என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, April 30, 2009

காதல், கானகம் - பகுதி 37

நீண்ட பயணத்திற்குப் பின்
நின்றது கால்கள்.

இதுதான் சரியான
இடம், இங்கே
நம்மை யாரும்
நெருங்க முடியாது.

அவர்களது கட்டை
அவிழ்த்து விடுங்கள்
என்றான் தலைவன்.

கண்கள் திறந்தது
கலங்கலாக பார்க்க
ஆரம்பித்த பார்வை
ஆழமாக பார்க்கத் தொடங்கியது.

விடவில்லை; மீண்டும்
வினவினான் யார் நீங்கள்?

நாங்கள் போராளிகள்
நலிவடைந்த அன்பை
அகிம்சையால் பெறமுடியாமல்
ஆயுதம் ஏந்தியவர்கள்.

மண்ணில் கொஞ்சம் மட்டுமே
மிச்சமிருக்கும் அன்பெனும்
ஈரம் காய்வதற்கு முன்னே
எங்கள் குருதி கொட்டியாவது
தழைக்க வைக்கவிருக்கும்
தன்னலமற்றவர்கள்.

தன்னலமற்றவர் செய்யும்
தர்மமா இது?
அகிம்சை வெறுத்து
இம்சை எடுத்த நீங்கள்
தொண்டு செய்யப் போகிறீர்களா?
உங்கள் குருதியில்
பொங்குவது அன்பாயிருக்காது
நிச்சயம் வெறியாய்த்தானிருக்கும்
வெம்பியழுதன மதியின்
வார்த்தைகள்.

வாயை மூடு!
வார்த்தைகளைக் கூட எங்களது
சுயநலத்திற்காக
செலவழிக்காத கூட்டம் நாங்கள்.

நீங்கள் பிறந்ததுமுதல்
உங்கள் உயிரைப்
பிரியும் வரை
பிணியாக வாழ்பவர்கள்.

ஒன்று மட்டும் சொல்கிறேன்
ஒரு காதிலாவது வாங்கிக்கொள்
இந்தப் போராட்டம்
எந்தப் பிரிவினருக்கும்
பொதுவானது.

உனது வாழ்விற்கும் சேர்த்துதான்
எமது வாழ்க்கையை
பணையம் வைத்துப்
போராடுகிறோம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, April 29, 2009

காதல், கானகம் - பகுதி 36

போகப் போகப்
புரியும்,
கட்டுங்கள் அவரது
கை, கால்களை
கருப்புத் துணியிட்டு
கண் மறையுங்கள்
என்றான் கூட்டத் தலைவன்.

வில்லிருந்து புறப்பட்ட
அம்பு போல் இருந்தது
அவர்கள் செயல்.

கண்ணிருந்தும்
குருடர்களானார்கள்
கையிருந்தும்
கையாலாகதவர்களானார்கள்
முதுகெலும்பிருந்தும்
அடிமைகளானார்கள்.

ஆண்டுகள் பல காதலனுக்குத்
தொண்டுகள் செய்ய வேண்டும்
என்றெண்ணியது மதியின் ஒரு மனது.
இன்றைய பொழுதே
இறுதி எனப் பட்டது.
இருப்பினும் இரண்டரை மணிநேரப்
பயணத்தில் அடைந்த
பயனே போதுமென்றது
பின்னொரு மனது.

நடப்பதேதும் புரியாததாய்
நடந்து கொண்டிருந்த
காதல், நடக்கும்
கணத்தை தனதாக்கிக்
கொண்டான்.

யார் இவர்கள்?
என்ன இவர்கள் கருமம்?
கொல்வதற்காக நிச்சயம்
அழைத்துச் செல்லவில்லை.
பணையக் கைதிகள் ஆகினோமோ?
திருமணம் என்னவாகும்?
முதலில் உயிர் பிழைப்பது
முடியும் காரியமா?
இம்ரான், சாமியின் வாழ்வு?
இவர்களை தாக்கும்பொழுது
எவறேனும் பாதிக்கப்பட்டுவிட்டால்?
அமைதியே சிறந்தது.
அப்படியானால் தப்பித்தல்?
அதற்கான நேரத்திற்கு காத்திருத்தல் வேண்டும்.

கனவு போல்
கணத்திற்கொரு எண்ணம்
ஓடிக்கொண்டேயிருந்தது
ஓநாயின் ஊளைகளை
ஓயாமல் ஓராயிரம் முறை
காதலின் காதில்
கேட்டுக்கொண்டிருந்தது.

குழம்பிய குட்டை
கொஞ்சம் கொஞ்சமாய்
தெளிவாவது போன்று
தெளிந்தது காதல் மனது.

முடிந்துவிட்டது எல்லாம்
முடியும் வரை இனி
போராடுவோம் என்றெண்ணினான்.
பணையமாக தன் தலை வைத்தேனும்
இவர்கள் மூவரையும்
காத்திட துணிந்தான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, April 28, 2009

காதல், கானகம் - பகுதி 35

அய்யா ஓடிடுங்க
அசெளகரியமான குரல்.
சட்டென்று அந்த
சத்தமும் நின்று விட்டது.

ஏதோ தவறாக நடக்கிறது
என்பதை காதல் உணருமுன்னே
துப்பாக்கிகளுடன்
தீவிரவாதிகள் போல சிலர்
சுற்றி வளைத்தனர்.

வெளிச்சத்திற்கு
ஆசைப்பட்ட ஈசல் போல்,
தூண்டில் புழுவுக்கு
ஆசைப்பட்ட மீனைப் போல்,
எலிப்பொறி உணவிற்கு
ஆசைப்பட்ட எலியைப் போல்
ஆயிற்று மதியின் மனது.

கடுகளவும் அச்சமென்பதறியாத
காதல் மனது கனத்தது.
காதலியை வற்புறுத்தி
அழைத்துவந்து
மீளாக் குழியில்
தள்ளினோமோவென்று
துன்பத்தில் தத்தளித்தான்.

கடலில் மூழ்கியவன்
கடைசி மூச்சை
இறப்பின் தருவாயில்
இழுப்பது போல
தைரியத்தை மனதில்
தரித்துக் கொண்டான்.

முதுகுக்குப் பின்
மதியை நிறுத்திக் கொண்டு
இருகரமும் காதலியை
இரும்பு அறை போல்
சுற்றி வைத்துக் கொண்டான்.
இறப்பென்று
ஒன்று வந்தாலும்
வருவது எனக்காக
இருக்கட்டும் முதலில்
என எண்ணினான்.

பயத்தின் காட்சிதனை
சுயத்தில் பார்த்ததும்
கண்களில் அப்பதிவுகளை
கடைசி சொட்டு வரை அழித்தான்.
கேட்டான்,
யார் நீங்கள்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, April 27, 2009

காதல், கானகம் - பகுதி 34

எனது காய்ச்சலுக்கு
நீங்களும் பத்தியமிருக்கிறீர்கள்
எனது உணர்வுகளை
நான் சொல்லும் முன்பே
நிறைவேற்றி விடுகிறீர்கள்
உங்களை அடைந்தது
உறுதியாக நான் செய்த
பூர்வ ஜென்ம
புண்ணியம்தான்.

புகழ்ச்சிகளால்
புளங்காங்கிதம் அடையாது
புன்னகை மட்டும் செய்தான்.

எதற்கு இந்தச் சிரிப்பு?
எதையும் அறிவியலாய்
பார்க்கும் உங்களுக்கு
பூர்வ ஜென்மம் என்பது
புன்னகைதான்.

இல்லை.
இன்னும் அது பற்றிய
சிந்தனைகளில்
சிக்கியதில்லை நான்.

ஆனாலும்,
எனக்குத் தெரிந்ததை
உனக்குச் சொல்கிறேன் கேள்.

நிலம்,
நீர்,
நெருப்பு,
காற்று,
ஆகாயம்
இவை ஐந்தும் பூவுலகில்
இருக்கும் சதவிகிதம்
மனிதனுள்ளும் உண்டு.

ஆம்,
மனிதன் அண்டத்தின்
பிரதி பிம்பம்.
உடல்,
உலகின் சிறியதோர் அச்சு.
ஆன்மா,
அண்டத்தின் அச்சு.

உன்னை உணரு! - ஏனெனில்
அண்டம் போல்,
ஆன்மாவும் அணைவது இல்லை.
பூவுலகைப் போல்,
பூதவுடலுக்கும் அழிவுண்டு.
நீ உன்னை உணருவதும்
நீண்ட உலகங்களை உணருவதும் ஒன்றே.

அதனால் அண்டம் போல்
ஆன்மாவிற்கும்
அழிவில்லையோ என்னவோ?

உன்னை அறி என்னும் பொருளான
உள்கட எனும் வார்த்தைதான்
கடவுள் என மாறிற்று.

திடீரென்று
திரும்பிய புறமெல்லாம்
சருகுகளின் சலசலப்பு.
விலங்கோ இல்லை
மனிதர்களாகத்தான்
இருக்க வேண்டும்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, April 24, 2009

காதல், கானகம் - பகுதி 33

உனது எடையில்
கால் கிலோ,
முத்தமிட்டு குறைக்கட்டுமா?

55 மணி நேர முத்தமென்றால்
அது உலக சாதனையாகிவிடும்.
அதனால் வேண்டாம்.

உனை இப்பொழுதே
மணக்கட்டுமா?

தாலியும், மேளதாளமும்
தங்களிடம் இருக்கிறதா?

ம்... உனக்கு
மகிழ்ச்சி தரும்
விஷயம் ஒன்று சொல்லவா?

என்ன அது?

நமது திருமணத்திற்குப் பிறகு
உனது பெற்றோரும்
நம்முடந்தான் இருக்கப் போகிறார்கள்.

ஒரு நிமிடம்
உற்றுப்பார்த்த கண்கள்
உறைந்து போவதற்குள்
சிறிதளவு கண்ணீர்
கரை கடந்து ஓடியது.

ஆதவளே, இது என்ன
ஆனந்தக் கண்ணீரா?

நீ வீட்டுக்கு ஒரே மகள்.
உன்னையும் பிரிந்து
உன் பெற்றோர்கள்
அனாதையாவதில்
எனக்கு விருப்பமில்லை.
ஏற்கனவே இருவீட்டாரிடமும்
பேசிவிட்டேன் - உனக்கு
பரிசாக திருமணத்தன்று
சொல்லலாம் என்று இரகசியம்
சுமந்து வந்தேன்.

அனை மீறி வழியும் நீர்போல்
கண் கடந்து வரும்
கண்ணீரால்
காதலின் மடி நனைத்தாள்.

இதில் வியப்பென்ன
இருக்கிறது?
உனது குடும்பமும்
எனது குடும்பமும்
வேறல்லவே!

கண்ணீர் துடை - அருவித்
தண்ணீரெல்லாம்
உப்பாகி விடப் போகிறது.

ஏதோ கேட்கப் போகிறாள்
என்பதை வாய்க்கு
முன்னராக கண்கள்
முணு முணுத்தன.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, April 23, 2009

காதல், கானகம் - பகுதி 32

மிட்டாய்க்குச் சண்டையிடும்
சுட்டிக் குழந்தைகள் போல
சண்டையிடுவதைக் கண்டு
சமாதானம், சமாதானம்
என்றாள்.

சமாதானத்தை
சரி பாதியாய் ஏற்றனர்...
இங்க பேசிகிட்டு
இருங்க, நாங்க
முடிஞ்ச வரைக்கும்
மூலிகை பறிச்சுட்டு
வர்றோம் என்றனர்.

நாய் குட்டி போல்
அவன் மடியில்
அடைக்கலமானாள்.

நெற்றி மறைக்கும்
நீண்ட முடிகளை கோதினான்.
அவள் முகத்தில்
அழகாய் கருஞ்சாமரம்
வீசிக் கொண்டிருக்கும்
விழி இமை தொட்டான்.
கண் மூடினாள்.

நீ நம்பும் அளவிற்கு
நின் கண்கள் எனை
நம்பவில்லை.

நான் வேறு
என் கண்கள் வேறா?

உன்னை நான் தொடும்போது
சுன்னமிட்ட நாக்குபோல்
நீ சிவந்து மலர்கிறாய் - ஆனால்
நின் கண்கள் என்னவோ
எனைக் காண விருப்பமின்றி
இமைகளை மூடிக்கொள்கிறது.

அது வெட்கத்தின்
அறிகுறி.
பெண்டிரின் வெட்கம்
கண்களிலும்
புன்னகையிலும்தான் பெரிதும்
புதைந்திருக்கும்.

சரி,
இமைகளைத் தொடும் போது
இரக்கமில்லாமல் கண்ணைக்
குத்திவிடுவேனோவென
கண் ஏன் மூடிக் கொள்கிறது.

விழியில் படிந்திருக்கும்
உங்கள் பிம்பம்
அழிந்துவிடக் கூடாதெனும்
அக்கறையோடுதான்.

சாமர்த்தியமான பேச்சு
சடுதியில் இதற்கு ஒரு
பரிசு கொடுத்தாக வேண்டும்.

என்ன பரிசு?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, April 22, 2009

காதல், கானகம் - பகுதி 31

அருகினில் செல்ல செல்ல
ஆர்ப்பரிக்கும் அருவி கண்டாள்
வழிந்து ஓடும்
வழித்தடம் எல்லாம்
வைரம் போல் மின்னும்
தண்ணீர் கண்டாள்.

பார்த்தாயா ஆதவளே,
பசுமையின் திடமான
சாட்சியாய் செழித்திருக்கும்
செல்வங்களைக் காண்.

அய்யா இங்க இருக்கும்
அத்தனையும் மூலிகைதாங்க
இந்தத் தண்ணி குடிச்சு
இளைப்பாறினா நடந்து வந்த
சலிப்பே போயிடுமுங்க
என்றான் இம்ரான்.

அப்படியே கைநிறைய
அள்ளி மனம் நிறைய
குடித்தார்கள்.

தண்ணீரில் இருக்கும்
தாய்மை உணர்ந்தார்கள்.

கொண்டு வந்த
கெட்டிச் சோறும்
நேத்து வச்ச
நல்ல புளிக்கொழப்பும்
இருக்குங்க, இங்கேயே
இருந்து சாப்பிட்டுட்டு
போலாமுங்க என மதியின்
பசியறிந்து சொன்னான் இம்ரான்.

ஆமாங்க அத்தான் இந்த
அரசமரத்தடியிலேயே அமர்ந்து
சாப்பிடுவோம் என்றாள் மதி.
சம்மதம் தெரிவித்தனர் மூவரும்.

கொண்டு வந்த சோறும்
குழம்பும் காலியானது....

யாரு வைத்த குழம்பு?
அருமையா இருக்கு.

அம்மா, இது நாந்தான்
வச்சேன். முந்திக் கொண்டான்
ஆரோக்கிய சாமி.

இந்தத் தண்ணியில வைக்குற
எந்தக் குழம்பும்
நல்லாத்தாம்மா இருக்கும்
நகையாடினான் இம்ரான்.

இவன் வைக்குற
இறைச்சி கொழம்ப
சாப்பிட்டீங்கன்னா
சாப்பாடே வெறுத்துடும்
உங்களுக்கு. இடித்து
உரைத்தான் சாமி.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, April 21, 2009

காதல், கானகம் - பகுதி 30

நெடுங்காடு - அவ்வப்பொழுது
நெஞ்சை உதற வைக்கும்
சருகளின் ஓசைகள்
சர்ப்பமோ, இல்லை
பேயோவென்ற மதியின்
பயத்தின் அளவை, அவள்
பிடித்திருக்கும் தன்
கைவிரல்களிலே
கச்சிதமாய் படியும்
அழுத்தம் கண்டு
அவன் உணரலானான்.

நாங்கள் மூவரும் உன்னோடு
நடக்கையில் எதற்காக
பயப்படுகிறாய்?
பயம் என்பது மாயை
கானல் நீர் போல
கடந்து சென்ற பிறகு
மறைந்து விடும்.

மலர்கள் பார்
மரங்கள் பார்
அரிய நாற்றம் நுகர்
அங்கே தூரத்தில்
தெரியும் அருவி பார்
தீராத ஓவியமாய்த்
தெரியும் மலைகள் பார்.

அருவியின் ஆற்றலில்
அரும்பி சட்டென்று
உடையும் நீர்க்குமிழி போல்
உள்ளே பிறந்த தைரியம்
மறுபடி ஒலி கேட்க
மதியிலிருந்து மறைந்தது.

எங்க உசுரு போகாம
உங்க உசுரு போகாதும்மா
இந்தக் காட்டுல
இரண்டு பேரும் நீண்ட காலமா
வாழுறவங்க நாங்க,
வழித்தடம் எல்லாம்
அத்துபுடி என்று
அறைகூவல் விட்டான்
ஆரோக்கிய சாமி.

சற்றே மனம்
சமாதானமடைந்தாலும்
இனம் புரியாத
இடையூருகளாகவே
தெரிந்தது மரங்களும்
தெளிவில்லாத பாதைகளும்.

மெல்ல விலகும்
மேகத்தினிடையே
அழகாய் ஒளிரும்
அம்புலியைப் போல
தூரம் குறையக் குறைய
தெளிவாகத் தெரியும்
அருவிய் தனது
அழகால் மதியின்
பயம் களைந்தது.

இவ்வளவு அழகான
இடமா இது?
எவருக்கும் தெரியாமல்
எழுதப் பட்டிருக்கும்
ஓவியம் கண்டு
ஒரு நிமிடம் திகைத்தாள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

காதல், கானகம் - பகுதி 29

கானகத்திலேயே வாழ்பவர்களை ஒரு
கணம் கண்ணிமைக்காமல்
பார்த்துவிட்டு
படபடப்பாய்ச் சொன்னாள்
வணக்கம்.

இவள் பெயர் மதி
இரண்டு வாரத்தில்
எனது மனைவி.
எப்பொழுதும் என் காதலி.

வணக்கம்மா என்ற
வார்த்தைகள்
அன்பு தாங்கி வந்து
அவள் காதுகளைத் தொட்டது.

அய்யா பேரு அறிவுமதியில
அளவா பாதிப் பேரு
உங்க பேரா இருக்கு
உண்மையாவே அவருல
சரி பாதியா நீங்க
சந்தோசமா வாழணும்
என்ற இம்ரானின் சொற்களால்
எதிர்பாரமல் வந்த சொந்தங்கள்
இவர்கள் என மதி
இனம்புரிந்து கொண்டாள்.

அய்யா உங்கள பத்தி
அளவில்லாம பேசுவாரு.
உங்களுக்கு காய்ச்சல்னு
உப்பு போட்டு இரண்டு நாள் வெறும்
சுடுகஞ்சி மட்டுமே குடிச்சவரு
சுலபத்துல இவர மாதிரி
ஆள பாக்குறதே
ஆச்சரியம் என்றான் சாமி.

தவமிருந்து கடவுளைக் கண்டு
வரமொன்று கேட்க வாயின்றிப்
போன பக்தன் போல்
புளங்காகிதம் அடைந்தாள்.
அள்ளி அவனை
அணைத்து முத்தமிட
எண்ணியும் முடியாதவளாய்
எத்தனித்து பாசப்
பார்வை ஒன்று
பீய்ச்சினாள்.

அதில் புதைந்திருந்த
அர்த்தங்கள் ஆயிரமாயிரம்.
அத்தனையையும் உள்வாங்கி பின்
அமைதியான அனுபவப்
பார்வை காட்டினான் காதல்.

பயணத்திற்குத் தயாரா?

போலாம் அய்யா
பொழுது விடிஞ்சதுல இருந்தே
புறப்பட்டு இருக்கோம்.

இங்கே இருந்து
இரண்டு கிலோமீட்டர் - அங்கே
புலி, சிங்கம் ஒன்றும் இருக்காது
புள்ளிமானும், காட்டு முசலும் இருக்கும்.
அங்கதான் இன்னைக்கு மூலிகை
அறுக்கணும், நீங்களும் வாங்க என்றனர்.



(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Sunday, April 19, 2009

இழந்துகொண்டிருக்கும் கனவுகள்

1.
குறைந்துபோன ஸ்பரிசங்களின் அன்பு
நலிந்துபோன விளையாட்டுகளின் குறும்பு
இவையிறுதியில் இருட்டிக் கொண்டிருக்கும்
வீட்டில் வெளிச்சமின்றிக் காத்திருக்கும்
கனங்களில் சத்தமின்றி வழியும்
கண்ணீர்த் துளிக்கு மட்டுமே
புரிந்திருக்கும் பிரிதலின் வலி

2.
காலைச் சூரியனோடு
கண்ட கனவுகளையெல்லாம்
குழைத்தெடுத்து கன்னங்களில்
பூசிக்கொண்டு பூரித்தெழுந்த
காலைதனில் பூத்தது
மீண்டும் தனிமை,
என்னைத் தவிர யாரும்
விழிக்காத வீட்டினில்

3.
பரபரப்பில்லாத வாரயிறுதியில்
சோம்பி ஓடிக்கொண்டிருக்கும்
கடிகார நிமிடங்களுக்கூடே
கதவுமணி அலற
வந்து நின்றது பிட்சா,
அதை உண்கையில் எங்கும்
அகப்படவில்லை தாயின் அன்பு

4.
அன்பு அரைகிலோவாவது
கிடைக்குமிடம் தேடியலைந்த
பொழுதில் ஆசுவாசமாய்க்
கிடைத்த நண்பர்களை
தரம் பிரிக்க நேரமில்லை,
ஒழுகும் தாடி,
மழித்த மீசை,
வாய் நிறைய புகை,
வயிறு நிறைய சாராயம்,
உடல் நிறைய பகட்டு,
என்று உலா வந்தபோது
பெற்றோர் கூறினர்
"இது எங்க உருப்புடப் போகுது?"

Friday, April 10, 2009

நட்பில் இது எந்த தளம்?

நம் நட்பை
எப்பொழுது
மௌனத்திற்கு விற்றாய்?

உன் உதடுகளுக்கும்
என் காதுகளுக்கும்
நடுவில் தடுப்புச்சுவர்
எப்பொழுது வந்தது?

எனது தனிமைக்
குளத்தில் கல்லெறிந்துவிட்டு
தளும்பாத குடமாக
திரிகிறாயே எப்படி?

உன் வெளிக்கு
உள்ளே இடி
இடிக்கிறதோ என்னவோ
நான் அறியேன்,
உன் முகமூடி மறைத்திருக்க...

மௌனக் காட்சி
அனைத்திலும் உனது
எண்ணத்தின் வாசற்
கதவுகள் திறந்து
கொள்கின்றன எனக்கு.

பிரச்சினை
ஒரு குழந்தையன்று
பாதுகாத்து சுமக்க,
அது மலம்
உடனே புறந்தள்ளி விட வேண்டும்.

என் தனிமையில்
உனது விடுகதைகள்
வலை பின்னிக் கொண்டிருக்கிறன
அதற்குள் என் சொற்கள்
சிக்கிச் சாகிறன.

கண்மூடி
மனம் திறந்தால்
அந்தகாரச் சிரிப்பொலிகளும்
மந்தமான பார்வைகளும்
புன்னாதரனாய் ஆக்குகிறன
என்னை.

என் இதயத்திலேயே
இடம் இருக்கையில்
இமையிடுக்கில் நின்று கொண்டு
இருக்கிறாயே, என்ன ஞாயம்?

அட்சய பாத்திரத்தின் உணவும்
நட்பில் உரையாடல்களும்
வற்றிவிடவும் கூடுமோ?

உனது வாய்க்குப்
பூட்டுப் போட்ட
என் கருத்து
என்ன?

உனது அமைதிக்கு
வழிவிட்ட எனது
வார்த்தை என்ன?

நம்
அமைதித் தீயில்
தீக்குளித்துச் செத்த
சொற்கள் யாவும்
சூன்யத்தில் பேய்களாக மாறி
தனிமையில் என்னை
தகிக்கிறனவே அறிவாயா?

நம் வார்த்தைகளைக்
கொன்று அதன்
குருதி குடித்து,
பௌர்ணமி நேரத்து
தங்க நிலாவும்
தீச்சிவப்பாய்
திரிகிறதே உணர்ந்தாயா?

எண்ணங்களுக்கு முகமூடியிட்டு
கண்களுக்கு கடிவாளமிட்டு
கடந்து போகிறாயே - சொல்
நட்பில் இது எந்தத் தளம்?

Thursday, April 9, 2009

கடிதம்

நான்
பிரசுரிக்கப்பட்ட கடிதம் அல்ல,
பிரசவிக்கப்பட்ட கடிதம்.

உயிரென்ற கடிதத்திற்கு
உடலென்னும் உறையிட்டபோதே
அடையாளங்களுக்குள்
அடைக்கப் பட்டுவிட்டேன்.

பால்,
பெயர்,
மொழி,
இனம்,
மதம்,
ஊர்,
மாநிலம்,
தேசம்
இவையாவும் உறையின்
இன்றியமையாத அடையாளங்கள்.

என்னை
அனுப்பிய முகவரி யாது?
யார் எனக்கு
நிரந்திர சொந்தக்காரன்?

நான்
போய்ச்சேரும் முகவரி யாது?
எது எனக்கு
நிரந்திர உறையுள்?

நான்
விசித்திரமான கடிதம்தான்,
அனுப்பப் பட்ட பிறகே
நிரப்பப் படுகிறேன்.

காலம் - மிக
கண்டிப்பான தபால்காரன்.
முகவரி அவசியமில்லாதவன்
அறிகுறி காட்டாதவன்
பிற கடிதங்களின்
முகவரி அறிமுகப் படுத்துபவன்,
முகவரிக்குள் மூழ்கிடாது
மீட்டுச் செல்பவன்,
இவனை அறிவோர் எவருமில்லை,
அவனை வெல்வோர் பிறக்கவில்லை.

பார்வையாளானாய் நான்
அதை நிரப்புபவனாக
அல்ல - நான்
கடிதங்களாலேயே
நிரப்பப் படுகிறேன்.
எழுத்துக்களால் நிரப்பப் படவில்லை
எண்ணங்களால் நிரப்பப் படுகிறேன்.

துளியானதும் மேகத்தை
பிரியும் மழையாய்
ஆவியானதும் கடலைப்
பிரியும் நீராய்
நானும் நகர்கிறேன்.

கடிதத்தின்
முன்னுரை அறியாது
பொருளுரை பயணிக்கிறது
முடிவுரை தெரியாது
அது தொடர்கிறது.

கடிதத்தை முழுதாய்
வாசித்தவர் எவருமில்லை
இருப்பினும் முத்திரை
சுமத்த காத்திருக்கிறார்கள்,
அவர்கள் முத்திரையில்
அலங்கோலப் படாமல்
பயணிக்கிறேன் நான்.

இறுதியில்
உறையை எறிந்துவிட்டு
கடிதத்தை வாசிப்பவர்க்கு
புரிந்தால் சொல்லட்டும் - என்
பயணம் எதற்கென்று?

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal