இது கனவா
இல்லையிது நினைவா
ஊரிருக்கும் வேளையிலும்
ஒரு நாதியில்லாமல்
போனதொரு கைக்குழந்தையென
தவிக்கவிட்டுச் சென்றீரோ?
தேவையில்லை இந்த மகனென்று
தேசம் தாண்டி பறந்தீரோ?
அழுதழுது வற்றிவிட்ட
கண்களதில் இப்பொழுது
வடிவதெலாம் தேடலொன்றே.
உடல் இங்கிருக்க
உங்கள் உயிர் நானிருக்க
நீர் எங்கே போனீரோ?
என்னுயிரே நீதானே
என்று சொன்ன உங்கள்
வார்த்தையது தீயிலிட்ட
தேன் தானோ?
எட்டுவைத்து நடக்கையிலே
எங்கேயும் விழுந்திடாது
எந்தன் விரல் பிடித்த
கை இதுதானோ
கதறி இங்கே நானழுதும்
கண்ணீர் துடைக்க வரமால் போனது.
வெள்ளமது வந்தபோதும்
தோளில் தூக்கி நடந்திட்ட
கால்களும் இதுதானோ
நான் முட்டி அழுதும்
நகராமல் நிற்பது.
காய்ச்சலென்று துவண்டபோது
கால்கடுக்க நெஞ்சில் சுமத்திக்
கிடந்தும் இந்த மார்போ
நான் தொட்டு அழுதும்
துடிக்காமல் இருப்பது.
எத்தனையோ சோகம் வந்தும்
என்னிடம் சிரித்து மட்டும்
பேசியதிந்த இதழ்தானோ
இன்று என் கண்ணீர் பட்டும்
பேசாமல் இருப்பது.
தூரமெங்கு சென்றாலும்
திரும்பிப் பார்க்குமிடமெங்கும்
தவறாமல் நின்றனையே
நான் துவண்டு விழுந்து
துடிக்கிறேனே மறுபடி
ஒருமுறை உயிர்த்திட மாட்டாயோ?
எத்தனைத் தவங்கள் செய்தேன்!
என் உலகமெங்கும்
உங்கள் சொல்தானே
என் வானமெங்கும்
உங்கள் செயல்தானே
நான் நின்று நடந்ததும்
வென்று உயர்ந்ததும்
பார்த்த உம்மை இந்தப்
பாவி மகன்
தாங்கிப் பிடிக்க
மாட்டானென மரித்துவிட்டீரோ?
நீர் போகுமிடம் வந்துசேருவேன்
நின் பாதம்தனை விடமாட்டேன்
உனக்குத் தீயிடச்சொல்லும்
ஊருக்கு எப்படிப் புரியவைப்பேன்
தற்கொலைத் தவறென்று?
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, June 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment