நான்
பிரசுரிக்கப்பட்ட கடிதம் அல்ல,
பிரசவிக்கப்பட்ட கடிதம்.
உயிரென்ற கடிதத்திற்கு
உடலென்னும் உறையிட்டபோதே
அடையாளங்களுக்குள்
அடைக்கப் பட்டுவிட்டேன்.
பால்,
பெயர்,
மொழி,
இனம்,
மதம்,
ஊர்,
மாநிலம்,
தேசம்
இவையாவும் உறையின்
இன்றியமையாத அடையாளங்கள்.
என்னை
அனுப்பிய முகவரி யாது?
யார் எனக்கு
நிரந்திர சொந்தக்காரன்?
நான்
போய்ச்சேரும் முகவரி யாது?
எது எனக்கு
நிரந்திர உறையுள்?
நான்
விசித்திரமான கடிதம்தான்,
அனுப்பப் பட்ட பிறகே
நிரப்பப் படுகிறேன்.
காலம் - மிக
கண்டிப்பான தபால்காரன்.
முகவரி அவசியமில்லாதவன்
அறிகுறி காட்டாதவன்
பிற கடிதங்களின்
முகவரி அறிமுகப் படுத்துபவன்,
முகவரிக்குள் மூழ்கிடாது
மீட்டுச் செல்பவன்,
இவனை அறிவோர் எவருமில்லை,
அவனை வெல்வோர் பிறக்கவில்லை.
பார்வையாளானாய் நான்
அதை நிரப்புபவனாக
அல்ல - நான்
கடிதங்களாலேயே
நிரப்பப் படுகிறேன்.
எழுத்துக்களால் நிரப்பப் படவில்லை
எண்ணங்களால் நிரப்பப் படுகிறேன்.
துளியானதும் மேகத்தை
பிரியும் மழையாய்
ஆவியானதும் கடலைப்
பிரியும் நீராய்
நானும் நகர்கிறேன்.
கடிதத்தின்
முன்னுரை அறியாது
பொருளுரை பயணிக்கிறது
முடிவுரை தெரியாது
அது தொடர்கிறது.
கடிதத்தை முழுதாய்
வாசித்தவர் எவருமில்லை
இருப்பினும் முத்திரை
சுமத்த காத்திருக்கிறார்கள்,
அவர்கள் முத்திரையில்
அலங்கோலப் படாமல்
பயணிக்கிறேன் நான்.
இறுதியில்
உறையை எறிந்துவிட்டு
கடிதத்தை வாசிப்பவர்க்கு
புரிந்தால் சொல்லட்டும் - என்
பயணம் எதற்கென்று?
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
oru kaditham kavithai yezhuthiyullatho?
இல்லை, ஒரு கவிதை கடிதம் எழுதியுள்ளது.
Post a Comment