என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, May 30, 2008

என் வெளிச்சம், எனக்கு உபயோகமில்லாமல்

எதற்காக விடிகிறது வானம்?
எதற்காக அடைகிறது பொழுது?
எது எப்படி இருப்பினும்
எல்லா நாளும் எனக்கு இன்னொரு நாள்தான்.

வானம் பார்த்து
வைத்து விட்ட நாற்று
செழித்து வளர்ந்து
சேருமிடம் சென்றுவிட்டது.

பூமி பார்த்து
பெய்த மழை
வழிந்து வன்கடல்
புகுந்து மேகமாகிவிட்டது.

உயரமாய் நான்
வளர்ந்ததுதான் குற்றமோ,
தோதாக சாதகத்திலிருக்கும்
தோசம்தான் குற்றமோ
அறியவில்லை நான்.

எனது வருமானம் நம்பியே
எட்டு வைக்கும் எனது
தங்கைகள் மூவரையும்
தாங்கிப் பிடிப்பது நாந்தான்.
என் தந்தையிருந்த இடத்தை
எண்ணிரண்டு பதினாரு வருடம்
நிரப்புவதும் நாந்தான்.

என்னுடைய தேவைகள்
சுருங்கி சுருங்கி
ஒவ்வொரு மாதத்திற்குமான
அத்தியாவசியத் தேவையிலொன்று
இப்பொழுது தேவையில்லாமல்
மரித்துவிட்டது.

என்னவோ தெரியவில்லை
எரிந்து எரிந்து மெழுகாக
வெளிச்சம் கொடுத்த என்
வாழ்வில் எங்கும்
வெளிச்சமென்று எதுவும்
வந்துவிடவில்லை.

Thursday, May 29, 2008

என்று தணியும் இந்தத் தா(க்)கம்

இது,
புலனடக்கத் தவறியவர்களுக்காக
புராணத்திலிருந்து வரும் பாரம்பரிய இடம்....

இது எனது
இறுதி மடலாகவும்
இருக்கலாம்.

இது வரை நான்
எழுதிய கடிதங்களை
எந்தவித பாதிப்பும் இன்றி
பாதுகாத்து வரும் எனது
மேசைக்கு நன்றி.

வேறு யாருக்கு நான்
நன்றி சொல்ல வேண்டும்....
ம்....
என்னைப் பெற்றவள் நல்லவள்
எனில், அவளுக்குமொரு நன்றி.

ஊர் பெயர் தெரியாத
உலகத்தில் என்னையும்
உருவாக்கியது இந்த
இடம்தான்.
இரண்டு வயதாம்
நான் இங்கே கடத்தி
வரப்பட்டு விட்டபொழுது.

இருந்த இறைவன் நம்பிக்கையும்
இற்றுப் போனது,
ஏதோ ஒரு நாளில்
எவருக்கோ மெத்தைப்
பந்தியில் விரித்த
முந்தியில்.

நான் பிறந்த பொழுது
எனது தாய் பெற்ற
மகிழ்ச்சியை விட
மயங்கிய மாலையில்
நான் வயதுக்கு வந்த
நாளை இங்கே
கூடி இருந்தவர்கள்
கொண்டாடியது உண்மை.

அன்றாடங்காய்ச்சி முதல்
அரசியல்வாதி வரை
அனைவரையும் சந்தித்திருக்கிறது இன்று
அழகிழந்து கிடக்கும் எனது உடல்.
மரணம் ஒன்றும் எனக்குப்
புதிதல்ல - இங்கே
உயிர்த்தெழுந்த பலனை
ஒவ்வொருவரும் அனுபவிக்கும்
தருணமெல்லாம் நான் இறந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கும்
இந்தியாவில் அரசு அங்கீகாரம்
அளித்திருப்பது அவமானம்தான்.
கையூட்டு இருக்கும்வரை
இந்தச் சட்டத்தில்
இறக்கப் போகும் என்போல்
பெண்டிர் எத்தனையோ?!

அய்யகோ! மறந்துவிட்டேனே.
அன்றொரு நாள் எனக்குக்
காட்சிக் கொடுத்த இறைவனை - ஆம்
கட்டில் வரை வந்து
உனக்கு சம்மதமா எனக்கேட்டு
நான் இல்லையென்றதும்
வந்த வழியே திரும்பிப்போனவருக்கும்
எனது நன்றி.

Wednesday, May 28, 2008

தலைகீழாய்த் தெரியுது வானம்

வெளிச்சமில்லாத குகையில்
வெறித்தனமாய் ஓடிக்
கொண்டே இருக்கிறேன்.
விளக்குகளாய் வந்த மனதின்
விளக்கங்கள் யாவையும்
உதறி விட்டு மேலும் மேலும்
ஓடுகிறேன்.... ஓடுகிறேன்.

என்னுடன் ஓடத்
தொடங்கியவர்கள்
ஆங்காங்கே சுருண்டு விழ
அவர்களைப் பார்த்து
எள்ளி நகையாடிக் கொண்டே
எனது ஓட்டத்தைத் தொடருகிறேன்.

கால்கள் இடறுகிறது
கைகள் வட்டிக் கடக்காரனிடம்
சம்பளத் தேதியன்று
சிக்கிக் கொண்டது போல உதறுகிறது.
கனவுலகத்திலும் நிச உலகத்திலும்
கணத்திற்கொரு முறை
மாறி மாறி பயணிக்கிறது
மனதும், கொஞ்சம் அறிவும்.

வெளிச்சத்தில் விழுந்த
விட்டில் பூச்சியாய்
மீதமிருந்த தைரியத்தில்
மூளையை அடகுவைத்துவிட்டேன்.
கீழே விழுந்தவர்களையெல்லாம்
கொண்டு சேர்க்க
வந்த பாதை நோக்கிப்
பயணிக்கிறேன்.

எங்கேயோ ஒட்டிக்கொண்டு
எச்சமாயிருந்த அறிவிருந்தும்
பயணம் பாதைகளை விட்டு
பெயர்ந்தே செல்கிறது.
என்னைப் பார்த்து
எல்லோரும் பயப்படுவது
அசட்டு தைரியத்தை எனக்கு
அதிகப்படுத்துகிறது.

பெரிய ஒலி,
உறைந்தது நினைவு.
கண்விழித்துப் பார்க்கிறேன்
காக்கிச் சட்டை சரமாறியாக
என்னைக் கேள்வி கேட்கிறது
எதையோ பறிகொடுத்தாற்போல
தேம்பித் தேம்பி அழுதுகொண்டே
தவிக்கிறது சில மானுடங்கள்.

அவர்கள் கேட்ட ஒரே கேள்வி.
இல்லை இல்லை
அவர்கள் சொன்ன ஒரே தகவல்.
"குடிச்சுட்டு வாகனம் ஓட்டி என்
குடியைக் கெடுத்துட்டியடா".

திரும்பிப் பார்க்கிறேன்...
தள்ளுவண்டியில் ஒரு பெண்ணின் சடலம்.

காதலிசம்

1.
என்னருகிலிருந்து
நாட்களை நிமிடங்களாக்கிக்
கொண்டிருக்கும்
காலதேவன் நீ!

2.
கன்னத்தில் ஒட்டியிருந்த
தூசியை எடுக்க எனது
கைவிரல்கள் பட்டதும்
கண்டு கொள்ளாதவள் போல் நீயும்
கவனிக்காதவன் போல் நானும்
இருந்தாலும் இருவரின்
இதயத் துடிப்புகளும்
இரண்டு மடங்கானது உண்மை.

3.
எப்பொழுதுமே
என்னை அடித்துவிட்டு
நீதான் சினுங்குகிறாய்.

4.
உனக்காகவும் சேர்த்து
நானே காதலித்த
என் காதல்
பாதியாகி விடுமோ
எனத் தயங்குகிறேன்
நீயும் காதலிக்க ஆரம்பித்துவிட்டாயே!

5.
காலச் சுருக்கங்களின்
கலக்கங்களாகவே போகிறது
காதலியே நீ
கைகுலுக்கிப் பிரியும் பொழுது.

6.
உச்சி வெயில்
சுடவில்லையா என்கிறாய்,
நிலவின் மடியிலல்லவா இருக்கிறேன்!

7.
குளத்திலும் கல்லெறிந்து
விளையாடுகிறாய்
என் மனதில் காதலெறிந்தது போல.

8.
எவ்வளவோ
பேசியிருந்தாலும்
இரு கண்களும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்பொழுது
மவுனம் மட்டுமே நிலவுகிறது.

9.
நான் உன்னைத் தூக்க
வேண்டும் என்பதற்காகவே
எட்டாத உயரத்திலிருக்கும்
பூவைப் பறிக்கத் துடிக்கிறாய்.

10.
காதலிக்கிறேன் என்பதை என்
காதுக்குள் மட்டுமே சொல்லு,
இல்லையென்றால்
காற்றும், இந்தக் கடலும்
உன்னுடனேயே வந்துவிடப் போகிறது.

11.
காதல் படம்
பார்க்கலாமென்கிறாய்,
பேய்ப் படம்
பார்க்கலாமென்கிறேன்.
அப்பொழுதுதானே என்னை
அள்ளி அனைத்துக் கொள்ளுவாய்.

12.
ஏனோ தெரியவில்லை
என்னுடன் இருக்கும்போது மட்டும்
இடி, மின்னலுக்குப் பயப்படுகிறாய்!

13.
எத்தனையோ இரவில்
குச்சியை வைத்து
உன் வீட்டு வாசலில்
தட்டிச்சென்று இருக்கிறேன்
கூர்கா போல.

14.
உன் மடியில்
படுத்துக்கொண்டே
நட்சத்திரங்கள் எண்ண வேண்டும்
எண்ணி முடிக்கும் வரை
உன் மடியிலேயே இருக்க வேண்டும்.

15.
இன்று பௌர்ணமி
என்கிறாய்.
என்னருகில் நீ இருக்கும்
பகல் கூட எனக்கு அப்படித்தானே!

Tuesday, May 27, 2008

தேவையொரு அவசர முத்தம்

நெடுநேரப் போராட்டத்தின்
நேரக் கழிவுகளையெல்லாம்
ஒரு நொடியில்
ஓரங்கட்டி விடுகிறது
உனது ஓரு பார்வை.

வெறிச்சோடிய பாலைவனத்தின்
வற்றி விடாத கடைசிச்
சொட்டுத் தீர்த்தமாய்
சொரியும் கண்ணின்
மிரட்சியில் வற்றிவிட்டது
மீதமுள்ள கட்டுப்பாடு.

இங்கேயும் அங்கேயும்
தங்கும் உனது
பார்வை என்மீது
படும் நேரத்திற்காக
உட்கார்ந்து கொண்டே
உச்சித் தவம் செய்கிறேன்.

உன் கவனத்தை
எனது திசைக்கு
மாற்றும் எனது
முயற்சிகள் யாவும்
தோற்று விடுகிறது நீ
திடீரென திரும்பிடும் தருணம்.

அடக்க முடியாத
ஆர்வமாய் மாறும்
எனது ஆசைகளால்
எத்தனித்து உன்னைத்
தொட்டுவிட கரங்களை
துவக்குகிறேன் பயணத்தில்.

பேருந்தை விட்டு
இறங்கும் முன்
எப்படியாவது உன்
கன்னத்தைப் பிடித்து
கனிமுத்தம் இடவேண்டும்
பால்முகத்தோடு சிரிக்கும்
பச்சிளம் குழந்தையே!

Thursday, May 22, 2008

முதியோர் இல்லம்

சருகுகளாகமலேயே
உதிர்த்துவிடப்பட்ட பழுத்த இலைகள்
உதிர்ந்தாலும் அந்த மரத்திற்கே
உரமாகும் உயரிய உள்ளம்
அவர்களுக்கு உண்டு.

நம் உலகம் முழுவதும்
நடமாடிக் கொண்டிருந்த
சில ஜீவன்கள்
சிறிது காலமாக
நடைப் பிணங்களாகவே
நடை போடுகிறார்கள்.

கைரேகைகள் தேயத் தேய
கொண்டு வந்ததில்
வளர்ந்த பாண்டங்கள்
இறுதிப் பிண்டம்
கரைக்கவாவது வருவார்களா?

வழியில் காணும் சொந்தங்களிடம்
விழியில் நீரை அடக்கி
என் பிள்ளை நலமா என
விசாரிக்கும் வயது முதிர்ந்த பாசங்கள்.
கோடி கோடியாய்க்
கொட்டிக் கொடுத்தாலும்
கோவில் கோவிலாய்
ஏறி இறங்கினாலும்
எங்கு கிடைக்கும்
இப்படி ஒரு பேசும் தெய்வம்?

தோளில் தூக்கி
தெருவெல்லாம் சுமந்தவந்த
கால்கள் இன்று தடுமாறுகையில்
உயிரில்லா குச்சிகூட
உதவுகிறது, இந்த
மனசாட்சி இல்லாத
மிருகங்களுக்கு மனமில்லை.

அன்பு இல்லாததால்
அவதரித்து இருப்பினும்
அவர்கள் வசிப்பது
அன்பு இல்லம்தான்.

இன்றைய பிள்ளை
நாளைய பெற்றோர்
என மறந்த பேதைகள்
இவர்கள் பெற்ற மாந்தர்கள்.

நானும் ஒரு துப்பாக்கிதான்

பொறுமைக்கும் எல்கை உண்டாம்
பெரியோர் வாக்கு.
அந்த எல்கையையும் தாண்டி
அதிருப்தியோடு கையிலெடுத்த
துப்பாக்கியில் குண்டுகள்
தீர்ந்த பாடில்லை இன்னும்.

அழிப்பது ஒன்றே
ஆற்றலெனக் கொண்ட
இலங்கை இராணுவத்தை விட
இன்றாவது சுதந்திரம் கிடைக்காதாவென
பெறுவது ஒன்றே
பேராற்றலெனக் கொண்ட
ஈழத் தமிழர்கள் வீரர்களே.

இருப்பதற்கு வீடென்று
சுவர்களே இருப்பதில்லை நமக்கு
கூரைகளே போதும்
குடித்தனம் நடத்துவதற்கு.
ஓடி ஓடி ஓடி
ஓட ஓட விரட்டியும்
சுதந்திரம் என்பது இன்னமும்
அண்மையில்தான்.

கல்வி என்பதே
குழந்தைகளுக்கு இல்லை
கேள்வி மட்டுமே
வேள்விகளாகிப் போனது.
பால்குடி மறந்ததும்
விரல் சூம்புவதற்குப் பதில்
இங்கே தோட்டாக்களைத்தான்
எடுக்கிறது குழந்தைகள்.

இங்கே மண்ணில்
சாயும் எந்த ஈழனும்
பிணமல்ல, பெரும் விதை.
இங்கே மீதமிருக்கும்
இறுதித் தமிழனும்
சுதந்திரத்துக்காகத்தான்
மடிவான்.
என்றாவது அவன் சந்ததிகள்
சுதந்திரமாய் வாழட்டும் எனும்
சத்தியத்திற்காய்.

இரவு 1 மணியாகிவிட்டது
இதோ என் கணவன் வந்துவிட்டான்.
அவனிடம் நான் கூறப்போவது
இது ஒன்றுதான்.

குண்டுகளைத் துப்புகிற ஆயுதம்
உனது துப்பாக்கி.
துப்பாக்கிகளைப் பிடிக்கத்
துடிக்கும் பிள்ளைகளைப்
பெற்றுத் தரும் ஆயுதம் நான்.

ஆம்,
நானும் ஒரு துப்பாக்கிதான்!

Wednesday, May 21, 2008

மரித்து விடாதே

நான் முதன் முதலில்
நாவில் உச்சரித்தது உனைத்தான்
எனது பசியையும்
என் தேவைகளையும்
கேட்பதற்கு நீயே துணையானாய்

எண்ணங்களையும்
சிந்தனைகளையும்
பலநூறு மடங்கு
பரிணாமித்ததும் நீதான்.
நீ எனது தாய்த்தமிழ்.

கேட்குமிடமெங்கும்
நீக்கமற ஒலித்த
நின்குரல் இன்று
நலிவடைந்துப் போயிருக்கிறது.
மரித்துவிடும் பட்டியலில் நீயும்.

இந்த மகனுக்கும் முன்
இறப்பதற்கு உனக்கு அனுமதியில்லை.
இன்னும் இது போல உனக்கு
இருக்கும் தமிழ்ப் பிள்ளையின்
கடைசி மூச்சு உன்னுடையதும் ஆகட்டும்.

உன் மக்கள்
இசையில், தாளத்தில்,
நாடகத்தில், வேலைப்பாட்டில்
வைத்த அறிவைத் தாண்டி
அறிவியல் புக எத்தனித்ததில்
அரும்பியது உன் நலிவு.

படித்தவன் எவனும்
பாடங்களைத் தமிழில்
முழுமையாக வெளியிடவில்லை.
தமிழ்ச் சங்கங்கள் யாவும்
காதுகுடைந்து கொண்டிருக்கிறது போலும்.

பொறியியல், மருத்துவம்
காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கும்
கணினித்துறை இவையில்
தமிழ் வழி இனி புகுத்தப்பட்டாலும்
அறியத் துணிபவர் எத்தனை பேர்?

கட்டிய வீட்டுச்
சுவர் வரை ஆங்கிலம்
கூரை மட்டும் இனி
தமிழில் இட்டாலும்
பயன் பாதிதான்.

அறிவு எதுவாயினும்
அதை வழிநடத்துவது
நீயாக இல்லாததே
நீ பெற்ற முதல் தோல்வி
உனக்கான அழிவின் ஆதி.

துணிந்து எழு
ஆணிவேர் முதல்
நுனியிலை வரை
இந்நூற்றாண்டின் அறிவுத்
தேவையை உனக்குள்
ஊற்றிக்கொள்.

எதிர்கால தமிழ்க்
குழந்தைகளாவது
பட்டப் படிப்புகளை
முழுமையாக தமிழிலேயே
படிக்கட்டும், உனது ஆயுள் நீளும்.

தமிழ்நாடென்னும்
தகப்பன் இன்னொரு
மனைவியாக ஆங்கிலத்தையும்
ஏற்றுக்கொண்டான், ஆனால்
பிள்ளைகள் எங்களுக்கு நீதான் தாய்.

தமிழே மரித்துவிடாதே!

Tuesday, May 20, 2008

பூகம்பமே வா!

சாலையின் குறுக்கே
சகட்டுமேனிக்கு விரிசல்கள்,
யார் எடுத்த அலங்கோல
வகுடுகள் இவை?
இதன் ஆழத்திற்கு
இழுத்துச் செல்லப்பட்ட
உயிர்களின் எண்ணிக்கை எத்தனை?

பாடங்கள் அறிவதற்காய்
பாடசாலை சென்ற
பிஞ்சுகளைக் கொன்ற
பிரளயத்தின் நோக்கமென்ன?
கற்களுக்கிடையே கடைசி மூச்சும்
கானலாகிப் போன குழந்தையின்
பாவக் கணக்கு என்ன?

வெறும் பூமியில் கிடைக்கும்
பொருளையெல்லாம் பெரும்
பணம் கொடுத்து வாங்கி
பக்குவமாய்க் கட்டிய வீடுகள்
இன்று மீண்டும் கற்களாகவே!
அதில் சிதறியது சுவர்கள் மட்டுமல்ல
குடும்பத்தினரின் எதிர்காலமும் தான்.

பிஞ்சுகளைப் பறிகொடுத்த
பெற்றோர்களும்,
பெற்றோர்களைப் பறிகொடுத்த
பிஞ்சுகளும்,
அழுகின்றார்கள் குழந்தைகள் போலவே.

தப்பித்துப் பிழைத்த
தலைகளெல்லாம் மீதமுள்ள
தனது குடும்பத்தினரைத்
தேடித்தேடித் தொலைந்து
கொண்டேயிருக்கின்றன,
காண்கின்ற சடலம் எதுவும் தன்
குழந்தையாக இருக்கக் கூடாதென
அஞ்சுவதிலேயே நெஞ்சங்கள்
வெடித்துப் போகின்றன.

குடும்பத்தினரும் இன்றி,
வீடும் இன்றி,
தப்பித்த ஒருவன்
தன்னையும் கொல்லும்படி
பூகம்பத்தை வரச்சொல்லி
அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறான்.

Saturday, May 17, 2008

குளிரூட்டி (ஏ.சி)

அதிகாலை ஆறுமணிச்
சூரியன் கூட சூடாகவே இருக்கிறது.
காலை வேளையின்
சுகமான தேநீர் கூட
சூடாக இருப்பதனால் பிடிக்கவில்லை.

வாங்குகின்ற பத்தாயிரம்
வருமானத்தில் குளிரூட்டி
அவசியமா என்ற எனக்கும்
அவளுக்குமான சர்ச்சையிலேயே
கழிந்து போனது இந்த வாரம்

இறுதியாக இன்றைக்கு
உறுதியாக அதை வாங்கவேண்டும்
என்ற அவளது
எண்ணத்திற்கு என்னால்
தடைபோட முடியவில்லை.

இந்த ஞாயிற்றுக் கிழமைகள்
எனக்கு எப்பொழுதுமே
எனது வருமானத்தைச்
வாட்டி வதக்கும்
அக்னி நட்சத்திர
ஞாயிரின் கதிராகவே இருக்கிறது.

அழுகின்ற குழந்தையை
அதட்டிக் கொண்டே
உனக்கும் நான் படும் கஷ்டம்
புரிவதில்லை,
நான் சொல்ற பேச்சைக்
நீ கேட்கவில்லையென்றால்
பிறந்த வீட்டிற்குச் சென்றுவிடுவேன்
என்று அவள் கூறிய வார்த்தைகள்
எல்லாம் எனக்கானவை.

கடை நோக்கிய
நடையின் போது
சுடுவது சூரியன் மட்டுமல்ல
இவள் தனிக்குடித்தனமாக
இருக்கவேண்டுமென்று
முன்று வருடத்திற்கு முன்
முனங்கின வார்த்தைகளும்தான்.

தேடித் தேடி
தேவையற்ற குளிரூட்டி
வாங்கியாயிற்று,
வங்கி சேமிப்பில் பாதி
வற்றியாகிவிட்டது.
அவள் பார்த்த
அழகான பார்வையில்
சற்றே அன்பும் இருக்கிறது.

கடையை விட்டு
கிளம்பிய பொழுது
கத்திரி வெயிலின்
குரூரத்தில் காலில்
செருப்புக் கூட இல்லாமல்
குளிரூட்டியை சுமந்துவந்த
கூலித்தொழிலாளியைக்
கண்ட கனமே
தோன்றி மறைகிறது
மனைவி மேலுள்ள கோபம்.

Saturday, May 10, 2008

வெற்றியும் ஒரு போதை

மூன்றெழுத்தில் ஒரு
முழுமையான போதைப் பொருள்.

நமது வெற்றியில்
எவருடைய தோல்வியும்
இல்லாத வரைதான் அது வெற்றி
இருக்கின்ற பட்சத்தில் அது போதை.

விஞ்ஞானம் போன்றவைகள் வெற்றி
விளையாட்டு போன்றவைகள் போதை.

தனது திறமைக்கான
வெற்றியைக் கொண்டாடாமல்
மற்றொருவனின் தோல்வியின் முன்
எக்காளத்துடன் தனது
வெற்றியை கொண்டாடும்
இடமெங்கும் மரிக்கிறது மனிதம்.

தோற்றவனைத் தோள்
கொடுத்து தேற்றுவதில்தான்
வெற்றிகள் இருக்கிறது!

விளையாட்டில் வென்று
வாழ்வில் தோற்று விடாதே!

ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?

நிலவுப் பெண்ணை
காணப் போகும்
கணத்தை எண்ணி
வெட்கத்தில் சிவந்த
வானம் சிறிதே
எனைச் சிந்திக்க வைக்கிறது.

ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?

என் கால் நனைத்து
எக்காளத்துடன் பார்க்கும்
கடலலையே!
காதலர்கள் எத்தனை பேரை
பார்த்திருப்பாய்.

கழுதைக் குரலிலாவது
கவிதை பாடிய எத்தனை
காதல் கவிகளை கண்டிருப்பாய்,
காதல் செய்ய அழைத்துவந்து
காமம் செய்யும் கயவர்கள்
எத்தனை பேரைப் பார்த்திருப்பாய்,
காதல் தோல்வியில்
கடலில் விழுந்தவர்களை
கரையொதுக்க முயன்றும்
எத்தனை முறை தோற்றிருப்பாய்,
காதலை சொல்லாமலேயே
காற்றோடு கலந்த மனச்சுவடுகள்
எத்தனை கண்டிருப்பாய்,
காதலில் உனக்குத்தெரிந்த
கணங்களை எனக்கு ஓது!

இது வரை உன்னோடு
கால் நனைத்த எனக்கு
மனம் நனைக்க ஒருத்தி
எங்கே என்று கூறு.

எனது கவிதைகளில் வரும்
காதல் வரிகள் வெறும்
வரிகளாகவே போகாதிருக்க
ஒரு காதல் தோல்வியின்
வலியாவது கற்றுக் கொடு.

காதல்...

இது மட்டும் என்ன விந்தை?
இதுவல்லாத ஊரென்று
இதுவரை கண்டதில்லை நான்.

உயிரையும் கொடுக்கும் காதல்
உயிரையும் எடுக்கும் சில காதல்
மதம் துறக்கும் காதல்
பெற்றோரை மறக்கவைக்கும் காதல்
காகிதத்தையும் கவித்தாளாக்கும் காதல்
ஊசி முனை இடத்திலும்
உதட்டோடு உதடு முத்தம்
ஒத்திக் கொள்ளும் காதல்
இன்னும் எத்தனையோ காதல்
இங்கு இருந்தும் எனக்கொருத்தி
இல்லை ஏன்?

நான் எழுதும் காதல்
வரிகளின் தீவிரத்தைத்
தாங்கவல்ல பெண்
பிறக்கவில்லையா?
அல்ல எனது வரிகள்
எவளுக்கும் ஏற்றதில்லையா?

அலைகளே இதோ
என்னைப் பற்றிக்
கூறுகிறேன் கேளுங்கள்...

மணிக்கொரு முறை
காதலியை அழகென்று
நான் கூறமாட்டேன்
நீ இல்லாது எனக்கு
வாழ்வில்லை என்று
வழக்காட மாட்டேன்
என் வெற்றிக்கும் தோல்விக்கும்
என்றும் நீயே காரணமென
கூறி எனது 25 வருட
வெற்றி தோல்விகளை
பொய்யாக்க மாட்டேன்
என் பெற்றோரை விட
அவள் முக்கியமென்று
அவளிடமோ, இல்லை
அவளை விட எனது
பெற்றோரகள் முக்கியமென
வீட்டிலோ சொல்ல மாட்டேன்
கணத்திற்கொருமுறை நான் உன்னை
காதலிக்கிறேன் என்று உண்மையை
காற்றோடு கலக்க மாட்டேன்
காதலிக்கிறேன் என்று கூறி விட்டு
பின்னர் புரிந்து கொள்ளத்
துணியும் தைரியமும் எனக்கில்லை,
புரிந்து கொண்ட பெண்ணிடம்தான்
எனது காதலைக் கூறுவேன்.

மேலே சொன்ன சாதாரண
உணர்வுகளை விட
உன்னதமான இடம் என்
உள்ளத்தில் அவளுக்குண்டு

இதற்கெல்லாம் தகுதியானவளை
இன்றல்லா விட்டாலும்
என்றாவது எனக்கு
அறிமுகப் படுத்து.
நான் காதலிக்கத் தயார்!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal