமான நிமிடங்கள்

காலைத் தேநீர்
கொண்டு வந்த தாயிடம்
முறுக்கு கொடு
மிச்சர் கொடு
அவனுக்கு என்று செல்லமாய்
அதட்டும் அப்பா

இன்னைக்கு சமையலுக்கு
இன்ன இன்னவென
பட்டி மன்றம் நடத்தும்
பாசமுள்ள சித்திகள்

இப்படி இரண்டு வாரமாக
இன்பமாய் இருந்த வீடு,
விடுமுறை முடிந்து
வீடு கிளம்பிய சொந்தங்களால்,
குழந்தையில்லா என் தனிக்
குடித்தனத்தை மீண்டும்
வழக்கமான அடுக்குமாடி
வெறுமையில் இருக்கும்
குடிலாக உருமாற்றிவிட்டது.

நினையாத நினைவு

பாதைகளிலேயே
பயணம் செய்யும்
உங்கள் வாழ்க்கையில்
உடன்பாடில்லை எனக்கு.

பயணங்களுக்கான
பாதைகளை மெல்ல
உருவாக்குவதில் மட்டுமே
உள்ளம் போடுகிறது கணக்கு.

திருமணம், குழந்தை,
தீண்டும் காமம்
இதிலெல்லாம் வீழாது
இருக்க விரும்புகிறேன்.

உழைக்கும் வரை
உழைத்து வாழும் வரை
வாழ்ந்து யாருக்கும்
வருத்தமில்லாமல் போகிறேன்.

என் கால்கள்
எங்கு செல்கிறதோ
அங்கே எனக்கொரு
அழகிய குடில்.

பள்ளம் வரினும்
வெள்ளம் வரினும்
அழியும் உலகில்
வாசிப்பேன் பிடில்.

எண்ணத்தின் போக்கில்
வண்ணத்துப் பூச்சியாய்
இயற்கை அழகில்
குடிப்பேன் தேன்.

இன்ப துன்பத்தில்
இன்னும் தவித்தால்
என் வாழ்க்கை
எங்கும் வீண்.

சிறகு முளைத்ததும்
பறந்திடும் பறவையாய்
துளிகள் பிறந்ததும் மேகம்
துறக்கும் மழையாய் நானும்.

Saturday, June 28, 2008

விளக்கணைப்பு

கூடியிருந்த கூட்டத்திற்கும்
கடமை தீர்ந்துவிட்ட
பெற்றோர்களுக்கும்
புரியவில்லை வாழப்
போகிறவள் நான்தான் என்று.

அம்மாவின் தீக்குளிப்பு
அரங்கேற்ற விளக்கங்களிலும்
அப்பாவின் தற்கொலை
அவசரப் பிரகடனத்திலும்
இறந்து போனது மட்டும்,
இன்னும் நினைவிலிருக்கும்
என் காதல்தான்.

காத்திருந்தக் காதலனின்
கதியென்னவென்றுத் தெரியாது,
தாடியுடன்; முடிந்தால்
குடிபோதையுடன் ஏதோ
ஒரு மதுவிடத்தில்
ஒட்டுமொத்தப் பெண்களும்
இகழப்படலாம்
இந்தப் பெண்களே
இப்படித்தான் என்ற
அவச்சொல்லுக்கு நான்
அடையாளமாகிவிட்டேன்.

சாதிக்கும், கௌரவத்திற்கும்
சோர்ந்து போய்விட்ட
காதல்களில் எனது
காதல் எத்தனையாவது
என்று தெரியவில்லை.

இனி இன்று நடக்கப்போகும்
இந்த முதலிரவில்
என் காதலன் முகம்
எங்கோ மறையுமா?
அது மறையவில்லையெனில்
அணிந்து கொண்ட தாலிக்கும்
விவரமறியாத கணவனுக்கும்
வெட்டுகின்ற குழியல்லவா?

இங்கே அணையப்போகும்
இந்த விளக்கோடு
எந்தன் காதலின்
எல்லா நினைவுகளும்
அழிந்து போகட்டும்
அங்கே தவிக்கும்
என் காதலனுக்கு
என்றுமே எந்தன்
நிலை தெரியவேண்டாம்.

Friday, June 27, 2008

உணர்வுகள்

வாழ்க்கையில் வசந்தங்களுக்கு
வறட்சி வந்துவிடக் கூடாதென
விரும்பி எடுத்த முடிவு.

சுயங்களை எந்தச்
சுகத்திற்காகவும் விட்டுவிட
வேண்டாம் என்பதற்காகவும்தான்.

எல்லோரும் விழுந்த
எழிலான அந்தக் குளத்தில்
குதிக்க வேண்டாமென்றும்தான்.

பள்ளங்கள் நிரப்ப
பால்நுறை போல் உள்ளம்
நிரப்ப திருமணம் வேண்டாமென்றுதான்.

சின்னச் சின்னச்
சுதந்திரங்களையும்
தியாகம் செய்ய வேண்டாமென்றும்தான்

தலைவலியென்று வந்த
தந்தைக்குத் என் தாய்
இதமாக தலையைப்
பிடித்து விடும்போது
சற்றே அசைத்துப்
பார்க்கிறதென் பிரம்மச்சரிய விரதத்தை.

எதிரியா இல்லை நண்பனா?

என்னிழல் போல
எங்கும் வருகிறானென்று
இவனைச் சொல்லமுடியாது
இரவிலும் என்னுடனையே
இருப்பதால்.

என் நண்பனென்றும்
எப்பொழுதுமே
இவனைச் சொல்லமுடியாது
இடையூறாகவே பலதடவை
இருப்பதால்.

சில சமயம் இவனை
சிறப்பாக வென்றிருந்தாலும்
பல சமயம் எனக்குப்
படு தோல்வியே
கிடைத்திருக்கிறது.

இவ்வளவு நடந்தும்
இவனை என்னை
விட்டு விலக்காமல்
வளமுடனே வைத்திருப்பது
நாந்தான்.

சுறுசுறுப்பாக
சிந்தையில் வழிகிற
எண்ணங்களுக்கு
எப்பொழுதுமே தடைக்கல்லாய்
நிற்கும் இவன் என் சோம்பேறித்தனம்.

சின்னஞ்சிறு வரிகள் - 3

புன்னகை விற்பனைக்கு
-------------------------------
புன்னகையை அடகுவைத்துப்
பழக்கப் பட்ட மனிதர்களிடம்
பாசத்தோடு புன்னகையை விற்கிறேன்
பதிலாக வரும் புன்னகையால்
நான் லாபமடைகிறேன் - ஆனால்
நிச்சயமாக திரும்பி வராத புன்னகையால்
நஷ்டமடைவதில்லை.


உண்டியலில் தொலைகிறது உள்ளம்
-----------------------------------------------
இரு கால்களும்
இல்லாது பசிக்குப்
பிச்சையெடுக்கும் மனிதனைப்
பார்க்காது பக்கத்திலுள்ள
பசிக்காத இறைவனுக்கு
பக்தியோடு காசு கொடுக்கிறார்.


குப்பை தேசம்
-------------------
ஏனிந்தக் குப்பையை
ஏளனத்தோடு சாலையில்
போடுகிறீர் என்று கேட்பவனைப்
பார்த்து பரிகசிக்கிறது உலகம்.


எச்சில் குணம்
-------------------
எதைப் பற்றியும்
எனக்குச் சிந்தனையில்லையென்று
எச்சிலைச் சாலையில்
துப்புபவருக்குத் தெரியுமா
வெறுங்கால்களுடன் இன்னும்
வழிகள் கடக்கும் சகமனிதனைப் பற்றி?


கண்ணீர் கரைவது எப்போது?
---------------------------------------
எங்களூர் சாலைகளுக்கும்
எல்லையில்லாத தண்ணீர்ப்
போராட்டத்திற்கும் நீதியுரைப்பவர்
பத்து நாள் இங்கு வந்து
வாழ்ந்து பார்க்கட்டுமே?!


எப்போதும் துன்பம்?
---------------------------
எப்பொழுதும் எதை
எதையோ நினைத்துத்
துன்பப் படும் மனங்கள்
தன்னிடம் நிறைவு காணாதவர்கள்.


இறை மனம்
----------------
சுத்தமான இடத்திற்குப்
பெயர்வதை விட
இருக்குமிடத்தைச் சுத்தமாக்குபவர்
இறை மனம் கொண்டவர்.


ஆள்காட்டி விரல்
------------------------
பிறரைச் சாடும்முன்
உண்மையாய் ஒருமுறையாவது
உன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்.

Wednesday, June 25, 2008

காதல் வேண்டாமடி

இதோ எனது தனிமையின்
இன்னொரு கேள்வியாக
நீயும் இடம்பிடித்துவிட்டாய்.

என்னை நீ விரும்புவதாக
என்னிடம் கூறிவிட்டு
என்னுடைய பதிலை
எண்ணியிரண்டு நாட்களுக்குள்
கேட்டிருக்கிறாய்.

காய்கின்ற வெண்ணிலாவில்
காதல் தேடுபவள் நீ
வெண்ணிலவு
வெளிச்சத்தில்தான்
வாழ்க்கையைத் தேடுகிறேன் நான்.

ஆனந்தமாய் கடலில்
அலையை இரசிப்பவள் நீ
உண்மையில் கடலின்
உப்புத் தண்ணீருக்குக்
காரணமானவன் நான்.

நீண்ட கரையில்
நடந்து கொண்டு
ஓடத்தைப் பார்ப்பவள் நீ
வாய்பேசமுடியாது ஓட்டை
விழுந்த அந்த
ஓடத்தில் பயணிப்பவன் நான்.

என்னை நம்பி
எட்டு வைத்து
நடக்கும் என்குடும்பத்தின்
ஒரே முதலீடு
என் படிப்பு.

உன் காதல் பூக்கள்
உதிராமலிருக்க
சோலைவனம் தேடு - எனது
பாலைவனத்தில் காதல்
பூக்கள் பூப்பதில்லை

Tuesday, June 24, 2008

அன்புடன் ஓர் கடிதம்

உங்கள் உதடும்
என் காதும்
தூரப்பட்டதால் அதிகாமாய்த்
தொலைந்து போன
நமது உரையாடல்களை
நான் புதுப்பிக்க விரும்புகிறேன்.

நம் இடைவெளி
நிரப்பக் காகிதம்
நாடுகிறேன்.

கடிதங்கள் அதுவும்
காதல் கடிதங்களின்
அனிச்சையான
அலங்காரங்கள் எதுவுமின்றி
அங்கலாய்ப்புகளாக மாறிய
அன்பின் அலங்கோலங்களை
சற்றேனும் உங்கள் பார்வைக்கு
சரிபார்க்க உதவுமாறு எழுதுகிறேன்.

தபால் தலை
தேவைப்படாத கடிதம் இது.
தேவைப் பட்டு
விடக்கூடாதென்பதற்காகவே
விளக்குகிறேன்.

இதற்கான பதிலாக நம்
இடைவெளி குறைந்தால்
குழந்தையாவது நலப்படும்,
குறைந்தது உங்கள் பதில்
கடிதமாக இருந்தால்
கண்டிப்பாக நம் உறவு
சில காலம் சுகப்படும்.

பிறந்தவீட்டில் ஒற்றைப்
பிள்ளையாய் வளர்ந்தாலும்
என் சத்தங்களுக்கு
எப்பொழுதும் பதிலாக
மனிதர்களே பேசினார்கள்.

மணிக்கணக்காய் நான்
முணங்கினாலும் இங்கே
சுவர்கள் மட்டும் அவ்வப்போது
எதிரொலி கொடுக்கிறது.

பல நாட்கள் இரவு
பத்து மணிக்கு தொடங்கிவிடும்
உங்கள் இரவு
உண்மையில் இப்பொழுதெல்லாம்
நான் தூங்கிய பிறகே
நடக்கிறது.
ஏழு எட்டு இருக்குமா
ஏழு நாட்களில் நீங்கள்
அன்பாய்க் குழந்தையுடன் பேசிய
அதிகபட்ச வார்த்தைகள்?

குடும்பத்திற்காக உழைப்பதாய்க்
கூறி குடும்பத்தை விட்டு
விலகியே நிற்கிறீர்கள்
விருந்தாளி போலவே
வந்து செல்கிறீர்கள்.

உங்கள் பாசத்தைத் தவிற
வேறு எதையும் எதிர்பார்க்காமல்
வேதனைப் படும் உள்ளத்துடன்
நீங்கள் தாலி கட்டிய மனைவி.

Sunday, June 22, 2008

என்றென்றும் அன்புடன்

உயிரே அமுதே
ஊண் சுமந்த நினைவே,
என் காலையெங்கும்
எழுந்த ஆதவளே,
என்னிரவு நிறைத்த
எளிய நிலவே,
நீ தொட்டிலை
நேசித்ததைவிட என்
மார்பினில் தூங்கிய
மாதங்களே அதிகம்
உனக்குக் குத்தியதென்று
மீசை வைக்கவில்லை
உனக்கு வலிக்குமென்று
காதுகுத்த விட்டதில்லை

அப்பாவென்று நீ அழைத்த
அன்பான நேரத்தை
அனுதினமும் காட்டியபடி
அங்கனமே நிற்கிறது கடிகாரம்
ஓடவில்லையா கடிகாரமென்னும்
ஓய்வில்லா பலர் கேள்விக்கு
ஓயாமல் சொல்லி வந்த
ஒரே பதில்
"நான் பிறவிப்பலன் அடைந்த நேரம்".

மணம் முடித்து உனையனுப்பி
தினம் துடிக்கிறேன் நானம்மா
உனை அனுப்பிவிட்ட அடுத்தநாள்
உணவருந்தும் நேரத்திலே
"செல்லமே சீக்கிரம்
சாப்பிடவா" என்றழைத்தும்
மௌனம் நிறைந்ததில் புரிந்தது
மூளையின் அனிச்சை செயலில்
மகளே நீயும் உண்டென்று

கல்லூரி நாட்களே

கனவோ இது கானலோ
கால்கள் கடந்து வந்த பாதைகள்
நினைவோ இது நிழலோ
நாங்கள் பேசி நடந்த காலங்கள்
தவமோ இது வரமோ
கூடித்திரிந்த எங்கள் பாசங்கள்
சுமையோ இது வலியோ
பிரிந்து போகுமிந்த பாதைகள்
தவறோ இது முறையோ
காலப்பிரிவில் எங்கள் நட்புகள்.

ஒன்றாய் அமர்ந்த இடங்களெல்லாம்
தனியாய் இன்று தவிக்குதடா
நம் பிரிவால் கருத்தக் கரும்பலகை
நினைவாய் நம் பெயர் ஏற்குதடா
துணையாய் நடந்த கால்தடங்கள்
தனியாய் எங்கோ போகுதடா
புன்னகை சுமந்த பூஉதடுகள் யாவும்
வெறுமையின் தனிமையில் உதிருதடா
மொட்டை மாடி பௌர்ணமியும்
வெட்ட வெளியில் காயுதடா

பாலைவன மணல்
பாய்க்கடியில் இருந்தாலும்
சுகமாய் தூக்கம் வந்திடுமே
இலவம்பஞ்சு மெத்தையும்
இனி தூக்கம் திருடிப் போய்விடுமே
குப்பையாய் அறைகள் இருந்தாலும்
ரோஜாவாய்ப் புன்னகை பூத்திடுவோமே
சுத்தம் செய்த வீட்டினிலே
சோகத் தனிமையிலினி தவித்திடுமே
காலப்பிரிவில் எங்கள் நட்புகள்.

இமைகளின்றி இனி கனவும் வருமா
துணைகளின்றி கால்களினி நடக்குமா
சாதி மதம் கடந்த பருவங்கள் பூக்குமா
சின்னச் சண்டகளும் இனி ஏற்படுமா
பின்னர் கூடிக்கொண்ட நேசம் கூடிடுமா
திரையரங்குக் கிண்டல்கள் நடந்திடுமா
தொலைதூரப் பயணங்கள் தொலைந்திடுமா
குற்றாலக் குளியலில் நனைவோமா
சிற்றுண்டிச் சோற்றின் சுகம் வருமா
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கைதான் வந்திடுமா

Saturday, June 21, 2008

யாருக்காக உயிர்?

வேட்டை நாய்க்கும் என்
வேலைக்கும் என்ன வித்தியாசம்?
ஏவியதும் கொன்று தீர்ப்பது
ஏவுகணை மட்டுமல்ல
ஏவியவன் நானும்தான்.
வீசுகின்ற குண்டுகள் யாவும்
வீணடிக்காமல் உயிர்குடிப்பது
வேறென்ன தந்துவிடப் போகிறது
வீரமென்ற சொல்லைத் தவிர?

இந்தியாவின் வீரச்சக்கரமொன்று
இன்று வாங்கப்போகும் தருணம்
இனிய கற்பனையோடு
இரவு கழிக்கவெண்ணிய எனக்கு
வந்த கனவெல்லாம் குருதி
வழிந்தோடிய சதையும்
வீரர்களைக் கொன்று குவித்தவென்
வீரமும் தான்.

தண்டிப்பதா வீரம்?
மன்னிப்பதே வீரம்!
மனிதனின் காழ்ப்புணர்வுகளுக்கு
மொத்த பிம்பமாய்
எல்லையில் நான்
எத்தி விளையாடிய
கொடூர நேரங்கள்.

எல்லை தாண்டிய
ஏதோ ஒரு பெண்ணின்
கண்ணீருக்குத் தெரியாமலிருக்கட்டும்
இன்று நான் வீரச்சக்கரம் வாங்குவது.

Friday, June 20, 2008

நானெடுத்த முத்து

தவம் முடியுமுன்னே
சவமானவென் பெற்றோரால்
தீட்சைப் பெறத்
தகுதியில்லா சீடனானேன்
கூடிநின்ற சொந்தங்கள்
தேடியொரு பெண்பார்த்து
தாடியோடு இருந்த என்னை
தாலிகட்டக் கூறியது.

தேவையென்று இனியெனக்கு
தீருமிவ்வுலகில் எதுவுமில்லையென
வீதி கடந்தேன்
விதி கடந்தேன்
ஓடியொரு புது ஊரில்
ஒளிந்து கொள்ள
இடம் பார்த்தேன் - அங்கேயென்
தடம் பதித்தேன்.

ஓடுகின்ற காலமதில்
ஒரிரண்டாண்டுகள் கழிந்திட
வெளிச்சமற்ற ஓரிரவில்
வீலென்ற சத்தத்துடன்
குழந்தையின் அழுகுரல்
கேட்டேன், தூக்கினேன்.

தேடிவர யாருமின்றி
தேதி பல ஓடிடவே
நாடியெனை வந்தடைந்த
நன்மலரை நான் வளர்த்தேன்.
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று
கூவிக் கூவி தினமந்த
குழந்தயதின் உயிர் வளர்த்தேன்.

பத்து வருடம்
பகலிரவாய் கழிந்துவிட
தொலைத்திட்ட குழந்தைதனை
தேடிய சொந்தம் வர
உயிரினை திருடக்கொடுத்து
உடம்பெல்லாம் சுமையாக
காலெடுத்து நடக்கும்போது
காதுகளில் சேதியொன்று கேட்டது
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று....

Wednesday, June 18, 2008

காதலியல் - 2

என் நண்பன் கேட்டான்....

1.
கண்டவுடன் எப்படியடா
காதல் வருமென்றான்,
கடவுளை நேரில்
கண்டாலும் நம்ப
மாட்டாயா என்றேன்.

2.
மணிக்கணக்காய் என்ன
பேசுவாயென்றான்,
மௌனம்தான் என்றேன்.

3.
காதலை முதலில்
யார் சொன்னதென்றான்
அவள் கண்களும்
என்னிதயமும் என்றேன்.

4.
காதலிப்பதனால் நீ
கண்ட பயனென்னவென்றான்,
கண்டுகொண்டேன்
என்னை நானேவென்றேன்.

5.
அப்படி எதுதான்
அவளிடம் சிறப்பென்றான்,
அவளை "எது" என்று
அஃறினையில் கூறாதேயென்றேன்.

திராட்சை இரசம்

எங்கெங்கோ தேடிக்
கண்டுபிடித்தது உன்னை
மட்டுமல்ல இந்த
திராட்சை இரசத்தின்
திகட்டாத சூத்திரமும்தான்.

இன்று தொடங்குகிறது
இந்த திராட்சை இரசத்தின்
இனிமையான மாற்றம்.
இன்னும் அறுபது
வருடம் கழித்து
வளமாய் மாறியிருக்கும்
இந்த திராட்சை இரசம் போல
இனிமையான நம் வாழ்வும்.

இது என்ன?

தேவ பாஷை என்பது
இதுதானா?
இது எதிர்காலத்தின் மொழியாக
இருக்குமா?
இந்த நூற்றாண்டின்
இணையில்லாத ஓவியமா?

என்னென்னவோ
எழுதிவிட்டு
எதுவும் தெரியாதது போல்
கும்மாளம் அடிக்கிறது
குழந்தை.

Tuesday, June 17, 2008

சோதனைச் சாவடி

சின்னஞ்சிறிய
சோற்றுருண்டைக்காக
கூட்டமிடும் காக்கைகள் போல
எப்பொழுதாவது வந்துவிடும்
ஒற்றைப் பேருந்துக்காக
நிரம்பி வழிகிறது பேருந்து
நிறுத்தம்.

என்னை யாரோ
எத்தனித்துப் பார்ப்பது
போன்ற உணர்வு.

திரும்பினேன்,
கண்களில் ஈரமில்லாத
ஒரு பார்வை,
சிரிப்பினில் அன்பு
இல்லாத ஒரு வெறுமை,
காமம் தூண்டும்
கண்கள் சிமிட்டி
நின்றது இறுதியில்,
அறிமுகமில்லாத என்னை
அழைப்பதற்கான சமிக்ஞை,
என்னிடம் இருக்கும்
ஏதோ ஒன்றை
நோட்டமிடுவதாக ஓருணர்வு,
அது என் சட்டைப் பை!

அவளது சிவப்பு நிற
சேலையும் அவளது
செயலும் சொல்லியது
அவள் சிவப்புவிளக்கின்
அந்தப்புர மகாராணியென்று.

சூழ்நிலைகள் இதற்குச்
சாதகமெனினும் அவள்
மீதான பரிதாபம்
மட்டுமே தலைதூக்கியது.
சிந்தித்த நொடிகள்
சில கடந்து போக
மீண்டும் ஒரு
முறை திரும்பிப் பார்த்தேன்.

அவளது வியாபரத்திற்கு
அன்று சிக்கிய
ஒருவரிடம் ஒய்யாரமாய்
பேசிக் கொண்டிருந்தாள்.

அடகு வைத்துவிட்ட அன்பு

பள்ளி மணி ஓசையில்
பிள்ளைமணிகள் ஓடிட
ஒற்றை முத்து, தவிப்பினில்
சில சோகத்தோடே நடந்திட
சாலையோர நெரிசலில்
சிக்கித் தவித்துப் பிழைத்திட
அந்தி சாயும் கருக்கலில்
வீடும் வந்து சேர்ந்திட
வெந்து தணியும் தனிமையில்
வீட்டுக் கதவும் திறந்திட
வெருமை சூழ்ந்த வீட்டினில்
தனியாய் தினமும் தவித்திட
பாடப்புத்தக சுமைதனில்
சோர்ந்தே விழிகளும் தூங்கிட.....

வேலை நிமித்த இடைஞ்சலில்
வீட்டைக் கொஞ்சம் நினைத்திட
என்றும் குறைந்திடா வேலையில்
நாளைக் கடத்த முயன்றிட
எட்டரை மணி ஓசையில்
எழுந்து விருட்டென விரைந்திட
பேருந்து நெரிசல் பயணத்தில்
குழந்தை ஞாபகம் கசிந்திட
தெருவில் நடக்கும் தனிமையில்
சற்றே வாழ்க்கையும் வெறுத்திட
குழந்தை தூங்கிவிட்ட தருணத்தில்
சோற்றைக் கொஞ்சம் திணித்திட
கணவன் வந்துவிட்ட வேளையில்
இருவரும் தூங்கிய குழந்தையை முத்தமிட......

Monday, June 16, 2008

காத்திருக்கும் காதலன்

சில்லென பெய்த
ஒரு மழையிரவில்
மேனியெலாம் நனைந்துவிட
ஒதுங்கவும் இடமின்றி
என் மார்பில் முகம்புதைத்து
குழந்தையாய் மாறிக்கேட்டாய்
எப்பொழுது எனக்குத்
தாலி கட்டுவாய்?
காலம் கூடட்டும்
கொஞ்சமேனும் பொருளீட்டி
கரம் பிடிக்கிறேனென்றேன்.

யாரோ, நீ
குழந்தையோடு குழந்தையாக
விளையாடியதைப் பார்த்து
வண்ணத்திரையில் நடிக்கக்
கூப்பிட குழந்தைத்தனம்
குறைந்துவிட்டது உன் வாழ்வில்.

எத்தனையோ பத்திரிகையில்
என்னற்ற கிசுகிசுகுகளுக்கிடையில்
உன்னைத் தேடி வரும் என்னை
உன் வீட்டு நாயும்
உன் அண்ணனும் முறைத்துப்
பார்க்கையில் விரிந்து
கொண்டே இருக்கிறது
நம்முடைய இடைவெளி.

சின்னஞ்சிறு வரிகள் - 2

1.
இதழ்கள் விரிவதால்
சுருங்குகிறது துன்பம்,
புன்னகை.

2.
நீயும் நானும்
ஒன்றென்கிறது
இரு கை சேரும் வணக்கம்.

3.
ஒன்றும் ஒன்றும்
பெருக்கியதால்
மூன்றும் ஒன்றானது
குடும்பம்.

4.
மின்சாரமில்லாத
தருணத்தில்
தேடித் தவிக்கிறது கைகள்
பழைய விசிறியை.

5.
ஏதோ விரக்தியில்
இவ்வுலகில் அனைவரும்
ஏமாற்றுக் காரர்களென்று
கூறிய என்னைக் கேலி
செய்து சிரிக்கிறது குழந்தை.

அஞ்சல்

எழுதியது சென்று சேருமா
என்று அஞ்சுவதாலேயே
அஞ்சலென்றார்களோ என
சிந்தித்த தருணங்களுண்டு.

விண்ணேறிவிட்ட
விமானம் தரையிறங்கும்வரை
இருக்கும் தவிப்பு போல
எத்தனையோ தடைகள்
கடந்து வந்திடும் உனது
அஞ்சல்களின் கையெழுத்துக்காய்
காத்திருக்கிறேன் அன்பே.

மின்னஞ்சல் வேண்டாம்
மீதமென வார்த்தைகள் போக
அதில் ஏதுமில்லை உயிரே,
உன் கைகள் தொட்டுத்
தவழ்ந்த பேனா மைச்சிதறல்களில்
திமிறும் அன்புக் கடிதங்கள் தா.

அன்புத் தந்தை

என்னுயிரே நீங்களென
புகழ்ந்துவிடினும்
குறைந்துவிடுமோ நின்புகழென
உன்னுயிரே என்றே புகழுகிறேன்,
ஆம்
என்னுயிரை விட
உம்முயிரை உயர்வாக எண்ணுவதால்.

சிந்தனைகளின்
சிற்பமாய் நான் கண்ட
என் முதல் குரு
எனது நிழல், என் தந்தை.

கடைசி மகனாயிருப்பினும்
குடும்பத்தில் சிறந்தமகனாகி
தொண்டுகள் புரிந்திட்ட
தேவதை நீங்கள்.
பதினேழு வயதில்
பாவியாய் நின் தந்தையைத்
தொலைத்திட்டு, தாயையே
தந்தையாகவும் எண்ணியவர் நீங்கள்.

உங்களிலிருந்தே தொடங்குகிறேன்
எனது புனித பயணத்தை,
உங்களிலிருந்தே கற்றுக்கொள்கிறேன்
தாய் தந்தையர் பக்தியினை,
உங்களிலிருந்தே பார்க்கிறேன்
இந்த நீண்ட உலகத்தை,
உண்மையில் உங்களிலிருந்தே
வார்க்கிறேன் நான் என்னை.

தந்தையென்பவனே கோவில்
தாயென்பவளே கடவுளெனக்
கூறிய எனது அறிவுத்தந்தை நீர்
உங்களன்புக்கு நானடிமை கேளீர்.

ஒன்று முதல் பத்துவயதுவரை
அடம்பிடிக்கும் என்னை
அன்பு ஒன்றே காட்டி வளர்த்தீர்
பதினொன்று முதல் பதினைந்துவரை
நன்மை தீமையை சொல்லிக் கொடுத்தீர்
பதினாறு முதல் இன்றுவரை
என் தோழனாகவே இருக்கிறீர்.

இதோ நான் வளர்ந்துவிட்டேன்
எனக்காக அலைந்த உமது
கால்களுக்குச் செருப்பாக நிமிர்ந்துவிட்டேன்.
இனி என்கடன் இருக்கிறது.

இன்று முதல் தலைகிழாய்த்
தொடங்குகிறது உங்கள் பயணம் எனக்கு.
ஆம்,
நீர் இப்பொழுது என் தோழன்,
இறுதியில் நீர் என் குழந்தை.
உங்களது குழந்தைப் பயணத்திற்காக
என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இன்று அல்ல
என்றுமே எனக்கு
தாய், தந்தையர் தினம்தான்!

Saturday, June 14, 2008

விழிமின்

உன்னை மலரென்று
உரைப்பதெல்லாம்
உனைத் தூற்றவே,
உன்னை பூமியென்று
போற்றுவதாவும்
உன் ஓட்டம் தடுக்கவே,
உன்னை மெல்லியவளென
உளருவதெல்லாம் வெறும்பேச்சே!

கோழிச்சூட்டில் உய்த்திருக்கும்
பெண் முட்டைகளே
நீங்கள் குஞ்சுகளாய்ப்
பொறியும் காலம் கடக்கின்றனவே
நித்திரை இன்னுமென்றால்
பொரித்து விடுவார்களுனை!

பேருந்தில் தேகமுரசுபவன்
பாதங்களை மிதித்தெழுங்கள்
வாழ்க்கைத் துணைக்கு
வரதட்சனை கேட்பவனை
முதிர்கன்னனாக்குங்கள்
புணர்வுக்காக இப்பூமியின்கால்
பிறக்கவில்லைப் பெண்டிரே - நீங்கள்
புதுமைப் பெண்களே
என் பாரதியின்
எழுச்சிமிக்க தீச்சுடர்களே!

சுதந்திரமடைந்த நிலத்தில்
சுதந்திரமடையாமலிருக்கும்
அக்னிக் குஞ்சுகளே
அவசியப் பொழுதில்
கொதித்து எழுங்கள்
கல்வித் தேவைக்காவது.

வரதட்சனை வாங்கும்
வளைகர ஆண்களே
பெண்கள் பெட்டிப்பாம்பல்லவே
பெரும் தீச்சுடர்!

Friday, June 13, 2008

பணம்

சுயநலப் புழுதியில்
சிக்கிக் கொண்டு
சந்ததிக்கு சொத்து
சேர்க்கிறான் மனிதன்.
செல்வத்தோடு சேர்த்து
செழுத்த அன்பையும்
பூட்டி வைக்கிறான்.

பெட்டிகளைவிட சில நேரம்
பூட்டுகளின் விலை அதிகரிக்கிறது
அன்பு இருக்கும் நெஞ்சங்களை விட
பணமிருக்கும் பைகள் மதிக்கப்படுகிறது.

இரை தேடத் தெரிந்ததும்
முடிந்துவிடுகிறது விலங்கின் தேவை,
பணம் தேடத் தெரிந்த பிறகும்
உன்று கோல் தேடும் மனிதன் பேதை.

தினம் தினம் மனிதன் தேடும்
பணம் பணம் கெடுக்குது
அவன் குணம் குணம்.

எத்தனைத் தவங்கள்

இது கனவா
இல்லையிது நினைவா
ஊரிருக்கும் வேளையிலும்
ஒரு நாதியில்லாமல்
போனதொரு கைக்குழந்தையென
தவிக்கவிட்டுச் சென்றீரோ?
தேவையில்லை இந்த மகனென்று
தேசம் தாண்டி பறந்தீரோ?

அழுதழுது வற்றிவிட்ட
கண்களதில் இப்பொழுது
வடிவதெலாம் தேடலொன்றே.
உடல் இங்கிருக்க
உங்கள் உயிர் நானிருக்க
நீர் எங்கே போனீரோ?
என்னுயிரே நீதானே
என்று சொன்ன உங்கள்
வார்த்தையது தீயிலிட்ட
தேன் தானோ?

எட்டுவைத்து நடக்கையிலே
எங்கேயும் விழுந்திடாது
எந்தன் விரல் பிடித்த
கை இதுதானோ
கதறி இங்கே நானழுதும்
கண்ணீர் துடைக்க வரமால் போனது.

வெள்ளமது வந்தபோதும்
தோளில் தூக்கி நடந்திட்ட
கால்களும் இதுதானோ
நான் முட்டி அழுதும்
நகராமல் நிற்பது.

காய்ச்சலென்று துவண்டபோது
கால்கடுக்க நெஞ்சில் சுமத்திக்
கிடந்தும் இந்த மார்போ
நான் தொட்டு அழுதும்
துடிக்காமல் இருப்பது.

எத்தனையோ சோகம் வந்தும்
என்னிடம் சிரித்து மட்டும்
பேசியதிந்த இதழ்தானோ
இன்று என் கண்ணீர் பட்டும்
பேசாமல் இருப்பது.

தூரமெங்கு சென்றாலும்
திரும்பிப் பார்க்குமிடமெங்கும்
தவறாமல் நின்றனையே
நான் துவண்டு விழுந்து
துடிக்கிறேனே மறுபடி
ஒருமுறை உயிர்த்திட மாட்டாயோ?

எத்தனைத் தவங்கள் செய்தேன்!
என் உலகமெங்கும்
உங்கள் சொல்தானே
என் வானமெங்கும்
உங்கள் செயல்தானே
நான் நின்று நடந்ததும்
வென்று உயர்ந்ததும்
பார்த்த உம்மை இந்தப்
பாவி மகன்
தாங்கிப் பிடிக்க
மாட்டானென மரித்துவிட்டீரோ?

நீர் போகுமிடம் வந்துசேருவேன்
நின் பாதம்தனை விடமாட்டேன்
உனக்குத் தீயிடச்சொல்லும்
ஊருக்கு எப்படிப் புரியவைப்பேன்
தற்கொலைத் தவறென்று?

Thursday, June 12, 2008

தத்தளிக்கிறேன்

பெண்மேகமே நீ எங்கு போகிறாய்
என் தேசத்தை தொட்டுப் போகிறாய்
வான் வெளியிலே நீ கோலமாகிறாய்
என் சுவாசத்தை நீ உடைத்துப் பார்க்கிறாய்
அந்தத் தீண்டலில் மழை உதிர்த்துத் தூறினாய்
இரத்த நாளமதை நீ நனைத்துப் பாடினாய்.

பூ சுமந்து மலர்ந்தவேளை நீர் தெறிக்கிறாய்
நான் உதிர்ந்துபோகும் முன்பேனும் வந்து சேருவாய்!
நீ பகிர்ந்த வார்த்தையெல்லாம் சேர்த்துவைக்கிறேன்
அதில் நான் குதித்து கொஞ்சம் நீந்தப் பார்க்கிறேன்
வார்த்தையது தீருமுன்னே வந்து சேரடி
என் நெற்றிப் பொட்டில் ஒரு முத்தமேனும் இட்டு நிரப்படி.

நான் திரும்புகின்ற பக்கமெல்லாம் உந்தன் முகமடி
நான் கேட்கத்துடிக்கும் ஒலிகள் யாவும் உந்தன் குரலடி
உன் பக்கச்சூட்டில் பத்திரமாய் இருந்தேனடி, இன்று
நீயில்லா இரவு கூட எனைக் கொல்ல வருதடி.

ஏழு மாதம் என் வானமெங்கும் உந்தன் நிறமடி
நான் தின்று தீர்த்த உணவு எல்லாம் நிந்தன் சொல்லடி
நீ இல்லாமல் போனதெண்ணி வாடி நிற்கிறேன்
நீ வரும் வேளை மட்டுமெண்ணி தேதி கிழிக்கிறேன்
நான் எழுதி வைக்கும் கவிதை யாவும் எடுத்து வைக்கிறேன்
நீ வந்தவுடன் காண்பிக்க திட்டமிடுகிறேன்.

நான் கொடுத்த உயிரினை நீ வளர்த்தெடுக்கிறாய்
நாலு மாதம் தாய்வீடென தொலைந்து நிற்கிறாய்
நகம் வெட்டும் வேளையிலேயே சத்தம் போடுவாய்
ஆனால் பிள்ளை சுமக்க மட்டும் சிரித்துப் பூக்கிறாய்
நான் கொடுத்த பிள்ளையை வரமென்கிறாய்
கொடுத்து உன்னை வாட்டுகிறேனோவென தத்தளிக்கிறேன்.

கெட்டிக்க சம்மதமா?

மாமன் பொண்ணு வேறு ஒருத்தனைக் கட்டி, அவனும் விதி முடிஞ்சு
செத்துப்போக, இப்போ மாமன் மகள கட்டிக்குறியான்னு மச்சான் வந்து
கேட்டுபுட்டான். அந்தப் புள்ளைய பார்க்கப் போனவன் அவகிட்ட.......


பத்திரிகையும் வந்தாச்சு
பந்தக்காலும் நட்டாச்சு
பாவி மக முகத்துல
பழசு இன்னும் மறையலியே.

பாக்கு வெத்தல மாத்தயிலே
பக்குவமா நான் பார்த்தா
குனிஞ்ச தல நிமிரலையே
அதுக்கு வெக்கமொன்னும்
வெளக்க்கமில்லையே.

விளக்கனச்சா தாங்கிபுட்டு
வெடியக்கால எந்திருக்கும்
வெறும்பய நானில்ல
சோடி போட்டு சுத்துனதும்
சோளக்காட்டுல வெளாண்டதும்
சாமி கும்பிடப்
போகையில சந்தனத்த
நீயென் நெத்தியில வச்சதும்
குங்குமத்த நான் ஒன்
நெத்தியில வச்சதும்
நீ மறந்து போயிருக்கலாம்
பாவி மனம் மறக்கலடி.

என்ன மறந்த ஒம்மனசு
வேற தாலி கட்டிகுச்சு
சண்டாளி உன்னெனப்பு
இன்னுமென்ன கொலையா
கொல்லுதடி.

உம்புருசன் செத்தப்ப
உலகமே இருண்டுச்சுன்ன
பாவி மகன் நான்
ஒருத்தன் இருக்குறதே
மறந்துபுட்டுப் பேசிபுட்ட..

எந்த சாமி சொல்லுச்சோ
எந்த புண்ணியம் வென்றுச்சோ
ஒங்கண்ண என்கிட்ட
ஒன்ன கட்டிக்க சொன்னதும்
ஒசரத்துல பறந்தது எம்மனசு.

யாரடிச்சு நீ அழுத
சொல்லிபுட்டழடின்னு
வெளாண்டதெல்லாம்
அந்தக் காலம்.
இப்ப மாமங்காரன்
கேக்குதேன் என்னக்
கெட்டிக்கத்தான் சம்மதமா???


-------------------~~~****(0__0)****~~~-------------------

புருசன் இறந்தாலும் எனக்கு ஏற்கனவே கண்ணாலம்
ஆயிடுச்சேன்னுதானே ஊரு பேசுமென்று அவள்
கூறுவதற்கு, மாமனின் பதில்.......

-------------------~~~****(0__0)****~~~-------------------

ஏத்தி வச்ச தீபத்துக்கு
எப்போதும் ஒரே வெளிச்சந்தேன்
நீ சாகுறவர எம்பழய ரத்தினந்தேன்.

இருந்தாலும் ஏசும்
செத்தாலும் தூத்தும்
ஊரு பயகள
ஓரந்தள்ளு.

நீ சமஞ்சு இருந்தப்போ
பச்ச ஓல எடுத்துவர
திக்குத் தெச தெரியாம
காட்டுக்குள்ள போனப்போ
எதிர வந்த ஆயி
ஒம் மாம மவ
புண்ணியச்சின்னு
பொலம்புனது எங்காதுல
இன்னும் ஒலிக்குதடி.

ஒன் ஒடம்பு
ஒரு பொருட்டே இல்ல
ஒம்மனசு மட்டும்
போதுமடி இந்த
மாமங்காரன் ஒதுங்க.

எப்படியோ நடந்து
எங்கேயோ போன
உன் கால்தடம்
எம்மனசு தேடிவர
எக்காளந்தேன் இனி எனக்கு.

வருத்தமெல்லாம்
மூட்ட கட்டு
வருங்காலம் வரும்
தாலி கட்ட.
வானம் பார்க்க
இந்தப் பூமி பார்க்க
இப்போ சொல்லுதேன்
நீ எப்பவுமே என்
மாமன் மக ரத்தினந்தேன்.

உயிரை ஊதாதே

உனது முற்பிறப்பு அறிவாயா?
உனது பிற்பிறப்பாவது அறிவாயா?
இல்லையென்பது உன்பதிலெனில்
இருக்கின்ற உயிரை
மாய்த்துக் கொள்ள
மட்டுமெதற்கு இத்தனைப் போராட்டம்?

மரணம் வெல்ல
மருத்துவம் துடிக்கையில்
மரணப்பாதை நோக்கி
ஓடிடும் அற்ப மானிடா
நீ இறங்குமிடம் வருமுன்
எதற்காக இறங்குகிறாய்?

நீ ஊதித் தொலைக்கவா
நின் தாய் பத்துத்திங்கள்
கரு சுமந்தாள்,
பத்திரமாய் உனை ஈன்றாள்.

தற்கொலை செய்வது
குற்றமாம், புகையிலை
பிடிப்பது ஞாயமாம்,
சவுக்கடி கொடுக்க வேண்டம்
சட்டத்திற்கு.

பழக்கத்தை மாற்றமுடியிலையா
பழகிக்கொள் கீழிருக்கும்
ஏதோ ஒன்றை.

புத்தகம் படி,
தங்கையுடன் பேசு,
தம்பியுடன் விளையாடு,
தாயின் மடியில் தூங்கு,
தந்தையின் கால் அமுக்கு,
இசை படி,
கவிதை எழுது,
நம்பிக்கையிருந்தால்
இறைவனை நாடு.

நீ பிடிக்கும்
வெள்ளைப் புல்லாங்குழலில்
வருவது புகையல்லவே
உனது உயிரல்லவா.
சிந்தனை கொள்
உனது இன்பத்திற்கு
என் ஆயுளையும் கரைக்கிறாய்.

புகையிலை பிடிப்பதை
நிறுத்தென்கிறேன்,
முடியவில்லையெனினும்
கீழே போடுவதையாவது
அணைத்துவிடு.
எனது ஆயுள்
இன்னும் இரண்டு
நாள் நீடிக்கட்டும்.

Wednesday, June 11, 2008

எங்கேயோ தொலைகிறது மனிதம்

1.
வெள்ளந்திச் சிரிப்போடு
பேசிவிட்டு
நான் கொஞ்சம்
நகர்ந்து சென்றதும்
பச்சோந்தி போல் நிறம்மாறி
என்னைப் பற்றி செய்யும்
கீழான விமர்சனங்களில்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

2.
என்னறிவில் விளைந்தக்
கற்பனையைக் கேட்டுவிட்டு
கட்டுக் கதையாக
கேட்பவரிடம் இது என்னுடைய
சிந்தனை என்பவரிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

3.
சாலை விதிகளை மதிக்காது
சாலை கடக்கும் கோட்டில்
வாகனம் நிறுத்துபவரிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

4.
நலத்திட்டத்தின் பணத்தில்
நயவஞ்சகமாய் சுயநலத்
திட்டத்திற்கு செலவழிக்கும்
மக்கள் பிரதிநிதியிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

5.
தமிழ் தமிழென்று
கூறிவிட்டு தன் மகனை
வெளிநாட்டில் படிக்க
வைக்கும் சில
பச்சோந்திகளிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

6.
கையூட்டுகளுக்காக
தரமிழந்த மருந்துகளைத்
தினசரித் தேவைக்கு
அனுப்பி வைக்கும் மனிதரிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

7.
மாற்றான் மனைவியிடம்
தன் இச்சை தணிக்கத்
துடிக்கும் காமுகனிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

8.
தனது வெற்றியில்
தோற்றவனை இகழ்வதில்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

9.
புகையிலையின் புகை ஊதி
காற்றைக் கெடுப்பவரிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

10.
ஏதோ ஒரு அரசியல்வாதியின்
விளம்பரத் தாளை
என் வீட்டு சுவற்றில்
ஒட்டுபவரிடம்
எங்கேயோ தொலைகிறது மனிதம்

Tuesday, June 10, 2008

மழைக்கு மகுடங்கள்

1.
சர்ரென கீறிச்செல்லும்
வாகனத்தின் சன்னல்களில்
மெதுவாய்க் கோலம்போடும் மழை.

2.
துன்பத்திற்குப் பின்
இன்பமாம் - ஆமாம்
நிறைந்த புழுக்கத்துக்குப் பின்
நிறைந்தது குளிர் மழை.

3.
நீ வருவதை
நானறிவேன்,
இடியும் மின்னலும் எதற்கு?

4.
என்னையும்
என் இன்பத்தையும்
பல பரிமாணங்களாக்குறாய்
சன்னலோரத் துளிகளில்.

5.
நீ கிளப்பிவிடும்
மண்வாசனையில் எனது
மழலைக் குறும்புகளின்
நியாபக அணிவகுப்பு
நினைவில்.

6.
சன்னமாய்ப் பெய்யும்பொழுது
மகிழும் உள்ளம்
சரளமாய்ப் பெய்யும்பொழுது
வயக்காட்டில் ஊன்றுகிறது
ஞாபகங்களை.

7.
நீ என்னைத் தொட்டுச்சிதறவும்
துன்பங்களும் கரைகிறது
மழையோடே.

8.
அறிஞனின் அறிவுரையைக்
கேட்பது போல்
மௌனமாய் நனைகிறேன்
மழையில்.

9.
என் தோட்டப்
பூக்களுக்கு
முத்துமாலை அணிவித்து
முடிந்திருக்கிறது மழை.

10.
மழைப் பொழுதில்
மெருகேறிவிடுகிறது
என் தாய் கொண்டுவந்தத்
தேநீர்!

11.
உன்னில் நனைந்து
காய்ச்சல் வருமென்று
விடுமுறை விடப்பட்ட
பள்ளி மாணவர்கள்
தெருவில் மகிழ்ச்சியை
உன்னோடே கொண்டாடுகிறார்கள்.

12.
மழையே நீ,
எந்தக் கண்ணகியின்
கண்ணீரோ தெரியவில்லை
வெள்ளமாய்ப் பாய்ந்து விடுகிறாய்,
எந்தக் காதலியின்
ஆனந்தக் கண்ணீரோ தெரியவில்லை
அறுவடைக்குத் தயாராக்குகிறாய் பயிரை.

Monday, June 9, 2008

குழந்தை வானம் நீ

என் உயிருள் நுழைந்த உறவே
என் உதிரம் கலந்த கனவே
நேற்று என்பதுன் நினைவோடே
நாளை என்பதுன் கனவோடே
என் திசைகள் யாவையும் நீயானாய்
என் பயணம் முழுவதும் நீயானாய்
என் தாகம் தீர்க்கும் குடமே

நான் தொலைத்த நிமிடம் நீயானாய்
நான் இழந்த தருணம் நீயானாய்
என் தூக்கம் கலைத்த நிஜமானாய்
என் துக்கம் துடைத்த அன்பானாய்
வானம் முழுக்க நீ நிலவானாய்
வசந்தம் முழுக்க நீ பகலனாய்
என் பாதி நிறைக்க நீ பிறந்தாய்
என் மீதி கரைக்க நீ தவழ்ந்தாய்
பூக்கள் பூக்கும் அழகே

நான் நடக்கும் போது என் நிழலானாய்
நான் தூங்கும் பொழுது என் கனவானாய்
பேசும் பொழுது என் குருவானாய்
மௌனப் பொழுதில் நீ துணையானாய்
எனைத் தேடித் தேடி நீ முகிலானாய்
பின் அழுது அழுது நீ மழையானாய்
என் நாடி நரம்பெங்கும் நீதானே
என் தாடி மீசையும் நீதானே
என் எட்டு மாதப் பயிரே

Sunday, June 8, 2008

கார் முகிலே

மெல்லினமே மெல்லினமே மெட்டில் வாசிக்கவும்...


கார் முகிலே
கார் முகிலே
உந்தன் பால்மழையில்
நெஞ்சம் மகிழும்
தூறலிலே உன் தூறலிலே
துன்பங்கள் யாவையும் கரையும்.

நீ மண்ணில்
விழுந்திடும் நேரம்
சுகமாய் குளிர்ந்தது பூமி
நீ என்னில்
விழுந்த போது
துளி நீராய்ப்
போனேன் நானும்.

(கார் முகிலே.....)

நீ தூறிச் சென்ற துளிகள்
காற்றைக் கிழித்து வரவே
நான் கைகள் ஏந்தி நின்றேன்
துளித் தேனைக் கொடுத்துப் போனாய்.

மேகம் என்ற ஆடை
இந்த ஊரே உடுத்திய போதும்
என் ஆடை கழற்றி எறிந்தேன்
உன்னில் முழுதாய் நனைய

பூக்களில் பசும்புற்களில்
நீ தொட்டுச் சிதறுகிறாய்
பூக்கிறேன் துளி வேர்க்கிறேன்
என் இளமைக் காலம் பார்க்கிறேன்.

குடையில் ஒளியவில்லை
கார் முகிலில் நனைய வந்தேன்
நீரின் திவலைகள் வழியே
நான் வானம் சென்று வருவேன்.

(கார் முகிலே.....)

உந்தன் வருகைக் கண்டு
சில உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க
உன்னை விட்டு விலக
சில உள்ளம் விரும்பிடக் கண்டேன்

உந்தன் பார்வையில் மறைய
ஓடித் திரியும் உயிர்கள்
கைகள் மட்டும் நனைத்து
தன் காதல் நினைவில் வாடும்

உன்னிலே நான் நனைகயில்
என் துயரம் துடைத்து எறிந்தாய்
உன்னிலே நான் கரைகயில்
எனக்கு இன்பம் நூறு தந்தாய்

துளியாய்த் தூறி வந்தாய்
மழையாய் மாறி நின்றாய்
என் உயிரையும் கொஞ்சம் நனைத்து
நீ அமுதாய் வழிந்து போனாய்.

(கார் முகிலே.....)

Saturday, June 7, 2008

குட்டிச் சுவர்

கல்லூரியின் வசந்தங்களில்
மலரும் காளையர்களனைவரும்
காட்டுக்கு ராஜாதான்.

உச்சி வெயிலுக்கும்
அந்த மாமர நிழலுக்கும்
நாங்கள் பகிர்ந்து கொண்ட
இன்ப துன்பங்கள் புரியும்.
கல்லூரியின் குட்டிச்சுவரின்
கும்மாளத்தைக் குத்தகைக்கு
எடுத்தவர்களில் நாங்களும் உண்டு.

பசியில் சிறு குடலைப்
பெருங்குடல் திண்ணும்
வேளையிலும் பசியறியாது
பரிமாரிக் கொண்ட
நகைச்சுவைகளும்
நையாண்டிகளும்
பசுமரத்து ஆணியாய்
பதிந்து விட்டவை.

பயில வந்தப் பாடங்களை விட
பழகிக் கொண்ட பாடங்கள்தான் அதிகம்.
பெண்களைப் புரிந்து கொள்வதிலேயே
புலர்ந்து மறையும் எங்கள்
இளமைச் சூரியன்.
தேர்வுகளின் மதிப்பட்டையைப்
பொருட்படுத்தாத நாங்கள்
மதி பெண்களுக்கு மதிப்பெண்கள்
போட மறந்ததில்லை.

சகாராவின் தூறல்களாய்ச்
சில சில புன்னகைகளும்
எங்களுக்குப் புண்ணியச்
சின்னமாகிப் போன
செருப்புகளும்தான்
பல நேரம் பதிலாக வந்திருக்கிறது.

5 வருடம் கழித்து அதே
குட்டிச்சுவரை நோக்கி
கால்கள் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எனது தங்கையைக்
கிண்டல் செய்தவனைத் தட்டிக்கேட்க.

தென்றலுக்கு நன்றி

காலைக் கதிரின்
சிவப்புக் கோடுகளில்
கிழிந்து திறக்கிறது இதயம்
இன்றைய பொழுதின்
இடையறாக் கவலையின்
தொடக்கத்திலேயே மறைகிறது
மீதியிருந்த நம்பிக்கை.

இரவு முழுதும்
சிந்தித்துக்கொண்டிருந்ததில்
சிவந்து விரிந்தது கண்கள்
நொடிப் பொழுதில்
தோன்றி மறையும்
மின்னலென வெள்ளை
ஆடைகளும் முகத்தருகே
எச்சில் தெரிக்க
பணம் எங்கே?
உயிர் வேண்டுமா இல்லையாவென
கேட்பது போலான
வார்த்தகளின் கற்பனையும்,
சற்று நேரத்திலேயே
மின்னலின் தொடர்ச்சியாக
ஒலி வேகத்தில் வரும்
இடியைய்ப் போல
தலைக்குள் ஏற்படும்
சத்தம், முழுதும்
அமைதியான எனது
படுக்கையில் எனக்கு
மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது.

எண்ணங்கள் யாவையும்
எடுத்து எறிந்துவிட்டு
எனது இறுதி
நம்பிக்கையான
நண்பனின் வீடுநோக்கி
கால்கள் நகருகிறது.
எனது தாயின்
அறுவை சிகிச்சையின்
செலவுக்கு அல்லாடிக்
கொண்டிருக்கும் எனக்குப்
பணம் புரட்டிக் கொடுப்பதாய்ச்
சொன்ன அவன் வார்த்தைகள்
மட்டும் காதுகளில் வழிந்து
மூளைக்கு நம்பிக்கை
ஆக்ஸிஜன் அனுப்புகிறது.

நடைபாதையில் எங்கெங்கோ
நட்டு வைத்த மரங்களின்
குளிர்ந்த தென்றல்
குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருந்த
அறிவின் தூக்கத்தைக்
கலைத்து எழுப்பியது.
தென்றலுக்கு நன்றி!

Thursday, June 5, 2008

வெற்றிடம்

இருள் சூழ்ந்த
கானகத்தின் மௌனத்தில்
நிராயுதபாணியாய் நின்று
கொண்டிருக்கிறது மனது
தனித்தீவில் தன்னந்தனியாய்
மாட்டிக் கொண்டவனின்
கைக்கடிகாரமும் உடைந்தது போல
தவிக்கிறது இயலாமை
எங்கிருந்தோ வந்து
என் இமையிரண்டையும்
பறித்துச் சென்று விட்டுத்
தூங்கச் சொல்கிறது
இதுகாரும் நிகழ்ந்த நிகழ்வுகள்
நிலவின் நகரலைக்
கணக்கெடுத்துக்கொண்டே
விண்மீன்களை எண்ணுவது போல
வினாடிக்கு வினாடி
குறையாத அனுபவங்களை
அசை போடுகிறது ஆழ்மனது
தூக்கத்திலிருந்து விழித்துக்
கொண்ட குழந்தை
தாயின் விரல்களைத்
தேடுவது போல
பக்கத்து இடத்தை
வெறித்துப் பார்க்கிறது
தேடித் தொலையும் மனது
விடியப் போகும் வானத்திலிருந்து
இமையிரண்டும் திருப்பி
அனுப்பப்பட்டு தூங்கத்
தயாராகும் விழிகளுக்கு
எப்படிப் புரிய வைப்பது
என் நண்பன் வருவதற்கு
இன்னும் ஒரு வாரம்
இருக்கிறதென்று.

மானிடனே

ஆதியிலும் நீ இல்லை
முடிவிலும் இருக்கப் போவதில்லை
அந்தரத்தில் பிறந்த
அற்ப மானிடா
உன்னைப் பற்றிக் கூறுகிறேன் கேள்.

உனது மதம்
உனது சாதி
உனது நாடு
உனது மொழி
உனது உனது என்று நீ
உழன்று கொண்டிருக்கும் யாவையும்
பிறப்பன்று உனக்குப் புகுத்தப்பட்டது,

இச்சையில் பிறந்த
எச்சில் மனிதனே
அன்பு ஒன்றைத் தவிர வேறு
அனைத்தையும் தவிர்த்து விடு.

நீ காணும் உனது
நிறம் உனதல்லவே!
உன் மீதுள்ள சாயம் எல்லாம்
உன்னோடு ஒட்டிக் கொண்டவை.

உடலை மறந்து
உண்மை ஆன்மாவை அறி.
யாவரும் மனிதர்களே
எங்கும் உன் சக பயணிகளே!

நீ எதையும் கொண்டு வராதது போல்
நீ எதையும் கொண்டு போகவும் இல்லை
உனது மகிழ்ச்சி மாயை
உனது வருத்தம் மாயை
நிதர்சனம் என்பது
நிச்சயம் அன்பு ஒன்றுதான்.

நீ சாலையில் எச்சில்
துப்புவதிலிருந்து பிறரைத்
தூற்றுவது வரை,
எண்ணற்ற வேலைகளை
எடுத்து எ(றி)(ரி),
உன் கண்களில் அன்பு மலரட்டும்
உன் காதுகளில் அன்பு ஒலிக்கட்டும்
உன் வாய் அன்பு பேசட்டும்
உன் உணர்வுகளில் அன்பு வழியட்டும்.

முதலில் உன் சமுதாய
முகத்திரையைக் களைந்து எறிந்து
மனிதனை மனிதனாக
மட்டுமே பார்த்துப் பழகு.

Wednesday, June 4, 2008

சிவப்பு விளக்கு

எச்சரிக்கை விளக்கு
என்பதையும் தாண்டி
கட்டளை விளக்காக
காட்சியளிக்கிறது சிவப்பு.

தவறினால் சிவப்புக் குருதி
தவறாமல் வருமென்பதை
மறைமுகமாக அன்றி
நேர்முகமாகவே பறைசாற்றுகிறது.

சொல்பவர் யாராயினும்
செவி கொடுத்துக் கேட்பவர் யார்?
தண்டனையைத் தவிர வேறெதுக்கும்
தலைவணங்காத தலைமுறையினராய்
மாறி வருகிறது இந்த
மாற்றம் கண்ட சமூகம்.

பச்சையின் பொழுது
பக்குவமாய் நாற்பதில்
வரும் வாகனம் ஆரஞ்சு
வந்தவுடன் சிறிதும் தயங்காமல்
அறுபதுகளுக்குத் தாவுகிறது
அத்துடனும் நிற்காமல்
நில்லென்ற கட்டளை
நிறத்தையும் பார்த்தவுடன்
என்பதுகளில் பறந்து
எட்டிவிட நினைக்கிறது இலக்கை.

பாவி மனிதர்களின்
பக்குவமற்றப் போக்கால்
மற்றொருவரையும் முடிந்தவரை
மரணப் படுக்கைக்கு
அழைத்துச் செல்கின்றனர்.

சிவப்பில் பயணிக்கும்
சிறு மதியினரே
சாக வேண்டுமென்றால்
சக மனிதனையும்
அழைப்பது ஏன்?

காதலியல்

நீ, காதலிக்கிறேன்
என்று சொல்லாததினாலேயே
எனது காதல்
ஆழமாகிக் கொண்டிருக்கிறது.

---- o~0~*~0~o ----

பேருந்து வருகிறதாவென்று
பார்ப்பது போல
என்னைப் பார்ப்பாய்,
நான் சிரித்து விடுவேன்
நீ வெட்கத்தில் சிவந்துவிடுவாய்.

---- o~0~*~0~o ----

எதற்காகவோ அழுது கொண்டிருந்தாய்
என்னவென்று தெரியாமலேயே
கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்.

---- o~0~*~0~o ----

நீ தலையில் வைத்துக்கொண்ட
ஒற்றைப் பூவைத் தவிர
உன் தோட்டத்திலுள்ள
மற்றவையெல்லாம் வாடிவிடுகிறது.

---- o~0~*~0~o ----

பூமிக்கும் வானத்திற்கும்
பெரிய சண்டை.
பூமி உன்னை அழகென்கிறது
வானம் இல்லையென்கிறது.
ஒரு முறையாவது தலையைத் தூக்கி
வெட்கப்படு, வானம் வசப்படும்.

---- o~0~*~0~o ----

உன் வீட்டு வாசலின் மரத்தில்
பூக்களே இருப்பதில்லை - உன்
பாதம் படுவதற்காக
அத்தனையையும் உதிர்த்து விடுகிறது.

---- o~0~*~0~o ----

உன் மேல் விழுந்துவிட்ட
உதிர்ந்த பூக்களெல்லாம்
மோட்சம் அடைந்துவிட்டதாக
முணுமுணுத்துக் கொண்டது.

---- o~0~*~0~o ----

நிலவு வந்தும் நாம்
இன்னும் மறையவில்லையாவென
குழம்பிவிட்டது மதியத்தில்
உன்னைப் பார்த்தச் சூரியன்.

---- o~0~*~0~o ----

கண் தெரியாதவர்களுக்குச் சாலையைக்
கடக்க நீ உதவும் போதெல்லாம்
காதல் குருடன் நானென
மனசுக்குள் சத்தமாக கத்திவிடுகிறேன்.

---- o~0~*~0~o ----

உன் முகத்தைப் பார்க்க வரும்
முடியை நீ பின்னால் தள்ளிவிட்டும்
முன்னாலேயே வருவது போல
நீ வேண்டாம் என்று சொன்ன பிறகும்
நான் காதலித்துக் கொண்டே இருக்கிறேன்.

---- o~0~*~0~o ----

நீ என்றோ உலர வைத்துக்
காற்று கொண்டு போன
வண்ணச் சுடிதார் வானத்தில்
வானவில்லாகக் காட்சியளித்தது இன்று.

---- o~0~*~0~o ----

நீ என்னிடம்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று சொல்லமலேயே இருக்கலாம்.
எனது இதயம் அதைத் தாங்குமா
என்ற சந்தேகம் இருக்கிறது.

---- o~0~*~0~o ----

காதலைச் சொல்வதற்காக
காகிதத்தில் எழுதுகிறேன்,
சிறிதும் என்னைக் கேட்காமலேயே
சிறகு முளைத்துப் பறந்து விடுகிறது கடிதம்.

---- o~0~*~0~o ----

புதுப் பேனா வாங்கி உனது
பெயர் எழுதி விட்டு வேறு
எதையும் எழுத மனசில்லாமல்
எடுத்து வைத்து விடுகிறேன் பத்திரமாக.

---- o~0~*~0~o ----

நீ என் கனவில் வருவதே இல்லை,
நினைத்து மறந்துவிட்டவைதான்
கனவில் வருமாமே!

---- o~0~*~0~o ----

உன்னைத் தொட்டுவிடுவதற்காகவே
உள்ளே இருக்கும் தண்ணீரெல்லாம்
அலையாக கரைக்கு வந்துகொண்டிருக்கிறது.

---- o~0~*~0~o ----

நீ கால் நனைக்காமல்
போய்விட்டதால்
அழுது அழுது கடல்
அதிகமாக உப்புக்கரிக்கிறது.

---- o~0~*~0~o ----

நான் நினைக்கும் பொழுதெல்லாம்
நீ தும்மலிடுகிறாயாவெனத் தெரியாது
ஆனால், நீ தும்மலிடும்பொழுதெல்லாம்
நான் நிச்சயம் உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருப்பேன்.

---- o~0~*~0~o ----

ச்சீப் போடாவென்று
சினுங்கிக் கொண்டே
அனைத்துக் கொண்டாய் - காதலென்றாலே
அனைத்தும் தலைகீழ்தான்.

---- o~0~*~0~o ----

உன் கண்ணில் விழுந்த
தூசியெடுக்க முயன்று எடுத்தும்விட்டேன்,
தவறி நானல்லவா விழுந்துவிட்டேன்.

---- o~0~*~0~o ----

Tuesday, June 3, 2008

உறைந்து விடுமுன் வந்துவிடு உயிரே

என் கைவிரல்களெல்லாம்
உன் கைரேகைகள்,
என் முத்தம் படாத உனது
கன்னத்தில் இடமும் உண்டோ?

பொழுதுகளின் புலர்வுகளில்
பொதிந்து கிடக்கிறது
உந்தன் மீதான கனவுகள்,
உலகின் இன்பம் யாவையும்
சேர்ந்து வந்த பொக்கிஷம் நீ.

என்னைப் பார்த்து நீ
எப்பொழுதாவது உதிர்த்துவிடும்
சிரிப்பிற்காக உன் பாதங்களிலேயே
சிறைபட்டுக் கிடக்கிறேன் அன்பே.

உன்னிடம் பேசிப் பேசி
உந்தன் பிள்ளை மொழி
பயின்று வருகிறேன்,
பாரில் நான் படித்த
மொழிகளிலே உன் மொழிபோல்
மெய்யான ஒன்றைக் கண்டதில்லை.

நீ "ங்ஙே" என்று
நீட்டி முழக்கும்
வார்த்தைக்கு மட்டும்
அர்த்தங்கள் இருக்கும்
ஆயிரமாயிரம்.

மெல்ல விரிந்திடும்
மேகப் பூக்கள் போல
எட்டு வைத்து நீ
எத்தனித்து நடக்கையில்
இந்த பூமி இன்று
இன்னுமொரு பாக்கியம்
பெற்றுவிட்டது.

சன்னல் திரைக்குப் பின்னால்
சாதுர்யமாய் ஒளிந்து கொண்டு
என்னுடன் ஒளிந்து விளையாடுகிறாய்
எண்ணி இரண்டு நிமிடத்தில்
முகத்தைக் காண்பித்து
மீண்டும் மறைத்துக் கொள்ளுகிறாய்.

போதுமடீ செல்லமே
பத்து மாதம் தாய் வயிற்றில்
நீ ஒளிந்திருந்ததே போதும்.
நித்தம் இனி என்னருகிலேயே
இருந்துவிடடி.
இருபத்தொன்பது வயதுத்
தாகத்தை ஒன்றரை வருடத்தில்
தீர்த்து விட்டாயே செல்லப் பிள்ளையே.

இரண்டு நிமிடம் உன்னைக் காணாமல்
உறைந்து விடுமுன் வந்துவிடு உயிரே
ஒளிந்து விளையாடியது போதும்.

Monday, June 2, 2008

உன்னிடம் ஒரு உண்மை சொல்ல வேண்டும்

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் முறை
எனது உள்ளுணர்வுகளை
எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

நீ ஒவ்வொரு முறை
நீண்ட அன்பினை
செலுத்தும்போதும்
சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொள்கிறேன்
எப்படியாவது கூறிவிட வேண்டுமென்று.

மாற்றங்கள் இந்த உலகில்
மாறாதது எனும் தத்துவம்
இன்னும் உனக்குப் புரியாமல்
இருப்பதுதான் எனக்குச் சங்கடம்.

உள்ளுணர்வோ அல்லது
உன் பெண்ணுணர்வோ
தெரியவில்லை,
உன்னை என்னிடம்
நீங்கள் யாரையும் இதுவரைக்
காதலித்தது இல்லையல்லவா
என்று கேட்கத் தூண்டுவது.

ஒவ்வொரு முறையும்
ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்
என் உதட்டுக்கடியில்
எட்டிப்பார்க்கும் பொய்யினுள்.

முன்னொரு நாளில்
மூர்க்கமாய் ஒரு பெண்ணைக்
காதலித்தேன், அவளது
குடும்பச் சூழலில்
என்னை விட்டுப் பிரிகிறேன்
என அவள் கூறிச்சென்ற
நாளிலிருந்து நான்கு வருடம்
நித்திரையில்லாத இரவுகளாகக்
கழித்த நாட்கள் மட்டும்
கணக்கிலடங்காது.

உன்னை மணந்தபிறகுதான்
உண்மை உணர்ந்தேன்,
மாற்றங்கள் என்றும்
மாறாதது என்று.
நிச்சயம் உன்னிடம்
நிதர்சனமாய்தான் வாழுகிறேன்.

இன்று இரவும்
இனிய கனவுகளுடன்
உறங்கிவிட்டாய் - நான்
உறங்கா உண்மையுடன்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal