புத்தாண்டு என்பதென்ன?
புது வருடத்தின் தொடக்கமா? - அங்கனம்
பூமியின் முதல் வருடம் எது?
பூக்கும் மலர்கள் கொண்டாடுகிறதா அதை?
பிறகு மனிதன் கொண்டாடுவது எதற்கு?
பிறக்கின்ற வருடத்தின் சிறப்புதான் என்ன?
இதோ கூறுகிறேன் கேளுங்கள்...
தொலை தூரத்திலிருந்து வந்த
தொலைபேசி அழைப்பு கூறுகிறது
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
திடீரென தமிழோசை, காணும்
தொலைக்காட்சி எங்கும்
தொலைந்துபோன தமிழை தேடிக்கொண்டு.
முழுநீளப் புடவையில் அங்கம்
மறைத்துக் கொண்டு
மனக்க மனக்க வரும் உரையாடலைப் புரியும்
மகளிரின் தமிழ் வார்த்தைகள் இத்தனை நாள்
மறைந்து போனது எவ்வாறு? அல்லது
மறந்து போனது எவ்வாறு?
ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழை
அரிதாக பேசிக் கேட்கும்
அதிசயம் நடக்கத் தேவை புத்தாண்டு.
அறை எண் இன்னது என
அழகு தமிழில் பேசுபவர் தமிழ்
அவணியில் எத்தனை பேர்?
ஒரு இனத்தை அழிக்க போர்
ஒன்றும் தேவையில்லை
ஓயாத மழை தேவையில்லை
ஒடுக்கிவிடும் காட்டாட்சி தேவையில்லை- பின்னர்
ஒழிப்பது எங்கனம்? - ஆம்
ஒழித்துவிடு அந்த மொழியை
மொழி என்பது ஒரு அடையாளம்
மொழி என்பது ஒரு சமுதாயம்
மொழி என்பது ஒரு கலாச்சாரம்
மொழி என்பது ஒரு சம்பிரதாயம்
முழுவதும் இதை மறந்துவிட்டால்
மரித்துவிடும் தமிழ் இனம்.
மெல்ல மெல்ல செய்
மொழிக்கலப்பு
மொழியென்று மார்தட்டுபவனை
மடந்தையைப் போல் பரிகசி
மாற்று கலாச்சாரம் பழகுவர்
மருகி அழிந்துவிடும் அடையாளங்கள்.
கத்தியின்றி இரத்தமின்றி
கரைந்துவிடும் அந்த இனம்
காலச்சுவடியில் படிந்த
கதையிது கேளிர்!
கரைந்துவிட்ட ஆஸ்திரேலிய மொழியும்
கானலாகிவிட்ட அவர்களின் அடையாளங்களும் 230.
இப்படியே தமிங்கலம் பேசினால்
இருநூறு ஆண்டில் தமிழ் அழியும்
இதைத்தான் வேண்டுகிறீரா தமிழர்களே?
இல்லத்தில் கூட ஆங்கிலம் பேசிக்கொண்டு
இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் எத்தனை?
இனிய தமிழ் கல்லாத தமிழர்கள் இங்கு எத்தனை?
தமிழைப் பழித்தவனை
தாய்தடுத்தாலும் விடேன் என்ற
தமிழன் தொலைந்தது எங்கே?
தமிழிசை எங்கே?
தண்ணீருக்கும் சண்டையிடும்
தமிழனின் அவலநிலை எவ்வாறு?
பாரதியே போதும் உனது
பொய்யான சமாதியின் உறக்கம்
பொங்கி எழு, உன் சாம்பலோடு சேர்ந்து
புறையேறிப்போன தமிழுக்கு
புத்துயிர் கொடுக்க மீண்டும்
பிறந்து வா! புரட்சி பாடு!
அன்று நீ கண்ட தமிழ்
அறிஞர்கள் பலர் மடிந்தனர்
அடையாளம் இழக்கும்
அபாயத்திலிருக்கும் மீதி தமிழர்களை
அடைகாக்க வா!
அதுவரை தமிழ்ப் புத்தாண்டாவது கொண்டாடப் படட்டும்!
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Saturday, April 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment