உங்கள் உதடும்
என் காதும்
தூரப்பட்டதால் அதிகாமாய்த்
தொலைந்து போன
நமது உரையாடல்களை
நான் புதுப்பிக்க விரும்புகிறேன்.
நம் இடைவெளி
நிரப்பக் காகிதம்
நாடுகிறேன்.
கடிதங்கள் அதுவும்
காதல் கடிதங்களின்
அனிச்சையான
அலங்காரங்கள் எதுவுமின்றி
அங்கலாய்ப்புகளாக மாறிய
அன்பின் அலங்கோலங்களை
சற்றேனும் உங்கள் பார்வைக்கு
சரிபார்க்க உதவுமாறு எழுதுகிறேன்.
தபால் தலை
தேவைப்படாத கடிதம் இது.
தேவைப் பட்டு
விடக்கூடாதென்பதற்காகவே
விளக்குகிறேன்.
இதற்கான பதிலாக நம்
இடைவெளி குறைந்தால்
குழந்தையாவது நலப்படும்,
குறைந்தது உங்கள் பதில்
கடிதமாக இருந்தால்
கண்டிப்பாக நம் உறவு
சில காலம் சுகப்படும்.
பிறந்தவீட்டில் ஒற்றைப்
பிள்ளையாய் வளர்ந்தாலும்
என் சத்தங்களுக்கு
எப்பொழுதும் பதிலாக
மனிதர்களே பேசினார்கள்.
மணிக்கணக்காய் நான்
முணங்கினாலும் இங்கே
சுவர்கள் மட்டும் அவ்வப்போது
எதிரொலி கொடுக்கிறது.
பல நாட்கள் இரவு
பத்து மணிக்கு தொடங்கிவிடும்
உங்கள் இரவு
உண்மையில் இப்பொழுதெல்லாம்
நான் தூங்கிய பிறகே
நடக்கிறது.
ஏழு எட்டு இருக்குமா
ஏழு நாட்களில் நீங்கள்
அன்பாய்க் குழந்தையுடன் பேசிய
அதிகபட்ச வார்த்தைகள்?
குடும்பத்திற்காக உழைப்பதாய்க்
கூறி குடும்பத்தை விட்டு
விலகியே நிற்கிறீர்கள்
விருந்தாளி போலவே
வந்து செல்கிறீர்கள்.
உங்கள் பாசத்தைத் தவிற
வேறு எதையும் எதிர்பார்க்காமல்
வேதனைப் படும் உள்ளத்துடன்
நீங்கள் தாலி கட்டிய மனைவி.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Tuesday, June 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒளி! கலக்கறீங்க போல? அன்புடனிலும் வெளுத்து வாங்கறீங்க! அன்புடனிலும் இக்கவிதையைப் பார்த்தேன். நன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆமாம் அமுதா. நான் எழுதுவதை அங்கேயும் ஒரு இழையாய் இட்டு வருகிறேன். இங்கே இடுவது குழுமம் சாராதவர்களும் பார்த்துக் கொள்வதற்காக. :-)))
தவிர இப்பொழுது சிறுகதையும் எழுத ஆரம்பித்திருக்கிறென்.
Post a Comment