நிலவுப் பெண்ணை
காணப் போகும்
கணத்தை எண்ணி
வெட்கத்தில் சிவந்த
வானம் சிறிதே
எனைச் சிந்திக்க வைக்கிறது.
ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?
என் கால் நனைத்து
எக்காளத்துடன் பார்க்கும்
கடலலையே!
காதலர்கள் எத்தனை பேரை
பார்த்திருப்பாய்.
கழுதைக் குரலிலாவது
கவிதை பாடிய எத்தனை
காதல் கவிகளை கண்டிருப்பாய்,
காதல் செய்ய அழைத்துவந்து
காமம் செய்யும் கயவர்கள்
எத்தனை பேரைப் பார்த்திருப்பாய்,
காதல் தோல்வியில்
கடலில் விழுந்தவர்களை
கரையொதுக்க முயன்றும்
எத்தனை முறை தோற்றிருப்பாய்,
காதலை சொல்லாமலேயே
காற்றோடு கலந்த மனச்சுவடுகள்
எத்தனை கண்டிருப்பாய்,
காதலில் உனக்குத்தெரிந்த
கணங்களை எனக்கு ஓது!
இது வரை உன்னோடு
கால் நனைத்த எனக்கு
மனம் நனைக்க ஒருத்தி
எங்கே என்று கூறு.
எனது கவிதைகளில் வரும்
காதல் வரிகள் வெறும்
வரிகளாகவே போகாதிருக்க
ஒரு காதல் தோல்வியின்
வலியாவது கற்றுக் கொடு.
காதல்...
இது மட்டும் என்ன விந்தை?
இதுவல்லாத ஊரென்று
இதுவரை கண்டதில்லை நான்.
உயிரையும் கொடுக்கும் காதல்
உயிரையும் எடுக்கும் சில காதல்
மதம் துறக்கும் காதல்
பெற்றோரை மறக்கவைக்கும் காதல்
காகிதத்தையும் கவித்தாளாக்கும் காதல்
ஊசி முனை இடத்திலும்
உதட்டோடு உதடு முத்தம்
ஒத்திக் கொள்ளும் காதல்
இன்னும் எத்தனையோ காதல்
இங்கு இருந்தும் எனக்கொருத்தி
இல்லை ஏன்?
நான் எழுதும் காதல்
வரிகளின் தீவிரத்தைத்
தாங்கவல்ல பெண்
பிறக்கவில்லையா?
அல்ல எனது வரிகள்
எவளுக்கும் ஏற்றதில்லையா?
அலைகளே இதோ
என்னைப் பற்றிக்
கூறுகிறேன் கேளுங்கள்...
மணிக்கொரு முறை
காதலியை அழகென்று
நான் கூறமாட்டேன்
நீ இல்லாது எனக்கு
வாழ்வில்லை என்று
வழக்காட மாட்டேன்
என் வெற்றிக்கும் தோல்விக்கும்
என்றும் நீயே காரணமென
கூறி எனது 25 வருட
வெற்றி தோல்விகளை
பொய்யாக்க மாட்டேன்
என் பெற்றோரை விட
அவள் முக்கியமென்று
அவளிடமோ, இல்லை
அவளை விட எனது
பெற்றோரகள் முக்கியமென
வீட்டிலோ சொல்ல மாட்டேன்
கணத்திற்கொருமுறை நான் உன்னை
காதலிக்கிறேன் என்று உண்மையை
காற்றோடு கலக்க மாட்டேன்
காதலிக்கிறேன் என்று கூறி விட்டு
பின்னர் புரிந்து கொள்ளத்
துணியும் தைரியமும் எனக்கில்லை,
புரிந்து கொண்ட பெண்ணிடம்தான்
எனது காதலைக் கூறுவேன்.
மேலே சொன்ன சாதாரண
உணர்வுகளை விட
உன்னதமான இடம் என்
உள்ளத்தில் அவளுக்குண்டு
இதற்கெல்லாம் தகுதியானவளை
இன்றல்லா விட்டாலும்
என்றாவது எனக்கு
அறிமுகப் படுத்து.
நான் காதலிக்கத் தயார்!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Saturday, May 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எனது கவிதைகளில் வரும்
காதல் வரிகள் வெறும்
வரிகளாகவே போகாதிருக்க
ஒரு காதல் தோல்வியின்
வலியாவது கற்றுக் கொடு.
இந்த வரிகள்
அருமை அருமை
ஏதும் கிடைக்காத நண்பர்கள் இதை ரொம்பவும் ரசிப்பார்கள்.
அன்பின் நண்பருக்கு நன்றி.
Post a Comment