பெண்மேகமே நீ எங்கு போகிறாய்
என் தேசத்தை தொட்டுப் போகிறாய்
வான் வெளியிலே நீ கோலமாகிறாய்
என் சுவாசத்தை நீ உடைத்துப் பார்க்கிறாய்
அந்தத் தீண்டலில் மழை உதிர்த்துத் தூறினாய்
இரத்த நாளமதை நீ நனைத்துப் பாடினாய்.
பூ சுமந்து மலர்ந்தவேளை நீர் தெறிக்கிறாய்
நான் உதிர்ந்துபோகும் முன்பேனும் வந்து சேருவாய்!
நீ பகிர்ந்த வார்த்தையெல்லாம் சேர்த்துவைக்கிறேன்
அதில் நான் குதித்து கொஞ்சம் நீந்தப் பார்க்கிறேன்
வார்த்தையது தீருமுன்னே வந்து சேரடி
என் நெற்றிப் பொட்டில் ஒரு முத்தமேனும் இட்டு நிரப்படி.
நான் திரும்புகின்ற பக்கமெல்லாம் உந்தன் முகமடி
நான் கேட்கத்துடிக்கும் ஒலிகள் யாவும் உந்தன் குரலடி
உன் பக்கச்சூட்டில் பத்திரமாய் இருந்தேனடி, இன்று
நீயில்லா இரவு கூட எனைக் கொல்ல வருதடி.
ஏழு மாதம் என் வானமெங்கும் உந்தன் நிறமடி
நான் தின்று தீர்த்த உணவு எல்லாம் நிந்தன் சொல்லடி
நீ இல்லாமல் போனதெண்ணி வாடி நிற்கிறேன்
நீ வரும் வேளை மட்டுமெண்ணி தேதி கிழிக்கிறேன்
நான் எழுதி வைக்கும் கவிதை யாவும் எடுத்து வைக்கிறேன்
நீ வந்தவுடன் காண்பிக்க திட்டமிடுகிறேன்.
நான் கொடுத்த உயிரினை நீ வளர்த்தெடுக்கிறாய்
நாலு மாதம் தாய்வீடென தொலைந்து நிற்கிறாய்
நகம் வெட்டும் வேளையிலேயே சத்தம் போடுவாய்
ஆனால் பிள்ளை சுமக்க மட்டும் சிரித்துப் பூக்கிறாய்
நான் கொடுத்த பிள்ளையை வரமென்கிறாய்
கொடுத்து உன்னை வாட்டுகிறேனோவென தத்தளிக்கிறேன்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment