சாலையின் குறுக்கே
சகட்டுமேனிக்கு விரிசல்கள்,
யார் எடுத்த அலங்கோல
வகுடுகள் இவை?
இதன் ஆழத்திற்கு
இழுத்துச் செல்லப்பட்ட
உயிர்களின் எண்ணிக்கை எத்தனை?
பாடங்கள் அறிவதற்காய்
பாடசாலை சென்ற
பிஞ்சுகளைக் கொன்ற
பிரளயத்தின் நோக்கமென்ன?
கற்களுக்கிடையே கடைசி மூச்சும்
கானலாகிப் போன குழந்தையின்
பாவக் கணக்கு என்ன?
வெறும் பூமியில் கிடைக்கும்
பொருளையெல்லாம் பெரும்
பணம் கொடுத்து வாங்கி
பக்குவமாய்க் கட்டிய வீடுகள்
இன்று மீண்டும் கற்களாகவே!
அதில் சிதறியது சுவர்கள் மட்டுமல்ல
குடும்பத்தினரின் எதிர்காலமும் தான்.
பிஞ்சுகளைப் பறிகொடுத்த
பெற்றோர்களும்,
பெற்றோர்களைப் பறிகொடுத்த
பிஞ்சுகளும்,
அழுகின்றார்கள் குழந்தைகள் போலவே.
தப்பித்துப் பிழைத்த
தலைகளெல்லாம் மீதமுள்ள
தனது குடும்பத்தினரைத்
தேடித்தேடித் தொலைந்து
கொண்டேயிருக்கின்றன,
காண்கின்ற சடலம் எதுவும் தன்
குழந்தையாக இருக்கக் கூடாதென
அஞ்சுவதிலேயே நெஞ்சங்கள்
வெடித்துப் போகின்றன.
குடும்பத்தினரும் இன்றி,
வீடும் இன்றி,
தப்பித்த ஒருவன்
தன்னையும் கொல்லும்படி
பூகம்பத்தை வரச்சொல்லி
அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறான்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தலைப்பே அதிர்ச்சியாயிருக்கிறதே!
///குடும்பத்தினரும் இன்றி,
வீடும் இன்றி,
தப்பித்த ஒருவன்
தன்னையும் கொல்லும்படி
பூகம்பத்தை வரச்சொல்லி
அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறான்.///
இவன் ஒருவன் மரணிக்க மீண்டும் பூகப்பத்தை அழைப்பதா?
Post a Comment