புன்னகை விற்பனைக்கு
-------------------------------
புன்னகையை அடகுவைத்துப்
பழக்கப் பட்ட மனிதர்களிடம்
பாசத்தோடு புன்னகையை விற்கிறேன்
பதிலாக வரும் புன்னகையால்
நான் லாபமடைகிறேன் - ஆனால்
நிச்சயமாக திரும்பி வராத புன்னகையால்
நஷ்டமடைவதில்லை.
உண்டியலில் தொலைகிறது உள்ளம்
-----------------------------------------------
இரு கால்களும்
இல்லாது பசிக்குப்
பிச்சையெடுக்கும் மனிதனைப்
பார்க்காது பக்கத்திலுள்ள
பசிக்காத இறைவனுக்கு
பக்தியோடு காசு கொடுக்கிறார்.
குப்பை தேசம்
-------------------
ஏனிந்தக் குப்பையை
ஏளனத்தோடு சாலையில்
போடுகிறீர் என்று கேட்பவனைப்
பார்த்து பரிகசிக்கிறது உலகம்.
எச்சில் குணம்
-------------------
எதைப் பற்றியும்
எனக்குச் சிந்தனையில்லையென்று
எச்சிலைச் சாலையில்
துப்புபவருக்குத் தெரியுமா
வெறுங்கால்களுடன் இன்னும்
வழிகள் கடக்கும் சகமனிதனைப் பற்றி?
கண்ணீர் கரைவது எப்போது?
---------------------------------------
எங்களூர் சாலைகளுக்கும்
எல்லையில்லாத தண்ணீர்ப்
போராட்டத்திற்கும் நீதியுரைப்பவர்
பத்து நாள் இங்கு வந்து
வாழ்ந்து பார்க்கட்டுமே?!
எப்போதும் துன்பம்?
---------------------------
எப்பொழுதும் எதை
எதையோ நினைத்துத்
துன்பப் படும் மனங்கள்
தன்னிடம் நிறைவு காணாதவர்கள்.
இறை மனம்
----------------
சுத்தமான இடத்திற்குப்
பெயர்வதை விட
இருக்குமிடத்தைச் சுத்தமாக்குபவர்
இறை மனம் கொண்டவர்.
ஆள்காட்டி விரல்
------------------------
பிறரைச் சாடும்முன்
உண்மையாய் ஒருமுறையாவது
உன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, June 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எல்லா வரிகளும் அருமை
அதிலும் இந்த வரிகள்
/
உண்டியலில் தொலைகிறது உள்ளம்
-----------------------------------------------
இரு கால்களும்
இல்லாது பசிக்குப்
பிச்சையெடுக்கும் மனிதனைப்
பார்க்காது பக்கத்திலுள்ள
பசிக்காத இறைவனுக்கு
பக்தியோடு காசு கொடுக்கிறார்.
/
நன்றிங்க. இருந்தாலும் பாத்திரமறிந்தே பிச்சை இட வேண்டும்.
/ஒளியவன் said...
நன்றிங்க. இருந்தாலும் பாத்திரமறிந்தே பிச்சை இட வேண்டும்./
உண்மை தான் நண்பரே
Post a Comment