அருவி
---------
விழுந்தாலும்
எழுந்து ஓடுகிறது
நம்பிக்கை.
சூரியனே!
-------------
இத்தனை ஆண்டுகள்
எரிந்தும் தீரவில்லையே
எரிபொருள்.
பூமி
-----
பிரபஞ்சத்தின்
சின்னஞ்சிறிய
சோதனைக் கூடம்.
வானம்
---------
சிந்தனைக்கு
அப்பாற்பட்ட
அற்புத இடம்.
மழை
-------
எச்சில் தெறிக்க
சத்தம் போட்டு அழுகிறது
மேகம்.
சூரியக் குடும்பம்
----------------------
யாருடைய
பையிலிருந்து விழுந்த
கோலி குண்டுகள் இவை
பிச்சைக் காரர்
-------------------
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.
மருத்துவர்
-------------
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.
நோய்
--------
உடலையும், உடனுள்ளோர்களையும்
உணர்ந்து கொள்வதற்கான
உன்னத வழி.
கனவு
-------
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.
கற்பனை
-----------
நிதர்சனங்களை
ஓரந்தள்ளினாலும்
ஒரே மகிழ்ச்சி.
பணம்
--------
கையடக்க
வயிற்றை நிரப்புவதற்கான
வாழ்க்கைப் போராட்டம்.
பூட்டு
-------
மனித குலத்தில்
முளைவிட்ட
முதல் சாபம்.
சாவி
------
சுயநலத்தின்
சின்னஞ்சிறிய
ஆதாரம்.
விஞ்ஞானம்
---------------
அழிவையும்
அணுகிக் கொண்டிருக்கும்
அற்பப் பயணம்.
குழந்தை
-----------
மதம், சாதி
மற்றுபிற திணிக்கப்பட்டதை
அறியாத பிஞ்சு.
மரணப் படுக்கை
----------------------
மறந்துவிட்ட
கடமைகளை
நியாபகப் படுத்தும் தருணம்.
விவாதம்
-----------
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.
விவாகம்
-----------
கடமைகளைத்
திணிக்க முயலும்
அன்புப் போராட்டம்.
காதல்
-------
மனங்களின் இணைப்பு
சில சமயம்
மதங்களின் உடைப்பு.
சொத்து
----------
சந்ததியை
சோம்பேறியாக்கும்
சேமிப்பு.
குடும்பம்
------------
உலகின் விருந்தாளியை
சொந்தம் கொண்டாடும்
சில உள்ளங்கள்.
கடமை
---------
நாமாக
ஏற்றுக்கொண்ட
கட்டாய வலி.
ஆடை
----------
குளிர் காக்க
வந்து மானம் காக்கவென
உருமாறிய பொருள்.
தீர்ப்பு
--------
சமுதாயத்தின்
அளவுகோல்களுக்குள்
அடைக்கப்பட்ட ஞாயம்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment