நான் முதன் முதலில்
நாவில் உச்சரித்தது உனைத்தான்
எனது பசியையும்
என் தேவைகளையும்
கேட்பதற்கு நீயே துணையானாய்
எண்ணங்களையும்
சிந்தனைகளையும்
பலநூறு மடங்கு
பரிணாமித்ததும் நீதான்.
நீ எனது தாய்த்தமிழ்.
கேட்குமிடமெங்கும்
நீக்கமற ஒலித்த
நின்குரல் இன்று
நலிவடைந்துப் போயிருக்கிறது.
மரித்துவிடும் பட்டியலில் நீயும்.
இந்த மகனுக்கும் முன்
இறப்பதற்கு உனக்கு அனுமதியில்லை.
இன்னும் இது போல உனக்கு
இருக்கும் தமிழ்ப் பிள்ளையின்
கடைசி மூச்சு உன்னுடையதும் ஆகட்டும்.
உன் மக்கள்
இசையில், தாளத்தில்,
நாடகத்தில், வேலைப்பாட்டில்
வைத்த அறிவைத் தாண்டி
அறிவியல் புக எத்தனித்ததில்
அரும்பியது உன் நலிவு.
படித்தவன் எவனும்
பாடங்களைத் தமிழில்
முழுமையாக வெளியிடவில்லை.
தமிழ்ச் சங்கங்கள் யாவும்
காதுகுடைந்து கொண்டிருக்கிறது போலும்.
பொறியியல், மருத்துவம்
காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கும்
கணினித்துறை இவையில்
தமிழ் வழி இனி புகுத்தப்பட்டாலும்
அறியத் துணிபவர் எத்தனை பேர்?
கட்டிய வீட்டுச்
சுவர் வரை ஆங்கிலம்
கூரை மட்டும் இனி
தமிழில் இட்டாலும்
பயன் பாதிதான்.
அறிவு எதுவாயினும்
அதை வழிநடத்துவது
நீயாக இல்லாததே
நீ பெற்ற முதல் தோல்வி
உனக்கான அழிவின் ஆதி.
துணிந்து எழு
ஆணிவேர் முதல்
நுனியிலை வரை
இந்நூற்றாண்டின் அறிவுத்
தேவையை உனக்குள்
ஊற்றிக்கொள்.
எதிர்கால தமிழ்க்
குழந்தைகளாவது
பட்டப் படிப்புகளை
முழுமையாக தமிழிலேயே
படிக்கட்டும், உனது ஆயுள் நீளும்.
தமிழ்நாடென்னும்
தகப்பன் இன்னொரு
மனைவியாக ஆங்கிலத்தையும்
ஏற்றுக்கொண்டான், ஆனால்
பிள்ளைகள் எங்களுக்கு நீதான் தாய்.
தமிழே மரித்துவிடாதே!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment