பூமியின் பதினைந்து கோடி சதுரநிலப்
பரப்பில் எங்கிருப்பாயோ
தெரியாது - ஆனால்
தெளிவான நட்பு மட்டும்
உள்ளத்தில் என்றும்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.
இவ்வளவு நாள் பேசியது
இன்றுடன் முடியப் போகிறது.
உனக்குத் திருமணம் - இனி
நம் நட்புக்கு விவாகரத்து.
சமுதாயச் சிக்கலில்
சிதறிய நட்பில் இதுவும் ஒன்று.
ஆணும் பெண்ணும்
அன்போடு பழகுவதே
காதலில்தான் முடியும் எனக்
கதைத்த சமுதாயம் எங்கே?
அவர்கள் முகத்தில்
அறைவதாகட்டும் உன் திருமணம்.
நாம் பேசும்போதெல்லாம்
நம்மை பழித்த மக்கள்
இன்று நம் நட்பை
இனங்காணட்டும்
ஆணும், பெண்ணும் நட்புடன்
அவனியில் பழகமுடியும் என உணரட்டும்.
உனது திருமணத்தின்
உற்சாக வெள்ளத்தில்
எனக்கொரு இடமில்லாமல் போனதை
எண்ணி வருத்தப்படாதே!
மனமுவந்து நான் வாழ்த்துவது உன்
மணவறைக்கே வந்து சேரும்.
நான்கு வருட கல்லூரி
நாட்களில் பேசியதெல்லாம்
காதினுள் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது
நாம் பட்ட அவமானங்களும்
நடுநடுவே வந்து செல்கிறது.
திருமணக் கூட்டத்தில்
தொலைந்துபோன பேனாவாய்
போகட்டும் நமது பேச்சு
பாசமுள்ள மனதில் ஆழ ஒரு
குழிதோண்டி புதைத்துவிடடி
குதூகலமான நமது உரையாடல்களை.
எங்கே இருப்பாய்
எப்படி இருப்பாய்
பிள்ளைகள் எத்தனை இருக்கும்
பெயர் என்ன வைத்திருப்பாய்
மரணத்தின் ஒரு நொடிக்கு
முன்னராவது இனி சந்திப்போமா
என்று எண்ணியே
எனது இரவு இன்று
வெள்ளையாகிவிட்டது
விடியலும் வந்துவிட்டது.
நிச்சயம் என்னை மறந்திருப்பாயோ
நீ என்று மட்டும் எண்ண மாட்டேன்.
உன் கணவனுக்காவது
உண்மையான நட்பு
புரியுமெனில் ஒருமுறை
புதைந்துவிட்ட நம் கதையைக் கூறு
மரணத்திற்கு முன் ஒரு
மின்னஞ்சலாவது அனுப்பு, நலம் என்று!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Saturday, April 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment